உறவுகள் மேம்பட
இரண்டு சம்பவங்கள் சமீபத்தில் சிந்திக்க வைத்தன.அப்படி ஒன்றும் அபூர்வமானவையல்ல. நம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிறு சிறு தினப்படி நிகழ்ச்சிகள்தாம். ஒரு குடும்பத்தில் மூத்த உறுப்பினர் ஒருவர், இளையவர் ஒருவர். அனைவரும் அவரவர் வேலைக்கு செல்ல வேண்டி பம்பரமாக சுழலும் காலைப்பொழுது.
இருவருக்கும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உண்டு. காலையில் சமையல், மற்ற வேலை என்று ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியம். வேலைகளைக் குறிப்பாக பங்கு போட்டுக்கொள்ளாமல் அவரவர் ஒரு லயத்தில் செய்து கொண்டிருந்தனர். இளையவருக்கு காலை 7 மணிக்கு உடற்பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டும். மூத்தவர் அதற்கு முன்னாலேயே தன் உடற்பயிற்சிக்கு சென்று விட்டிருந்தார். அவர் திரும்பும் வரையில் இளையவர் வீட்டு வேலைகளைக் கவனித்தார். மூத்தவர் திரும்பியதும் இயல்பாக வேலைகள் கைமாறி தொடர்ந்தன….
பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் ஒரு உள்ளார்த்தமான புரிந்துணர்வுடன் – ஒரு லயத்துடன் அமைதியாகஅங்கே வேலைகள் நிறைவேறிய வண்ணம் இருந்தன. உறவுகளில் ஆழம் இல்லாமல் இருந்தால் இதே சந்தர்ப்பத்தில் – சாதாரணமான விஷயமாக இருந்தாலும் புயல் சூழ வாய்ப்புண்டு.
அதேபோல் இன்னொரு சூழ்நிலையில், ஒரு குடும்பம் ஊரிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தனர்.மனைவிடம்தான் வீட்டு சாவியிருந்தது. ஆனால் பாவம், அவர் அதை எங்கோ தொலைத்து விட்டிருந்தார். குடும்பமே வெளியில்; கூட இன்னும் உறவினர்கள் வேறு. மனைவி சங்கடமாக கையைப் பிசைந்தார். இந்த சந்தர்ப்பத்தில் சாதாரணமாக கணவரிடமிருந்து ஒரு எரிமலையே வெடிக்கும். ஆனால் இந்த கணவர் ஒரு நிமிடம் அயர்ந்தாலும், பின்னர் நிதானமாக, “சாவியில்லையா? சரி விடு… எனக்கு ஒரு பூட்டு திறப்பவனைத்தெரியும்.என் தொழிலில் இதெல்லாம் ஒரு செளகரியம்…. அவனை அழைத்து வருகிறேன்…. ” என்று வேடிக்கையாக சொல்லிவிட்டு சங்கடமான சூழ்நிலையைச் சமாளித்தார்.
கணவன் – மனைவி; மாமியார் -மருமகள்; இப்படி பல மென்மையான உறவுகளில் இந்த புரிந்துணர்வும்,எதிர்மறை உணர்வுகள் பொங்கி வரும்போது ஒரு நகைச்சுவையுணர்வோடு சமாளித்தலும் மிக அவசியம்.
மூன்று இளையத் தலைமுறை பெண்களின் வித்தியாசமான அனுபவங்களைச் சமீபத்தில் காண நேர்ந்தது. மூவரும் சில வருடங்கள் முன்பு திருமணம் ஆனவர்கள். கிட்டதட்ட சம வயது. மூவருமே நன்கு படித்தவர்கள்.நல்ல வேலையில் இருப்பவர்கள். இளைய தலைமுறையினருக்கே உரித்தான முறையில் தங்களுக்கென்று கொள்கைகளும் விருப்பு வெறுப்புகளும் உடையவ்ர்கள்.
முன் காலத்தில் பெண்கள் வெகு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவார்கள்.(அந்த காலத்தில் பெரும்பாலும் திருமணங்கள் செய்து வைக்கப்படும்; செய்து கொள்ளப்படுவதில்லை. இதில்தான்எத்தனை வித்தியாசம்?!) தங்களுக்கென்று இன்னும் ஆழமாக கருத்து ஏதும் உருவாகாத நிலையில் திருமணம் செய்துவைக்கப்படும்போது புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலையில் புகும்போது சட்டென்று அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள் அந்த தலைமுறை பெண்கள்.
