மனைவி ஊரில் இல்லை
தோசை வார்க்கிறேன்
‘வானலி’ தோசையை
சுடுகிறதோ இல்லையோ….,
என் விரலை சுட்டுவிடுகிறது !
‘எண்ணை’ - சட்னியை
தாளிக்கிறதோ இல்லையோ
என்னையும்
என் கண்ணையும்
தாளித்துவிடுகிறது !
வெங்காயம் அரிந்து முடிப்பதற்குள்
உள்ளங்கையில் சிறுசிறு ரத்தகாயம்
பெருங்காயம் போட மறந்து
சாம்பார் வைத்த அனுபவம்
சிலசமயம் சாதம் வேகாமலேயே
வடித்து நிமித்திய அவசரம்
பலசமயம் சாதத்தை குழையவிட்டு
டீவியில் முழ்கிய மும்முரம்
கொழம்பு கொதிப்பற்குள்
இறக்கி விடுவதால்
மிளகாய் வாடை அடிப்பது
மண்டையில் ஏற மறுக்கிறது
காய்கறி பொறியல்கள்
பொன்நிறமாய் மாறுவதற்குள்
அவசரமாக இறக்கியதால்
வெந்தும் வேகாமல் வெறுப்பேற்றுகிறது
என்னத்தை பெருசா
சமைச்சி கிழிச்ச…?
போடீ….,நீயும்- உன் சாப்பாடும்;
தட்டைத் தூக்கி முகத்தில்
விட்டெறிந்ததற்காகா
இப்போது வெட்கப்படுகிறேன்.
மனைவியின் கைப்பக்குவம்
அவள் இல்லாதபோதுதான்
இனிக்கிறதோ…! – என
என்னை நானே கேள்விக்கேட்டு
அவளின் வருகையை
விரைந்து எதிர்பார்க்கிறேன்!
ஓட்டல் சாப்பாடு
ஒடம்புக்கு ஒத்துக்காது
ஒரு ஒழக்கு அரிசிப்போட்டு
கஞ்சியாவது காச்சிக்குங்க.!
ஊருக்கு போகும்போது
அக்கரையோடு
சொல்லிச் சென்றவளை
நக்கலாக நான் பார்த்து
நையாண்டி செய்ததை
என் மனக்கண்
இப்போது அசைப்போடுகிறது’
அந்த நக்கலுக்கான ஊதியமாய்
அவள் சமைத்து மீதமான
நொந்துபோன கஞ்சியாச்சும்
ஒரு வேளையாவது கிடைத்தாலும்
எனக்கு அது அமிர்தமாகும் !
மனைவி என்பவள்
எவ்வளவு சவுந்தர்யமானவள்..!
அவளது உபசரிப்பு
எவ்வளவு சந்தோஷமானது..!
அவளின் அனுசரிப்பு
எவ்வளவு சவுகிர்யமானது….!
அவளது பங்களிப்பு
எவ்வளவு அதிமுக்கியமானது..!
எச்சில் தட்டில் மிச்சமிருப்பதை
நக்கிப்பார்க்கும்
அவளது சகிப்புதன்மையை
விமர்சிக்கும் அருகதை
எந்த கணவனுக்கும் கிடையாது
அப்படி இருந்தால்
அவன் நல்ல
கணவனே கிடையாது
அவள் ஊரில் இல்லாதபோது
ஊர்மேய போகாமல்
உத்தமனாய் இருப்பதே
அந்த உத்தமிக்கு
நான் செய்யும் சத்திய பிரமாணம்..