வயிற்றுப்போக்கு
வயிற்றுக்குள் ஒரு சண்டை;
இது பங்காளச் சண்டையா?
இல்லை பதவிக்கான சண்டையா?
கல்லீரல் கல்லெறிகிறது;
கணையம் கணை எய்கிறது;
தமனி தடி எடுக்கிறது ;
பித்தநீர் சுரப்பிக்கு பித்து பிடிக்கிறது;
பெரும்பாடு படுகிறது பெருங்குடல்.
இந்த உள்நாட்டு யுத்தத்தால்
உணவை உள்வாங்க மறுக்கிறது
உணவுக்குழல்.
வெறும் பையாகிறது
இரைப்பை.
அவ்வப்போது அணுகுண்டு வெடிக்கும் சத்தம்
அடிவயிற்றை கலக்குகிறதே !
இது என்ன பாபர் நடத்தும்
பானிபட் போரா ?
இந்த அடிதடி சண்டையில்
தவிடு பொடியாகிறது தடுப்பணை.
வயிற்றினுள்
ஏதோ ஒரு விஷக்கிருமி
கிரகப்பிரவேசம் நிகழ்த்தியதாம்;
அதனை அடித்து விரட்டும் வரை ஓயாதாம்
இந்தப் போராட்டம்.