ஆனால் இன்று அப்படியில்லை. தங்களுக்கென்று கருத்துக்கள் ஆழமாக பதிந்த நிலையில் கணவர், புகுந்தவீடு என்று புதிய உறவுகள் வரும்போது சட்டென்று தங்கள் கருத்துக்களையும் பழக்க வழக்கங்களையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை – மாறிய சமூக சூழ்னிலையில். இவர்களின் தாய்மார்களோ பழைய தலைமுறையினரைச் சேர்ந்தவர்கள். ” என் கணவருடன் சாதாரணமாக வாக்குவாதம் செய்தாலே என் தாய் அதிர்ந்து போகிறார்.
‘என்ன இருந்தாலும் அவருக்கு என்ன பிடிக்கும் என்பது முக்கியம் இல்லையா என்கிறார், அம்மா. அவரைப் பொறுத்தவரையில் என் அப்பா சொல்வதற்கு எதிர் பேச்சே கிடையாது என்று இருந்தவர். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. எனக்கென்று கருத்துக்கள் உண்டு. நான் பிறர் கருத்தை மதிப்பது போல் என் கணவரும் மற்றவர்களும் என் கருத்துக்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இதில் என்ன தவறு?” என்று ஒரு பெண் கேட்கிறார்.
பொருளாதார ரீதியில் சுயமாக இயங்கும் இந்த மூன்று பெண்களும் மூன்று விதத்தில் தங்கள் புதியவாழ்க்கையின் எதிர்பார்த்தல்களை சமாளிக்கிறார்கள். ஒருவர் குழந்தைப் பிறந்தவுடன் தன் வேலையைவிட்டுவிட்டார். குழந்தயைப் பார்த்துக்கொள்வதற்காக. மாமியார் குழந்தையைப் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் குழந்தையை வளர்க்கும் முறையில் கருத்து வித்தியாசங்கள் தலையிடுவதால் தன் குழந்தையைத் தான் விருப்ப்படி வளர்க்க, முழு நேர தாயாக இருக்க இளைய தலைமுறை முடிவு செய்துள்ளார். ஆனால் அதே சமயம் வேலையில் நிறைய சாதிக்க முடியாமல் இப்படி வீட்டில் அடைபட்டு இருக்க வேண்டியிருக்கிறதே என்று அவ்வ்வப்போது ஒரு சுய பச்சாதாபத்தில் மூழ்கிவிடுகிறார்.
இன்னொரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள். ஆனால் தன் வேலையை விடவில்லை. குழந்தைக் காப்பகத்தில் குழந்தைகளை விட்டு செல்கிறார். ஆனால் இது இவருக்கு பிடிக்கவில்லை. வேலையை விடவும் மனதில்லை.அரசு உத்தியோகம் என்பதால் அடிக்கடி விடுப்பு எடுக்கிறார். இது இவரது வேலையில் பதவி முன்னேற்றத்தை பாதிக்கிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக வாழ்ந்து கொண்டுள்ளார்.
மூன்றாமவர் வேலையை விடவும் தயாராக இல்லை. குழந்தையைக் காப்பகத்தில் விடவும் தயாராக இல்லை. பின்னர்? தற்போதைக்கு குழந்தையே வேண்டாம் என்று இருக்கிறார்.
மூவருக்கும் ஒரே பிரச்சனைதான். ஒன்று குழந்தையை யார் பார்த்துக்கொள்வதென்பது. இன்னொன்று, வீட்டுவேலைகளில் கணவரும் பங்கெடுக்க வேண்டுமென்பது. வீட்டிலிருக்கும் பெண்களாகட்டும் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் பெண்களாகட்டும் குழந்தையும் வீட்டு வேலையிலும் கணவர் ஈடு கொடுக்க வேண்டும் என்று மிகவும் எதிர்பார்க்கின்றனர்.ஆண்களுக்கு நிகராக நாங்களும் வெளியில் சாதிக்கவில்லையா? குடும்பம் என்பது இருவரும் சேர்ந்து உழைப்பதாக இருக்க வேண்டாமா என்பது இந்த பெண்களின் வாதம். இந்திய சமூக சூழ்நிலையில் ஓரளவு இந்த நிலை மாறிவருகிறது என்றாலும் பல சமயம் சிறுசிறு மனபேதங்கள் பெரிதாவதும்இந்த வீட்டு வேலைப் பங்கீட்டுப் பிரச்சனாகவும் இருக்கிறது.
