காதல் விதவைகள்
காதல் விதவைகள்
*******************************************
சங்கத்தமிழ் வளர்த்த தென்பாண்டி நாட்டானாம்
சிங்கத்தின் கம்பீரம் அவன் பயிலும் நடைதன்னில்
ஆங்கிலம் தமிழ் கலந்த பேச்சு உதிர்க்கும் தன்மையனாம்
அங்கமதும் தங்கமாம் பங்கமில்லா ஆண் மகனாம் !
குதி போடும் முன்னழகில் துதி பாடும் பின் அகங்கள்
பாதி உடல் மீதி உடை சந்தித்த உடலழகு
அதிகமே எல்லாமும் அயனவன் படைப்பதனில்
பொதிகையின் தென்றலாய் உலா வரும் பெண் மகளாம் !
ஏடுகள் மிதந்து எழுந்த பொற்றாமரை குளத்தருகே
கோடாய் வகிடெடுத்து தலை வாரிப் பூச்சூடி
ஆடுகிற லோலாக்கில் பல்லாக்காய் பவனிவரும்
ஈடில்லா பதுமைதனை அவன் காண நேர்ந்ததுவே !
பார்வைகள் பரிமாற நாற்குணங்கள் மரமேற
அருவமாய் பதுங்கிய உணர்ச்சிகள் உருவெடுக்க
ஆர்வமாய் இருந்திட்ட அவ்விருவர் பருவங்கள்
காரணமாய் அமைந்துவிட மலர்ந்தது காதலே!
அனுதினமும் குளத்தருகே நேர்ந்திட்ட சந்திப்பு
அணுஅணுவாய் நெருக்கமுற்று வைகைவரைப் போச்சு
உணர்ச்சிகள் அணைமீறி புணர்ச்சி வழி வெள்ளமாச்சு
கணநேர சந்தோசம் கணை மீள கரைந்ததுவே !
குறைமதிக் கயவனின் கைபேசிப் படமொன்று
இரைதேடும் மக்களிடை குறைகண்டு பேச்சாச்சு
கரைந்திட்ட சந்தோசம் மீண்டெழும் வழியின்றி
ஊரெங்கும் இவர் பேச்சு சார்பற்று உறவினர்கள் !
சினங்கொண்ட பெற்றோரும் இனங்கண்டு மறுத்துவிட
துணிவில்லை இருவருக்கும் இணையும் வழி காண்பதற்கு
மனமில்லை பிரிந்துவிட வேறுஉறவுக் கனவுமிலை
தனியே தனித்தனியே இவர்வாழ்வு தொடர்ந்துவிட
காதலுக்கு தோல்வியா காதலர்க்கு தோல்வியா
சாதிக்க இயலாத காதலும் படுத்திருச்சு
சோதித்துப் பார்க்கையிலே காதலோ செத்துப்போச்சு
காதலது மரித்துவிட " காதலர்கள் " விதவைகளே !!