பீர்பால் கதைகள் தத்துவம் நிறைந்தவை

அக்பர் பீர்பல், இவர்கள் இருவரையும் இணைத்து பல கதைகள் எழுதப்பட்டுள்ளன. இவையாவும் அக்பர் சாம்ராஜ்யத்தில் நடந்ததா இல்லையா என்பது கம்பராமாயணம் ஒரு நடந்த சம்பவமா, இல்லை அது வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட ஒரு முழு நீளச் சித்திரமா என்பதைப்போன்ற ஒன்றானாலும், இவர்களை மேற்கோள் காட்டி பல வாழ்க்கை நீதிகள் அவற்றில் சொல்லப் பட்டிருக்கிறது என்பதுதான் நாம் அறியவேண்டிய ஓர் உண்மை. அக்பர்-பீர்பல் கதைகளில் பல வாழ்க்கைப் பிரச்சனைகளை, இக்கட்டான சூழல்களைச் சந்திக்கும்போது அதிலிருந்து விடுபடவும், வாழ்க்கையில் நாம் வெற்றிகாணவும் அவற்றுள் பல தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் உணர்ந்து நான் சொல்லும் ஓர் பீர்பல் கதையைப் பார்ப்போம்.

பீர்பல் சிறுபிராயத்திலிருக்கும்போது அக்பர் மத்தியப் பிரதேசத்திலிருக்கும் அவரது கிராமத்திற்கு ஒரு முறை வந்தார். அப்போது அக்பர், “என்னைப்போல் எவனொருவன் என்னை அச்சடித்ததுபோல் சித்திரமாக வரைகிறானோ, அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். ஆயிரம் பொற்காசுகளென்றால் அந்தக்காலத்தில் சாமான்யமான ஒன்றா? பலர் அந்தப்போட்டியில் கலந்துகொள்ள வரிசையில் நின்றனர். அதில் மகேஷ் தாஸ் என்னும் பீர்பலும் ஒருவர்.

எல்லோரும் தாம் வரைந்திருந்த அக்பரின் ஓவியத்தைக்கொண்டு அரசனிடம் காண்பித்தார்கள். அரசனுக்கு எல்லாவற்றையும் பார்த்து மனம் ஒப்பவில்லை. கடைசியாக அந்த வரிசையில் மகேஷ் தாஸ் வந்தார். அக்பர் அவரைப் பார்த்து, “நீ எதைக் காட்டப் போகிறாய்?” என்று விரக்தியோடு வினவினார் அக்பர். உடனே மகேஷ் தாஸ் தான் தன்னுடன் எடுத்துவந்திருந்த தன்னையே காட்டும் நிலைக்கண்ணாடி ஒன்றைக் காட்டி, “பாருங்கள் அரசே, நீங்கள் நீங்களாகவே தத்ரூபமாக இதிலிருக்கிறீர்கள்,” என்று அதைக் காட்டியவுடன் அக்பருக்கு மனம் புளகாங்கிதமாகியது. மேலும், மகேஷ் தாஸின் சமயோஜித ஆறிவுக்கூர்மையைப் பாராட்டி, ஆயிரம் பொற்காசுகளையும் வழங்கி, தனது ராஜ முத்திரை பதித்த மோதிரத்தையும் அவருக்கு பரிசாக அளித்தார் அக்பர். அதுமட்டுமன்றி, பிற்காலத்தில் உனக்கு விருப்பப்பட்டபோது வந்து நம் தலைனகரான ஃபத்தேபூர் சிக்கிரியில் என் அரண்மனைக்கு வந்து என்னைக் காணலாம், என்றும் அழைப்பு விடுத்தார்.

இது ஒரு சாதாரண கதையோ, சம்பவமாகவோ தோன்றினாலும் இதில் பொதிந்திருக்கும் கருத்து யாதெனில், “வியாபாரி என்பவன் வாடிக்கையாளரின் மன விருப்பமறிந்து பொருளை வழங்கினால் அவன் வியாபாரம் செழிக்கும்” என்ற கருத்து மிக அழகாக இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இதில் பொதிந்து கிடக்கும் மற்றொரு உண்மை என்னவென்றால் மாவரசன் அக்பராயிருந்தாலும், யாரும் அவன் மனம் என்ன வேண்டுகிறது என்பதை எவரால் கொடுக்க முடியும்? அதனால்தான் மகேஷ் அவரது பிரதிபிம்பத்தையே கண்ணாடியில் காட்டினான். இது ஒரு மனோதத்துவ ரீதியான உண்மையென்பதை நாம் அறியவேண்டும்.

எழுதியவர் : முக நூல் (15-Oct-15, 7:26 pm)
பார்வை : 446

மேலே