அடிப்படையில் ஆண் பெண் பேதமில்லாமல் அனைவருமே வெளியுலகத்தில் சாதிக்கும்போது வீட்டு நிர்வாகம் தங்களைக் கட்டிப்போடுகிறதே என்ற அலுப்பு பல பெண்களின் மனதில் படிகிறது. இப்படி சிறு விஷயங்களில் ஆரம்பிக்கும் சச்சரவுகள் நாட்க்கணக்கில் மனதில் குமுறும்போது மற்ற விஷயங்களில் ஏற்படும் கருத்து வித்தியாசங்களும் சேர்ந்து வாழ்க்கையில் அவ்வப்போது அபஸ்வரம் தட்டுகிறது.
இந்த மாதிரி சமயங்களை எவ்வாறு அணுகிறார்கள் என்பதில் ஒரு திருமணம் நிலைப்பதும் ஒடிவதும் இருக்கிறது. விட்டுக் கொடுக்கும் சுபாவம் வேண்டும் என்று பழைய தலைமுறை சொல்வதை இவர்கள் கண்மூடி ஏற்க தயாராக இல்லை. அது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும் என்பதுஇவர்களின் நியாயமான வாதம்.
இப்படி அபிப்பிராய பேதங்கள் வரும் ஒவ்வொரு சமயமும் இன்றைய இளைய தலைமுறையினர் சிலரிடம் உடனேயே விவாகரத்து என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. இதுதான் ஆபத்தான எண்ணம். இன்று வெகு எளிதாக இந்த வார்த்தைப் பலரிடம் புழங்குவதைக் கவனித்துள்ளேன். வெறும் வார்த்தையில் என்ன இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் வார்த்தைகள்தாம் எண்ணங்களை வலுப்படுத்துகிறது. வலுபட்ட எண்ணங்கள் செயலாகிறது என்பது பல மன உள ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இன்று விவாகரத்துகள் கூடுவதற்கு இந்த எண்ண ஓட்டங்களும் காரணம். மாறி வரும் சமூகசிந்தனையில் சின்னச் சின்ன வார்த்தைவிவாதங்கள் காரணமாக திருமண முறிவு என்பது சகஜமாகிப்போன ஒன்றாகிவிட்டதால் இந்த வார்த்தைப் பிரயோகத்தை மிகச் சாதாரண காரணங்களுக்காக உபயோகிப்பதைத்தவிர்க்க வேண்டும் என்று பலருக்கு தோன்றுவது கூட இல்லை.
பிரச்சனை என்று வரும்போது அதை சமாளிப்பது எப்படி என்பதுதான் முக்கியம். எப்படி தப்புவது என்பதல்ல. அது கோழைத்தனம். மேலே கூறிய பெண்களில் ஒருவர் குறிப்பிட்டார். ” என் பெற்றோர், மற்றும் உடன்பிறப்புகளை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்களுடனும் அபிப்பிராய பேதங்கள் வருகின்றன.அதற்காக அவர்கள் உறவு அற்று போகிறோமா? அதேபோல்தான் புதிய உறவுகளும்.” என்று இவர் கூறுவதில் விவேகம் உள்ளது.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். மற்றவருக்கு என்ன தேவை; என்ன விருப்பம் என்று உள்ளார்த்தமாக புரிந்து செயல்படுவதென்பது சில சமயம் நமக்கு சட்டென்று வருவதில்லை. நான் ஏன் தாழ்ந்து போக வேண்டும் என்ற ஒரு உணர்வு நம் அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
நெருங்கிய உறவுகளுக்குள் உயர்வு தாழ்வுக்கு இடமில்லை. இதை உணர்ந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்த மாதிரிதான். முடிந்தவரை ஒருவரையொருவர் காயப்படுத்தாமல் உறவுகளைப் பலப்படுத்த முயலுவது முக்கியம்.
