குளக்கரை
‘காஸ்டிஸம்’ என்ற இங்கிலிஷ் சொல் இந்திய இடதுசாரிகளுக்கு மிகவும் பிடித்த வசவுச் சொல். அனேகமாக எந்த இந்துவைப் பார்த்தாலும், மனதுக்குள்ளாவது, இந்தச் சொல்லால் அவரை ‘அலங்கரித்தால்’தான் அவர்களுக்கு அடுத்த இழுப்பு மூச்சு விட முடியும்.
இந்து என்று ஒருவரை குறித்துச் சொல்வதே அவர்களின் அகராதியில் எப்படி ஒரு வசவுச் சொல்லோ, அதே போல அடுத்த அபிமான வசவுச் சொல், காஸ்டீய்ஸ்ட் என்பதும். இந்து என்று தெரியும்படியான அடையாளம் கொண்டிருக்கும் ஒருவர் பிடிக்காதவராக இருந்தால் அடைமொழியாகப் பயன்படுத்தி காஸ்டிஸ்ட் ஹிந்து என்று இங்கிலீஷில் பட்டம் சூட்டுவார்கள். அவ்வளவுதான், இனி அந்த ‘இந்து’வைப் பற்றி அவர்கள் என்னவும் தெரிந்து கொள்ள வேண்டாம், அவர்களுக்குப் பொறுப்பு விட்டு விடும்.
ஆனால் அந்தச் சொல்தான் எத்தனை பெரும் ஆயுதம்? ஒரே சொல்லால் மொத்த இந்து சமுதாயத்தையும் பொது அரங்கிலும், மக்கள் மனதிலும் மதிப்பீட்டில் வீழ்த்தும் வலுவை உலக மார்க்சியக் கொழுந்துகளுக்குக் கொடுத்தவர்கள்தான் என்னவொரு ஆசான்கள்? அதுவும் இந்தியர்களின் நடுவேயே தாம் அப்படி வருணிக்கப்படுவது வெட்கமூட்டுவதான நிலை என்று கருதுமாறு ஒரு மனநிலையைக் கொணர்ந்ததில்தான் இந்திய மார்க்சியக் கொழுந்துகளுக்கு என்னவொரு உவகை? வெற்றி மமதை. அந்த வருணனைச் சொல்லைக் கொடுத்தவர்கள் யூரோப்பிய இனவெறியர்களாக இருந்தால்தான் என்ன?
மார்க்சியர்களின் எதிரிகளான இந்துக்களுக்கு யூரோப்பிய இனவெறியர் எதிரிகள். அது ஒன்று போதாதா யூரோப்பியமும், மார்க்சியமும் கூடிக் கொண்டு மகிழ? மார்க்சிய இந்தியர்கள் மனதில் யூரோப்பியர்தான் அடையாளமிழந்த உலகப் பிரஜைகள், மனிதர்கள். இந்தியரோ, அதுவும் இந்துக்களோ இன்னும் மனிதராகவே ஆகாதவர்கள்.
ஆக, அந்தப் போர்ச்சுகீஸியச் சொல் மீது அத்தனை மோகம். சும்மா சொல்லக் கூடாது, அச்சொல்லைக் கொடுத்தது அவர்களது தந்தையர் நாடில்லையா? புனித ஆவி ஆளும் நாடாக உள்ள போர்ச்சுகல், வெள்ளையர் நாடும் கூட. புனித ஆவிக் குழுக்களும் கம்யூனிஸ்டுகளும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்லுமளவு பகைமையோடு உலவிய காலம் இருந்தது, இன்று அந்த நிலைமை மாறி ஆரத் தழுவிக் கொள்ளும் நிலை வரத் துவங்கி இருக்கிறது. இரண்டுக்கும் பொதுவான வெள்ளைமை என்பதற்கு அத்தனை சக்தி இருக்கிறது போலும்.
