புது நாளும் உதயம்

புது நாளும் உதயம்

அதிகாலை நேரம் அடையாறி னோரம்
நடைபழகும் நிழற்பூங்கா வில்நின் றிருந்தேன்

இதுகாறு முணராதோ ருள்ளத்து அமைதி
இதயம் முழுதும் நிறம்பிடப் பெற்றேன்.

வானத்தைக் கிழித்தெழும் பரிதியின் சுடர் - இரவின்
மோனத்தை கிழித்தெழும் புள்ளினத்தின் ஒலிகள்

ஆற்றைக் கிழித்தோடும் நீள்படகின் வரிசை- செஞ்
சேற்றைக் கிழித்தெழுந்து சிறுவிதைகள் பிரசவம்.

நிட்(ஷ்)டை கலைந்தெழுந்து இலையாட்டும் மரங்கள்- சிறு
மொட்டைக் கிழித்துத்தன் இதழ் விரிக்கும் பூக்கள்.

சோர்வைக் கிழித்துவிடும் சுகமான காற்று - மன
ஏட்டைக் கிழித்து எழும் நற்கவிதை ஊற்று..

நேற்றைக் கிழித் தின்றோர் புது நாளும் உதயம் - நற்
பேற்றைப் பெற்றுப்பின் பொலியுமென் இதயம்.

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (4-Oct-15, 9:54 am)
பார்வை : 131

மேலே