முழுவதுமாக இது சாத்தியமில்லைதான். இருந்தால் அனைவரும் தேவதைகளாக அல்லவோ இருப்போம்? ஆனால் முயல்வது என்பதே ஒரு ஆக்க பூர்வமான எண்ணம்தான்.
ஜப்பானில் 18 வயதிலிருந்து 70 வயது வரை உள்ள பெண்களிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் வாழ்க்கையில் திருமணம் அல்லது குடும்பம் என்கிற பிணைப்பு தேவையில்லை என்று நினைக்கின்றவர்களின் எண்ணிக்கைக் கடந்த சில வருடங்களில் 31 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு காண்பித்துள்ளது. ஒரு திருமண பந்தம் சரிபடவில்லையென்றால் விவாகரத்துதான் வழி என்று நினைக்கும் பெண்களின் எண்ணிக்கை 89 சதவிகிதம்.இன்னொரு வாக்கெடுப்பில், 30 வயது வரை தனிமையாகவே திருமணம் ஆகாமல் வாழும் தங்கள் மகள் அல்லது மகன் கூட வசிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை 85 சதவிகிதம். இவையெல்லாம் ஜப்பானில்.
சமீபத்தில் ஒரு பிரபலமான பெண்மணி தான் விவாகரத்து செய்ய நேர்ந்த காரணத்தை விவரமாக விவரித்து எழுதியிருந்தார். அவரது தனித்தன்மையை மதிக்காத, ஒரு அடிப்படை புரிந்துணர்வு இல்லாத மனிதராக சித்தரிக்கப்பட்ட அந்த கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றது சரிதான் என்று தோன்றிற்று அவரது கதையைப் படிக்கும்போது. அவர் மனம் தளராமல் தன் சொந்த முயற்சியால் சமூகத்தில் ஒரு உயர்ந்த பதவியை அடைந்ததோடல்லாமல், தனியாகவே தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியுள்ளார். டில்லியில் கடந்த வருடம் இரு பிரபல பெண்மணிகள் விவாகரத்துக்கு பிறகு தாங்கள் வளர்த்து வரும் குழந்தைகளின் பண விவகாரங்களுக்கு தாங்கள்தாம் முறையான பாதுகாவலர், குழந்தைகளின் தந்தையல்ல என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போட்டு வென்றார்கள்.
இந்த பெண்கள் அவரவர் துறையில் புகழ் பெற்றவர்கள். திருமணம் என்கிற பந்தத்திலிருந்து வெளியே வந்து தங்களின் தனித்துவத்தை நிலை நாட்டியவர்கள்.
சிங்கப்பூரில் இருக்கும் என் சினேகிதி ஒருவர் பொதுவாக வாழ்க்கையில் வெற்றி என்று கருதும் பணம், பதவி, என்று எல்லாமுமாமாக வாழ்பவர்.இருந்தாலும் வாழ்க்கையைத் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக வாழ்பவர். திருமணம் ஆகவில்லை. ” என் வாழ்க்கை அமைதியாக நன்றாகவே இருக்கிறது. என் கூட பிறந்தவர்கள் இருக்கிறார்கள். பிரிய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஏன் திருமணம் ஒன்று செய்து கொண்டு தேவையில்லாத கட்டுபாட்டுக்குள் திணித்துகொள்ள வேண்டும்?” என்று கேட்கிறார் இவர்.
குடும்பம் என்பது ஒரு கலாசாலை என்று இருந்த மரபு இன்று தேய்ந்து வருகிறது என்பதற்கான அடையாளங்களோ இவை? அடிப்படையில் தான், தனது சுகம் என்று பாராட்டும் சுபாவம் மனிதனுக்கு உள்ளது. ஆனால் தன் சுகம் நீக்கி அடுத்தவர் நலம் பேணும் எண்ணம் தோன்றுவது குடும்பம் என்ற பிணைப்பில்தான். தனக்காக வாழ்வது மாறி தன் குழந்தைகள், கணவன்/மனைவி, கூட பிறந்தவர்கள் என்று உறவுகள் பெருகும்போது தன்னைத் தவிர மற்றவர்களிடம் பாசம் மற்றும் அக்கறை போன்ற உணர்வுகள் பெருகுகின்றன. குடும்பம் என்று ஆரம்பிக்கும் இந்த உணர்வுகள்தாம் பின்னர் விரிந்து சமூகத்தில் மற்றவர்களிடமும் பரவுகிறது.
