மதத்துக்கு எதிராக
மதத்துக்கு எதிராக
முல்லா நஸ்ருதினை நமக்குத் தெரியும். குழந்தைகள் கதையில் வரும் ஒரு வேடிக்கையான கதாபாத்திரம். அனால் அவரது கதையில் சொல்லபப்டும் கருத்துகள், ஆழ்ந்த பொருள் உடையதாக இருக்கும். அவரை ஒரு ஞானி என்றே சொல்லலாம். அவர் நகைச்சுவையாக பேசினாலும், அதில் பல விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக இருக்கும். அப்படிப்பட்ட முல்லா நஸ்ருதீன் மீது ஒரு நாள் ஒரு வழக்கு தொடரப்பட்டது.அவரது பெருமை, புகழ் கண்டு பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.
புகாரின் முக்கிய அம்சம், முல்லா மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் என்பதுதான். மன்னரிடமும் முல்லாவுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. ஆனாலும் வேறு எந்த வழக்காக இருந்தாலும் மன்னர் தள்ளுபடி செய்திருப்பார், மதத்துக்கு எதிராக செயல்படுவாதாக கூறப்பட்டபடியால், மன்னர் அரசவையில் முல்லாவிடம் விளக்கம் கேட்க முடிவு செய்தார்.
முல்லா அவைக்கு வந்தார். அவர் மீது விசாரணை என்று கேள்விப்பட்டு, அவரது ஆதரவாளர்கள் பலரும் அரசவையில் கூடி இருந்தனர்.
வழக்கு தொடந்தவர்கள் எழுந்தனர். முல்லா ஊர் ஊராகச் சென்று கடவுளுக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார் என்று குற்றம் சாட்டினர். பல ஊர்களிலும் முல்லா பேசியதாக சொல்லப்பட்ட விஷயங்களை தெரிவித்தனர்.
"முல்லா இதற்கு உங்களின் விளக்கம் என்ன?" அமைதியாக கேட்டார் மன்னர்.
முல்லா நஸ்ருதீன் எழுந்து நின்று, "அரசே! ஆன்றோர்கள் நிரம்பிய இந்த அவையிலிருந்து, பத்து புத்திசாலிகளைத் தேர்ந்தெடுங்கள்" என்று பணிவுடன் கூறினார்.
பொறாமை நிறைந்தவர்களுக்கிடையே பெரும் போட்டி ஏற்ப்பட்டு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.பெரும் ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முல்லா அவர்களிடம், இறைவனைப் பற்றி அவைகள் நினைப்பதை எழுதச் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவரும், எழுதி முடித்து மன்னரிடம் கொடுத்தனர்.
மன்னர் ஒவ்வொன்றாக, அனைவருக்கும் கேட்கும்படி வாசித்தார். ஒருவர் இறைவனை ப்ரம்மாண்டமனவர் என்று கூறியிருந்தார். மற்றொருவர், அவர் அணுவுக்குள் அடங்கியிருப்பதாக கூறினார். ஒருவர், கடவுள் ஆகாயத்தில் இருப்பதாக எழுதியிருந்தார். வேறொருவர், எளிய வடிவமானவர் என்று கூறியிருந்தார். இன்னொருவரோ, இறைவன் வடிவமற்றவர் என்று சொல்லியிருந்தார். இப்படி பத்து பெரும் பத்து விதமான பதில்களை எழுதியிருந்தனர்.
இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த முல்லா நஸ்ருதீன் எழுந்து, "மன்னா! எது இறைவன் என்பதிலேயே இத்தனைக் குழப்பம் கொண்ட இவர்கள், நான் மதத்துக்கு எதிராக பிரசாரம் செய்கிறேன் என்று எப்படிக் கூற முடியும்? இறைவனையே அறியாத இவர்கள், நான் அவருக்கு எதிராகச் செயல்படுகிறேன் என்பதை மட்டும் எப்படி உணர்ந்தார்கள்?" என்று கேட்டார்.
____________________