ஒருதலை உரையாடல்

மெல்லிய காற்று இதமாய் தழுவி செல்ல!

கடலரசி, மாலை கதிரவனை கட்டி தழுவி, தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து கொள்ள! அங்கே ஒரு கூடல் அழகாய் அரங்கேறி கொண்டிருக்கின்றது!

நாகரீகம் கருதி நிலா மகள் ஓரமாய் எட்டி பார்த்து காத்திருந்தாள், இந்த கூடல் முடியும் தருணத்திற்கு!

இயற்கையை ரசிப்பது என்றும் சலிக்காதது என நினைத்து கொண்டே அருகில் திரும்பி பார்த்தேன்!

இயற்கையின் கூடல் நடுவே உன்னுடன் ஒரு ஊடல்!

சில நேரங்களில் ஊடலுக்கு காரணம் தேவை இல்லை! சிறு நினைப்பும் சிறு பார்வையும் மட்டும் கூட போதும்! ஏன் காரணமே இன்றி வரும் ஊடல்கள் காதலில் அதிகம்!

கடற்கரையில் அருகே தழுவாத கண்ணியமான இடைவெளியில் நீ!

இந்த பாழாய் போன கண்ணியம் கண்களுக்கு இல்லையே!

அங்குலம் மறக்காமல் ரசிக்கும் கண்களை என்னால் கட்டி போட முடியவில்லை!

கடிவாளம் கழட்டி காண்பதற்கு மட்டும் அனுமதி அளித்தேன்!

அருகில் அமர்ந்து மணல் பரப்பில் விரல் கொண்டு கோலம் போடும் குமரி குழந்தையாய் நீ!

காற்றின் மீது லேசாய் பொறாமை, நான் தள்ளி அமர்ந்திருக்க உன்னை இடை விடாமல் தொட்டு செல்லும் காற்றை சபித்தேன்!

மணல் ஒட்டிய விரல்கள் கூட ஆபரணம் பூண்டது போல ஜொலிப்பதாய் உணர்ந்தேன்!

நீ என்ன நினைப்பாய்!

என்னை போல நீயும், உஹும் பாழாய் போன ஆண் மனதுதான்.. ஊடலின் போதும் கூடல் பற்றி நினைத்து தொலையும்!

பெண்கள் மனது?

அது தெரிந்திருந்தால் இந்நேரம் இரண்டு உலக போர்கள் வந்திருக்காது!

உலக போருக்கும் பெண்ணுக்கும் என்னதான் சம்மந்தம்! சத்தியமாக எனக்கும் தெரியாது! பெண் மனது என்று வந்து விட்டாலே இது போன்ற திராபையான உவமைகள் கொடுக்க வேண்டும் என்ற விதி உண்டு!

சரி ஊடல் கூடல் என்று போகும்போது அரசியல் ஆணாதிக்கம் பெண்ணியம் எதற்கு!

என் கண்கள்! சீ தொல்லை பண்ணாதே என்று என்னை அதட்டி விட்டு!
மறுபடி தன் களவாணித்தனத்தை தொடர்ந்தது!

மனது என் கண்ணிடம், இப்படி பார்த்து பார்த்து ஏற்றி விட்டு நீ தூங்கி விடுகிறாய், ஆனால் தூக்கத்திலும் விழித்திருக்கும் என் பாடுதான் திண்டாட்டம் ஆகிறது என கூறி முடிக்கும் முன்!

அவள் திரும்ப! என் கண்ணும் அவள் கண்ணும் சந்தித்த நொடி! மன மந்தி செயல் அற்று நின்றது! எவ்வளவோ உசுப்பியும் எழுந்திருக்க மறுத்தது!

சில நொடி பார்வை! அவள் அழகிய கண்களுக்குள் துளிர்த்து துருத்தி கொண்டிருந்த அந்த கண்ணீர் துளி!

அடுத்த நொடி மனம் விழித்து கொண்டது, அது ஆண்கள் மனதின் அதி அற்புத சிறப்பம்சம். நீயா நானா என்ற உக்கிர போட்டியின் முடிவை அறிவிக்கும் நொடி!

கண் கலங்கி நிற்க! மனது அப்போதுதான் விழித்திருக்க! வாய் மட்டும் அதிகபிரசங்கிதனமாய் அனிச்சையாய் வார்த்தைகளை உதிர்த்தது! தவறு யாருடையது என்று தெரியாவிடினும்!

"தவறு என்னோடதுதான், என்னை மன்னித்து விடு"

கண்கள் அவள் அசைவை நோக்கி நிற்க! மனது அவள் பதிலிற்கு காத்து நிற்க!

அரை நொடி யுகமாய் மாற! அவளும் ஒரு முறை கடலின் கூடலை நிமிர்த்து பார்த்து பிறகு செவ்விதழ் பிரியாமல் ஹ்ம்ம் என்று ஆமோதித்தாய்!
இல்லை இறங்கி வந்தாய்! நான் முழுமனதாய் மன்னிப்பு கேட்கவில்லை என்று அறிந்தும் கூட!

கடல் கதிரவன் சென்று, நிலா மகளின் சாட்சியாக!
காதல் அங்கே மேலும் அழகானது! ஊடல் பரிணாம மாற்றம் அடைந்தது!

மறுபடி மனது யோசிப்பதற்கு முன்பு(மூளைக்கு பெரியதாய் இங்கு வேலை இல்லை), வலக்கரம் மிக அதிகபிரசங்கித்தனமாய் அவளை வளைத்தது! அவள் முகம் சாய்ந்தது என் தோள்கள் நோக்கி!

அந்த கூர் நாசியின் விசும்பல், இன்னும் என்னை இறுக்கி கொள் என்பதற்கு சமிங்க்ஜை என்று எனக்கு தெரியாதா?

காற்றிற்கு பழிப்பு காட்டிவிட்டு அணைத்துக்கொண்டேன்! காற்று புகா இடைவெளி விட்டு!

--
மனோஜ்குமார் பாண்டியன்(மனு)

எழுதியவர் : மனோஜ்குமார் பாண்டியன் (10-Oct-15, 2:46 am)
Tanglish : oruthalai uraiyadal
பார்வை : 243

மேலே