முடியும்போது சந்திப்போம்

உனக்கு கவிதை பிடிக்குமென்றாய்..
ஆழமாய் இருந்தாலும் தமிழ்க்கிணற்றுக்குள்
நான் இறங்கி சொற்களை நீராக்கி
கவிதைகளாய் பாத்தி கட்டிவைத்தேன்..
உன் இதய வரப்பு வயல் நிறைந்திருக்க...!

கட்டைவண்டிப் பயணம் பிடிக்குமென்றாய்….
ஓடாத வண்டியென்றாலும்
என்னைக் கடையாணியாக்கி
கரடுமுரடான பாதைகளிலும்
எண்ணங்களில் பூப்பாதையமைத்து
ஒயிலாட்டப்பாட்டோடு ஓட்டிவந்தேன்
உன் ஒயில் களைப்படைந்து விடக்கூடாதென்பதற்காக...!

சேற்று வயல் ஓட்டும்போது ஏர்ப்பலகை மீதேறி
வயல் சுற்றிவரப் பிடிக்குமென்றாய்...
என் நினைவுகளைக் கைகளாக்கி..
சேற்றில் நான் விழுந்தாலும் உனைத்தொடர்ந்தே ஓடிவந்தேன்
நீ விழுந்துவிடக் கூடாதென்பதற்காக...!

பேய்ந்துவரும் சாரல் மழையில்
பசுமை வயல் சுற்றிவரப் பிடிக்குமென்றாய்
சாராலாய் பெய்தாலும் அது உன்னை நனைத்துவிடக்கூடாதென்று
வேட்டியைப் போர்த்தக் கொடுத்து
அரை மனிதனாய் நான் மழையில் நனைந்தேன்...
பசுமைவயல் பரிணாமங்களை நீ ரசித்திருக்க,,,!

கிராமிய அழகில் இத்தனையும் பிடித்துப்போன நீ
காதலென்று வந்தபோது மட்டும்
வேட்டியை விட்டுவிட்டு நகர நாகரிகத்துக்கு
மாறச்சொல்லி நிபந்தனையோடு சம்மதம் என்கிறாய்....

ஜீன்சும் டி சர்ட்டுமாய் மாறத் தயார்,,,
என் உணர்வுகளோடு உயிராய்
உயிரோடு வியர்வையாய்
ஓடிக்கொண்டிருக்கும் கிராமியத்தை
உன்னால் மாற்றமுடியும் என்றால்..!

அது முடியாதென்பது எனக்குத்தெரியும்...
புரிந்துகொள் கல்லூரி வாழ் தேவதையே...

உனது நாகரீகப்பூச்சை விட
எங்கள் சாணப்பூச்சின் மகத்துவம் அதிகம்
உனது சோற்றுப்பெருமைகளை விட
எங்கள் சேற்றுப்பெருமையில் சுகம் அதிகம்..

நம் இருவராலும் மாறமுடியாதென்பது தெரியும்..
முடியும்போது நிச்சயம் சந்திப்போம்...
நீ உன் கணவனோடும் நான் என் மனைவியோடும்.!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (3-Oct-15, 10:15 pm)
பார்வை : 713

மேலே