நிழலாகும் நிஜங்கள்
வருவதை எல்லாம் வகைதொகை யின்றி
==வாரி இறைப்பவன் ஊதாரி
தருவதை எல்லாம் வாங்கி எடுத்துத்
==தானே தின்பவன் பெரிச்சாளி
கருவறை சுமந்த தாயவள் தன்னை
==காக்க மறந்தவன் சூதாடி
திருவருள் புரியும் கடவுள் இருந்தும்
==திருவடி மறந்தவன் தான்றோன்றி.
வறுமையில் வளர்ந்து வாழ்க்கையை படித்து
==வசதிகள் கொள்பவன் மேதாவி
மறுமையை நினைத்து தவறுகள் மறுத்து
==வாழ்ந்திட துடிப்பவன் மா யோகி
வெறுமைகள் என்றே வாழ்வினை வெறுத்து
==வீட்டில் கிடப்பவன் மூதேவி
நறுமலர் எனவே வாசனை வீசிட
==நாளும் நினைப்பவன் சீதேவி.
இருப்பதைக் கொண்டு எழிலுடன் வாழும்
==இலக்கணம் சமைத்தவன் அறிவாளி
உருகிடும் மெழுகில் திரியென நின்று
==ஒளிவிட நினைப்பவன் தான்தியாகி
பருகிடும் பொழுதில் சுவைதரும் அமுதின்
==பக்குவம் கொள்வதில் குளிராகி
வருகிற கோடை வழிநாம் நிற்கவோர்
==விருட்சமென் றாகலாம் சீர்தூக்கி!
*மெய்யன் நடராஜ்