அன்பு என்பதை அடையாளம் காண வைக்கும் அரிச்சுவடி வகுப்பு குடும்பம் என்பது என் கருத்து. ஆனால் இன்று இந்த மாதிரி பந்தங்களே தேவையில்லை என்ற நினைப்பு பலரிடம் மேலோங்குகிறது. ஒரு மனிதனின் தனித்தன்மையைக் குடும்பம் என்ற அமைப்பு அழித்துவிடுகிறது என்பது இவர்களின் வாதம். ஒரு சில குடும்பங்களில் இது உண்மைதான். எத்தனையோ ஆக்க பூர்வமான எண்ணங்கள் குடும்பத்தில் சக்தி வாய்ந்த உறுப்பினர்கள் போடப்படும் கட்டுபாடுகளால் பிரகாசிக்க முடியாமல் போய் விடுவது கொடுமைதான். ஆனால் அதே போல் எத்தனையோ குடும்பங்களில் குடும்பத்தினரின் திறமைகள், அவரவர் தனித்தன்மை மதிக்கப்படுவதால்; பரஸ்பரம் அன்பு இழையோடுவதால் பலர் தங்கள் வாழ்க்கையில் சாதனைகள் புரிந்துள்ளனர். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் ஆர்வமும் இவர்கள் வெற்றிக்கு பின்னே புதைந்துள்ளன.
குடும்பத்தில் அமைதி நிலவுவதும், தனிமனித ஆர்வங்கள் மற்றும் திறமைகள் பிரகாசிப்பதும் அவரவர் குணாதிசியங்களைப் பொறுத்து இருக்கிறது.
தனி நபர்களின் மனக் கோணல்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு குடும்பம் என்ற அமைப்பை ஏன் குறைகூற வேண்டும்?ஒருவர் மற்றவரிடம் காட்டும் அன்பினால் தன் விருப்பங்களை மாற்றிகொள்வதைத் தனி மனிதனின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்ற வாதத்தை முழுவதும் ஒத்துக்கொள்ளமுடியாது. யார் எதை விட்டுக்கொடுக்கிறார்கள்; அதன் அடிப்படை பலன் பொதுவாக எவ்வளவுதூரம் நன்மையளிக்கும் என்று இதன் லாப நஷ்டங்களின் பாதிப்பு என்ன என்று தனி தனியாக அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப ஆராய வேண்டிய விஷயம் இது. மொத்தமாக எதையும் அல்லது யாரையும் குறை கூற முடியாது. மன வித்தியாசங்கள் என்று வரும்போது விட்டு கொடுத்தல் அல்லது தன் விருப்படி இருத்தல் இரண்டுமே இந்த “பொதுவான நன்மை”(“For the Greater Good”) என்ற அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் சச்சரவுக்கு இடமில்லை.
அலுவலகத்தில் ஒரு குழுவாக வேலை செய்யும்போதும் வித்தியாசங்கள் இருக்கதான் செய்யும். ஆனால் செயல்பாட்டின் வெற்றி அந்த குழு உறுப்பினரின் மனோபாவங்களில் உள்ளது. குடும்ப அமைப்பின் வெற்றியும் இதுபோல்தான். இந்த அமைப்பை ஒதுக்கி மனிதன் தனி தனி தீவாக வாழ ஆரம்பித்தால் நாம் கற்காலத்தை நோக்கி நடை போடுவதாக ஆகாதா?
மேலே குறிப்பிட்ட என் சினேகிதி வருடத்தில் ஒரு முறை தாய்லாந்தில் இருக்கும் ஒரு புத்த ஆசிரமத்திற்கு சென்று ஒரு மாதம் தங்கி வருவார். “சந்நியாசினி போல் இந்த ஒரு மாதம் வாழ்வதில் எனக்கு ஒரு மன அமைதி கிடைக்கிறது.” என்கிறார் இவர். மொத்தத்தில் அனைவரும் தேடுவது மன அமைதி மற்றும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு. குடும்பம் என்கிற அமைப்பு இதை நிறைவேற்றுகிறதா இல்லையா என்பது அவரவர் தனிபட்ட சூழ்நிலை மற்றும் மனப்பக்குவத்தைப் பொறுத்தது.