‘அடடா மறந்துபோச்சே’ – இனி வேண்டாம்

‘மறந்துபோச்சே!’ அடிக்கடி மண்டையைச் சொறிந்து கொள்வதை நம்மில் பலர் அடிக்கடி செய்வர். இதற்கு காரணம் நினைவாற்றல் இல்லாதது. ஆனால் சமீபத்திய ஆய்வில், நல்ல உறக்கம் நினைவாற்றலை அதிகரிக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

ஹார்வேர்ட் மெடிக்கல் ஸ்கூல் மற்றும் நியூயார்க் பல்கலை இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், புதிதாக கற்றுக்கொண்ட வார்த்தைகள் நல்ல தூக்கத்திற்கு பிறகே ஒரு மனிதரின் நினைவில் பதிகின்றன என்று தெரிய வந்துள்ளது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் இணை ஆராய்ச்சியாளர் ஜேக் டேம்மினன் மற்றும் அவரது குழுவினர், மனிதனின் புதிய நினைவுகள் அவன் தூங்கும்போது எவ்வாறு மூளையுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு ஏற்கனவே உள்ள வார்த்தைகளின் ஒத்த ஓசையுடைய வார்த்தைகள் கற்பிக்கப்பட்டன. உதாரணமாக “கதேட்ருகே”(Cathedruke). இது கதீட்ரல் என்ற வார்த்தையில் இருந்து வந்தது.

ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம், தூக்கத்திற்கு முன்னரும் பின்னரும் கற்றுக்கொண்ட புதிய வார்த்தைகளை மீண்டும் கூறச் செய்து சோதிக்கப்பட்டது. அதில் தூக்கத்திற்கு பின்னரான சோதனையில் அதிக வார்த்தைகளை நினைவு கூர்ந்து அதிக வேகத்தில் அவர்கள் கூறியது தெரிய வந்தது.

“நீங்கள் புதிய வார்த்தைகளை கற்கும்போது, அவை ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்கு பின்னரே நினைவாற்றலுடன் நன்கு ஒருங்கிணைகின்றன”, என்கிறார் ஹார்வேர்ட் மெடிக்கல் ஸ்கூலின் உளவியல் துறை பேராசிரியர் இராபர்ட் ஏ.ஸ்டிக்கோல்ட்.

இந்த ஆய்வு வெளிநாட்டு மொழிகளைக் கற்கும் மாணவர்களுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும். ஆழ்ந்து உறங்கும் போது அவர்களது மூளையில் புதிய கற்றல்கள் எவ்வாறு நினைவுகளில் பதிகின்றன என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஆய்வின் மூலம், தூக்கம் நமது மூளையை உற்சாகமாக வைத்திருக்க உதவுவதுடன் நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

_______________
http://tamilenfocom

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Oct-15, 7:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே