வர்ணம் இழந்தாலும் வானவில்
வர்ணம் இழந்தாலும் வானவில்
- வெ.சுப்பிரமணிய பாரதி
சதைப்பகுதியொன்றை வாயில் கவ்வியபடி ஒரு நாய் ஓடிக் கொண்டிருந்தது. இன்னொரு நாய் விரட்டிக் கொண்டிருந்தது. சாலைகள் சிதைந்து கிடந்தன. மின்கம்பங்களும், தந்தி, தொலைபேசிக் கம்பங்களும் சாலையின் இருபுறமும் குறுக்கே விழுந்து கிடந்தன. சாலையின் இடது ஓரத்தில் ஒரு மரம் கிளைகள் ஒடிந்து வெறுமையாய்க் காட்சி தந்தது. அதில் கருப்பு வண்ணச் சேலை ஒன்று நிறம் வெளுத்துக் கிழிந்து ஒரு கிளையில் சுற்றிக் கிடந்தது. அங்கங்கு பிணங்கள் குவிந்து கிடந்தன. கூர்க்காக்கள் சுற்றிவரும் நாய்களிடம் இருந்து அவற்றைப் பாதுகாக்க பிரயத்தனப்பட்டார்கள்.
சுப்பிரமணியன் அதிர்ந்து போய், இக்காட்சிகளால் பாதிக்கப்படாமல் “மழை வருமோ? ” என வானத்தைப் பார்த்தவாறு கூடவரும் சந்திரனோடு நடந்து போய்க் கொண்டிருந்தான். இவர்களுக்கு முன் போய்க் கொண்டிருந்த ஆபிஸருக்கு ஒரு கூர்க்கா ‘சலாம்’ போட்டான். ஆபிஸர் கவனமெல்லாம் அவருக்கு முன்போகும் பெண்ணின் அலை பாயும் குட்டைப் பாவாடையில் இருந்தது.
வலதுபுறம் ஒரு சிறு பாலம் இடிந்து தரை மட்டமாகக் கிடந்தது. இரு மாடுகள் அதன் அடியில் சிக்கிக் கால்கள் பிளந்து கிடந்தன. வரிசையாகக் கட்டப்பட்டிருந்த கூடங்களின் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. அவைகளெல்லாம் இறக்குமதி ஆகும் கண்டெய்னர்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்ட கூடங்கள். அவற்றின் சுவர்கள் பெரும் விரிசல் அடைந்து காணப்பட்டன.
“நம்ம கண்டெய்னர் பத்திரமாக இருக்கும்கற நம்பிக்கை எனக்கில்லை…” என்றான் சந்திரன். சுப்பிரமணியன் பதில் சொல்லவில்லை. ‘ இந்த கட்டுமானங்களைக் கட்ட ஒரு இஞ்சினியர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பான்ஸ எவ்வளவு தொழிலாளர்கள் உயிரைக் கொடுத்து உழைத்திருப்பார்கள்… இப்போது இந்தக் கட்டுமானங்களே உயிரைக் கொடுத்திருப்பதைப் பார்த்தால் அவர்களுக்கு எவ்வளவு வேதனை இருக்கும்… இயற்கை சில மணி நேரங்களில் இவ்வளவையும் சிதைத்துக் காட்டிவிட்டதே… உலகையே அழிக்க அதற்கு சில தினங்கள் போதும் போலிருக்கிறதே.”
கடல் அமைதியாக ஒரு தாளலயத்திற்கேற்ப அசைந்து கொண்டிருந்தது. ‘பொங்கியது போதும்’என்பது போல. துறைமுக அலுவலகத்தை நெருங்க நெருங்க காணம் கட்சி யாவும் நெஞ்சைப் பிழிந்தன. ‘ குஜராத்தின் இரும்புக் கோட்டை’ என பெயர் பெற்ற துறைமுகக் கட்டிடம் புயலின் சீற்றத்தில் ஆடிப்போயிருந்தது. அனைத்து ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து போயிருந்தன. பாதி வாசல்களில் கதவுகளே இல்லை. மேல் தளத்தின் தடுப்புச் சுவரில் பாதி உடைந்திருந்தது. கட்டிடத்தைக் கழுகுகள் சுற்றி வந்தன. எங்கு பார்த்தாலும் ