பிரிவுபச்சாரம்

ஞாயிற்றுக் கிழமை,
சோம்பல் முறித்தும் முறியாமலும்,
எதையோ பறிகொடுத்ததுபோல்
செய்தித் தாழை ஓடும் மின்விசிரியிடம்
இருந்து காப்பாற்றியபடி இரு கைகளில்
இருக்கி பிடித்திருந்தேன்.

எப்பொழுதுமே எதாவது ஒன்றை
ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கும்
மனைவி.....என் பக்கம் திரும்பி

ஏங்க! இந்த ஷூவை குப்பையல
போடலாமா என்றாள்....?

யோசிக்க சுருதி இல்லாமல்
சரி என்றேன்.

திரும்பவும் நாளிதழில்
நங்கூரம் இட்டேன்.

இந்த அவசரக் யுகத்தில்
யாரும் யாரோடும் ஆழமான
நட்பு கொள்வதில்லை என்று
எவனோ ஒருவன் உருகி
எழுதி .இருந்தான்.

மனதில் அது ஒட்டவே இல்லை.
மனைவி, குழந்தை, தாய்
தகப்பனோடு ஆழமான உறவை
பேணிக் காக்கவே பிராணன்
போகிறது, இதில் எங்கு ஆழமான
நட்பு சாத்தியம்?

வழக்கம் போல் தக்காளி வெங்காயம்
வாங்க கிளம்பி வாசல் அடைந்தேன்.
ரப்பர் செருப்பை போடும்போது,
யாரோ என்னை பார்ப்பதாய்
உணர்ந்து உற்று நோக்கினேன்.

வாசல் படி ஓரத்தில்,
பாவமாய் ஒரு ஷூ மேல்
இன்னொரு ஷூ அமர்ந்து கொண்டு,
என்னையே பார்த்தது.

சடார் என்று ஏதோ ஒன்று
மனதில் எதிரொலித்தது....!

இதே ஷூவை புதிதாய்
வாங்கிய அன்று,
சோவென பெய்ந்தது அடை மழை.
எப்படியோ நண்பன் தயவால்,
அவன் காரில் சவாரி செய்து புது
ஷூவை காப்பாற்றினேன்.

அலுவலத்தில் இருந்து இரவு திரும்பகையில்,
ஒரு கதாநாயகி போல,
தண்ணீர் இல்லாத இடமாய் பார்த்து,
பார்த்து துள்ளித் துள்ளி
குதித்து நடந்து பேணிக்
காத்தேன்.

தினம் தினம்,
பாலிஷ் போட்டு,
மினுக்கு குறையாமல்
அணிந்து செல்வேன்.

எத்தனை தூரம் சேர்ந்தே
பயனித்திருகிறோம்?
போகாத இடங்கலும் இல்லை,
பார்க்காத நாடுகளுமில்லை.

வெற்றியில் துள்ளிக் குதிக்கும்போது
என்னை தாங்கிப் பிடித்ததும்.
தோல்விகளில் நான் சுருங்கிய
போது, என்னை விறைப்பாய் காட்டியவன்
நீ தான்!

தேய்ந்து, தேய்ந்து,
என் உயரத்தை குறைத்து காட்டினாலும்,
என் எல்லாப் பதவி உயர்வுகளில்
உனக்கும் பங்குண்டு என்பதில் சந்தேகமில்லை.

என்னோடு ஒட்டியே இருந்த உன்னை,
சட்டென்று வெட்டி விட நினைத்தது
தவறாய் பட்டது.

ஒரு ஷூவை கையில் எடுத்து,
அருகில் பார்த்தால்
அவ்வளவு அழகாய் இருந்தது.

இருமுறை கையால்
தடவி கொடுத்து,
நன்றி சொன்னேன்.

ஷூவை திருப்பி அடிப்பக்கத்தை
பார்த்தால், பாலமாய் பிளந்து
கிடந்தது.

இதற்க்காகவே நான்
புது ஷூ வாங்கினேன்
என்று சொல்லி,
புரியவைத்தேன்.

அதுவும் புரிந்து கொண்டதாய்,
என் கையில் இருந்து இடறி,
அதன் ஜோடியோடு சேர்ந்து கொண்டது.

முறையான பிரிவுபச்சாரம்
கொடுத்தாய் தோன்றிற்று.

சந்தோசமாய் இருந்தது,
இந்த தருணம்.

இதுவா ஆழமான நட்பென்பது?

ஆமாம் என்பதுபோல்
கீழே கிடந்த ஷூ,
காத்திருக்கும் கார்,
வசிக்கும் வீடு,
கையில் இருக்கும் மொபைல் போன்,
என்னை பார்த்து தலையாட்டியது!!!!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (11-Oct-15, 8:28 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 187

மேலே