அதுவும் யூரோப் என்ற நிலப்பகுதியோ உலகிலேயே மிகக் கறாரான முற்போக்கும், உன்னதமான பகுத்தறிவும், கோடி சூரியப் பிரகாசம் கொண்ட அறிவு ஒளியும் கூடிய பரப்பு வேறு. அங்கு அந்தச் சொல் வேர் கொண்டு அறிவுத் திலகங்களான வெள்ளையரால் இந்தியர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. பிறகு அந்தச் சொல் மீது மோகம் பிறக்காமல் இருந்தால் அதல்லவா பிழையாக இருக்கும்.
ஆனால், போர்ச்சுகீஸியர் என்னவோ இந்தச் சொல்லைப் பற்றி ஒரு குற்ற உணர்வும் இல்லாமல்தான் இன்றளவும் வாழ்கிறார்கள். தவிர, அங்கு எத்தனை காஸ்டிசம் இன்னும் இருக்கிறது என்று தெரியவில்லை. அங்கு இரண்டு பிரிவுகள் அல்லது மூன்று வகுப்புகள்தான் இருந்தது போலத் தெரிகிறது.
இந்தக் கட்டுரையில் போர்ச்சுகலில் இந்தப் பிரிவுகள் இன்னமுமே தொடர்கின்றன என்பதாகச் சொல்லப்படுகிறது. சமூகத்தில் பிறப்பு வகுப்பிலிருந்து முன்னேற்றம் என்பது அன்றும் இன்றும் கடினமானது என்றும் தெரிகிறது. போர்ச்சுகலின் காலனிகளில் நிலைமை வேறு விதமாக காஸ்டிஸம் தொடர்கிறது.
கீழே உள்ள சுட்டியில் கிட்டும் திரைப்பட விமர்சனம், போர்ச்சுகீஸியக் காலனியாக வெகுகாலம் இருந்த பிராஸீல் நாட்டுப் படம் ஒன்றைப் பற்றியது. ப்ராஸீல் முழு யூரோப்பிய நாடில்லைதான், ஆனால் ஆட்சியில் உள்ளது யூரோப்பியம்தான்.
அதாவது போர்ச்சுகீஸியப் பண்பாடுதான். ப்ராஸீலில், முழு வெள்ளையரல்லாதவர்களான கலப்பினத்தவர் காஸ்டா எனறு அறியப்படுகிறாராம். மாறாக Chaste என்ற சொல் தூய வெள்ளையரைக் குறிக்கப் பயன்படுவது என்று தெரிகிறது. ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம். ஒருவரைக் குறிக்கப் பயன்படும் அடையாளப் பெயரில் அந்த ‘h’ என்ற எழுத்து இல்லாது போனால் அதுதான் எத்தனை பெரிய நஷ்டத்தைக் கொணரும்? யார் சொன்னார், பெயர்களுக்கு வலுவில்லை என்று? அமெரிக்காவுக்கு மேக நோயைக் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமான பங்கு வகித்த வெள்ளையரை chaste என்ற சொல்லைக் கொண்டு இன அடையாளப்படுத்தியவருக்கு அங்கதத்தில் நல்ல பயிற்சி இருக்க வேண்டும்.
இந்த பிராஸீல் நாட்டில் இருந்த, இருக்கிற ’காஸ்டீயிஸ’த்தைப் பற்றிய ஒரு சமீபத்திய திரைப்படம் பிராஸீலிய இயக்குநர் ஒருவரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆன்னா முலயேர்ட் என்னும் பெண் இயக்குநரின் நான்காவது படம் இது. படத்தைப் பற்றிய ஒரு அமெரிக்க விமர்சகரின் விமர்சனம் இந்தச் சுட்டியில் கிட்டுவது. இவருக்கு எத்தனை தூரம் பிராஸீல் பற்றித் தெரியும் என்ற கேள்விக்கு அவர் பதில்,அவருடைய முன்னாள் ’பாய் ஃப்ரெண்ட்’ ஒரு பிராஸீலியர், அவர் வளர்ந்த வீட்டுக்கு இந்த விமர்சகர் சில கோடை மாதங்களுக்குப் போய்த் தங்கி இருக்கிறார், அந்த வீட்டில் பல பத்தாண்டுகளாக வேலை செய்து வந்த ஒரு வேலைக்கார அம்மாளின் வாழ்நிலை பற்றி இவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அவை போதுமா என்று மட்டும் கேட்காதீர்கள். மேற்கில் எதைப் பற்றி எழுதவும் சுமாரான பரிச்சயம் இருந்தால் போதும் என்று தெரிகிறது.
தமிழகத்து முற்போக்கு எழுத்தாளர்கள் இதில் மிகத் தேர்ந்தவர்கள். இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா என்று சில நாடுகளுக்கு அங்குள்ள தமிழர்களின் அமைப்புகள் கொடுக்கும் ஏதோ ஒரு பரிசை வாங்கப் போவார்கள், அங்கு சப்வே, ட்ராம், பஸ் என்று மூன்று நாள் பயணத்தில் அந்த நாடுகளின் பண்பாடு, சமூக அமைப்பு, இன/மத/பொருளாதாரப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் உடனே இனம் கண்டு விடுவார்கள். ஊர் திரும்பியதும் புத்தகம் புத்தகமாக எழுதுவார்கள். ஏதோ அந்நாடுகளில் ஒரு பத்து வருடம் தங்கி ஆராய்ச்சி செய்தவர்கள் எழுதுவது போல அப்படி ஒரு ’புலமை’ இருக்கும். அவர்களுக்கே உரிய ‘மேதைப் பார்வையும் இப்புத்தகங்களில் கிட்டும். இதே முறைமையில் மேற்படி அமெரிக்க விமர்சகர் எழுதுகிறாரா என்று தெரியவில்லை. யாராவது ப்ராஸீலியரைத்தான் கேட்க வேண்டும்.
‘இரண்டாவது அம்மா’ (The Second Mom’) என்னும் இந்தப் படம் நம் ஊர்க் கதை போலத் தெரிந்தால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும். வீட்டோடு தங்கி இருக்கும் வேலைக்காரியாக வாழும் ஒரு பெண் பற்றிய கதை இப்படத்தின் கதை. அந்த வீட்டின் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகும் இரண்டாம் தாய் போல இருந்து வளர்த்த தனக்கு அவர்கள் மீது உரிமை இருப்பதாகவே பாவிக்கிறார்.
இவருடைய குழந்தை தொலைவில் உள்ள சிற்றூரில் இவருடைய குடும்பத்தாரிடம் தாய் முகமறியாது வளர்கிறவள், பள்ளிப் படிப்பு முடிந்ததும், நகருக்கு வந்து அம்மாவோடு வாழ முற்படுகிறாள். அம்மாவோடு இருந்து கொண்டு கல்லூரிக்குப் போய் கட்டிட நிர்மாணத் துறையில் பட்டம் வாங்க முடிவெடுக்கிறாள். இந்தப் பெண்ணின் வருகை எல்லாருடைய வாழ்வையும் எப்படி மாற்றுகிறது என்று நேரடியான அரசியல் பிரச்சாரமோ, கருத்தியல் விமர்சனமோ ஊடுருவாமல் எப்படி இந்த இயக்குநர் கதையை நகர்த்தி இருக்கிறார் என்று விமர்சகர் மிக மகிழ்ந்து மெச்சுகிறார்.
அட, இன்னும் ஓரிரு வருடங்களில் தமிழிலோ, இந்தியிலோ இந்தப் படத்தைப் பார்க்க முடியுமே, இப்போது என்ன அவசரம் என்று சொல்லாதீர்கள். ஒரு தடவை இதைப் படித்துத்தான் பாருங்களேன்?
___________________________________________________
நன்றி: சொல்வனம் பதிப்புக் குழு On September 20, 2015

