பூமிக்கு அறிவித்தேன்
வசந்த காலத்தின்
வண்ணமய வரவால்
வனங்கள் கனலாகி
மாலையில் மிளிர
நீண்டு நிலைபெறா
நிழல்களின் நடுவே
தீக்கங்கு போலே
சிமிட்டும் எழிலில்
செக்கர் வானம்
சிந்தனையை கிளறும்.
காணும் கண்களின்
புருவங்கள் உயர
நினைவு அலைகள்
கரையில் புரள
நொப்பும் நுரையுமாய்
உறைந்திட்ட நீரில்
கண்ணீர் துளிகளும்
காணாமல் போகும்.
இந்த பொழுதினில்
இயற்கை அரசியின்
இந்திர சாலத்தை
ரசிக்கும் சிறுவனாய்
கல்லெடுத்து வீசி
பல்லவி பாடி
நில்லாமல் அலைகிறேன்
நினைவு அலைகள்
மீண்டும் புரள்கையில்
காவிரி வெள்ளம்
மேவிய வயல்களில்
காற்றில் விழுந்த
மலரென மிதந்தேன்
மீண்டு வருகையில்
மேய்ப்பவன் குழலில்
ஆதுரக் குரலில்
மதுர ராகமொன்று
சதிராடும் காற்றில்
எதிரொலிக்க கேட்டு
அன்றைய விடியலை
நன்றே ரசித்து
பூமிக்கு அறிவித்தேன்!