அம்பிளி இல்லம் ஒரு பக்க கதைகவிஜி

அம்பிளி இல்லம் ....ஒரு பக்க கதை...கவிஜி

"இது மாலை நேரத்து மயக்கம்...."- பாடல் கேட்டுக் கொண்டே மழை பார்த்துக் கொண்டிருந்தேன்.... சோவென மழை இல்லை.. பலத்த மழை...பழுத்த மழை....

சனிக்கிழமை மாலை வேறு... கொஞ்சம் குடித்துக் கொண்டும் இருந்தேன்... டாஸ்மாக் முன்னால் விழுந்து கிடப்பது போல் இல்லை எனது குடி.. இது முன்னால் காதலியின் பிரிவு முத்தம் போல... அத்தனை மென்மையானது...மேன்மையானது.....தானாக புன்னகைத்துக் கொண்டே ஏதேதோ யோசிக்கத் தோன்றியது......"ஜன்னல் தாண்டி வந்து முகம் தொட்ட சாரலில் கடவுளின் எச்சில்" என்று மொக்கையாக கவிதை கூட வாய்மொழியாக நினைத்த போது தான் எதிர் வீட்டு ஜன்னல், முன்னும் பின்னும் வேக வேகமாக அடித்துக் கொண்டிருந்தன.... அத்தனையும் காற்று... பெருங்காற்றில் பெரு மழை... பெருமழைக்குள் மாலை மூடுகிறது....கவ்விய மௌனமாக.....

இப்போது, " ஏதோ நினைவுகள்..... மனதிலே மலருதே...." பாடல்.

எப்போதும் அடைத்தே கிடக்கும் ஜன்னல் எப்போதாவது எட்டாவது அதியமாய் திறக்கும்... 9வது அதிசயமாக ஜன்னலில் ஒரு பெண்ணின் முகம் சோர்ந்து காணப்படும்.. அதுவும் பின்னிரவு நேரங்களில்.. மழை நாட்களில்.. அடர் வெயில் சமயங்களில்.. இப்படி, எப்போதாவது தெரியும் முகத்தில் ஒரு வித தெளிவும் இல்லாத, குழப்பமும் இல்லாத வெற்றிட வட்டம் போல அந்த முகம் வெறித்திருக்கும்...... முன் அறையில் பெரியவர்கள் பேசுவதும்... போவதும் வருவதுமாகவே இருப்பார்கள்.. அந்த வீட்டு தாத்தா கூட என்னுடன் எப்போதாவது வாக்கிங் வருவார்.

"சார் அது உங்க பேத்திங்களா"- என்று கேட்கத் தோன்றும்.... பின், "ம்..... சரி எதுக்கு வம்பு" என்று வாய் சாத்திக் கொண்டு நடை சாற்றுவேன்... பெரிதாக பழக்கம் இல்லை என்பதால் கடந்து போவது சுலபமாக இருக்கும்... சரி இன்று என்ன ஆனாலும் பரவாயில்லை.. கை காட்டி விட வேண்டும்... அம்பிளி இல்லம்... என்று வாயில் ஸ்லாபில் பெயர் பதிந்து வைத்திருக்கிறார்கள்.. ஒரு வேலை அம்பிளிதான் பெயராக இருக்குமோ?...

வாய்க்குள் மழை வைத்தது போல... மெல்லமாக, ஆனால் மன சத்தத்தில் அதிகமாக 'அம்பிளி' என்று கத்தினேன். எனக்கே கேட்டதாக தெரியவில்லை...... "இந்த பொண்ணுங்கள நம்பவே முடியாது.. திடீர்னு போட்டு குடுத்துட்டு போயிட்டே இருப்பாங்க... அதான்..."- யோசித்தேன்.. யோசிக்க யோசிக்க.. அவளின் தீர்க்கப் பார்வை கவிழ்ந்து கொண்டே இருந்தது......மிகப் பெரிய மேகத்தின் கரிய நடையைக் கொண்டிருத்த கூர் முகத்தில் வட்ட வட்டமாய் விழுந்த துளியின் நிறப் பிரிகையில் வானவில்லின் இரு நிறம் கூட அவள் முகம் தாங்கிப் போனது போல நீண்டு வளைந்து கிடந்தன.. என் பார்வையின் குறிப்புகள்...

கையை ஆட்டிக் கொண்டே ஜன்னலுக்கு வெளியே உடலை சற்று தள்ளி முகத்தை நீட்டினேன்.... மழைப் பெண் நனைத்த முகத்தை கவிப் பெண் நனைக்கவில்லை.. இன்னும் குனிந்தே இருந்தது.. முகம்...

சற்று சத்தமாகவே 'அம்பிளி' என்று கத்தினேன்... வெற்றிடம் நிரப்பிய மழைச் சாரல்கள் தாண்டி சத்தம் அவளை அடைய நொடிக்குள் நொடி ஆனது... மெல்ல தலை தூக்கிப் பார்த்தவள், என் கண்களை ஆழமாக, தீர்க்கமாக, கூர்மையாக...பார்த்தாள்......ஒளி நிறைந்த அழகிய முகம்...செதுக்கிய கண்களில் குதித்தது பார்வைகள்...

'ம்ம்ம்ம்ம்.....'.... என்று யாரோ என் அருகே முனகுவது போல இருக்க, மெல்ல திரும்பிப் பார்த்தேன்...

தலை இல்லாத பெண் உடல் ஒன்று எனக்கு பின்னால் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தது......

கண்கள் விரிய மூச்சடைத்து நடுங்கிக் கொண்டே, நா வறண்டு கத்திக் கொண்டே சட்டென திரும்பி அம்பிளியைப் பார்த்தேன்......

இப்போது என் ஜன்னல் விளிம்பில் அதே அம்பிளியின் தலை இருந்தது........

ஆ...........................ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...................

கவிஜி

எழுதியவர் : கவிஜி (15-Oct-15, 1:07 pm)
பார்வை : 156

மேலே