நடந்ததும், நடந்ததின் பார்வையும் – ஒரு பக்கச் சிறுகதை ரேஸமோன் விளைவு

”இன்னைக்குனு பாத்து இவ்வளவு லேட் ஆயிடுச்சே! எல்லாம் இந்த மேனேஜர் சனியானால வந்தது!”
“அப்பாடா! இன்னைக்கு தான் ரொம்ப சீக்கிரமா சாப்பிட்டு வந்திருக்கோம்!
“பிரேம்குமார் மெஸ்ல சாப்ட்ட லெமன் சேவ நல்லாவே இல்ல. நெளி நெளியா புழு மாதிரி! நெக்ஸ்ட் டைம் அத சாப்பிடவே கூடாது.
”ஆயிரம் தான் சொல்லு! நம்ம பிரேம்குமார் மெஸ் லெமன் சேவ மாரி வருமா? வராது. வரவே வராது! நாளைக்கு நைட்டும் அதான் சாப்பிடுறோம்!”
”யாரு இவன் பின்னாலேயே வர்றான்?”
“யாரு பா இந்தப் பொண்ணு! நமக்கு முன்னாடி போகுது!
”ஆளப் பாரு! மீசையும் தாடியும் வச்சிக்கிட்டு!! ரவுடி மாரி! பாக்க சகிக்கல!”
"பொண்ணுங்களுக்கு, தாடி வச்சப் பையனத் தான் இப்பலாம் ரொம்ப பிடிக்குதுனு நம்ம மச்சான் சொன்னது சரி தான்! இத்தன வாட்டி திரும்பி திரும்பி பாக்குறாளே இவ!”
“அய்யோ இந்நேரம் பாத்து ரோட்ல ஒருத்தரும் இல்லேயே!”
”நம்ம ஆளுங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்ல! இப்ப போயி பானிப்பூரி சாப்புடுறானுங்களே! இதுக்கு கூட்டத்தப் பாரு!!”
”வேகமா நடந்து ஹாஸ்டலுக்கு போய்டனும்.”
“என்ன இந்தப் பொண்ணு! இவ்வளவு வேகமா நடக்குது! பேய் கூட நடக்குற போட்டி வச்சா, பேயவே தோக்கடிச்சுடும் போலயே!!”
”நாம இந்த தெருவுக்குள்ள போய்ட்டா, அவன் நேரா போய்டுவான். நாம தப்பிச்சுடலாம்!”
”என்னடா இது நம்ம தெருவுக்குள்ள போகுது!”
“அய்யோ! என்ன பின்னலேயே திரும்பி வர்றான்!”
“அய்! நம்ம தெருவுக்குள்ள வந்தாச்சு!!”
”அப்பாடா! தெரு எண்டுல ஒரு போலிஸ் பேட்ரோல் வண்டி நிக்குது! செத்தான் டா சேகரு!!”
”அடச்சே! சாணிய மிதிச்சுட்டோமே! கருமம் டா!!”
“போலிஸ பாத்துட்டான் போல! அதான் அங்கேயே நின்னு, கைய, கால ஆட்டிக்கிட்டு பாவ்லா பண்றான்”
“இது வேலைக்காவாது! வந்த வழியிலே திரும்பி போயி, அங்க இருக்குற அடிபைப்புல கால கழுவிட்டு வர வேண்டியதான்!”
“பைய போலிஸ பாத்து, பயந்து, தெறிச்சு திரும்பி ஒடுறான்! ஹா ஹா! அந்த பயம் இருக்கனும் டா! எப்படியோ இன்னிக்கு நான் தப்பிச்சேன் டா சாமி!”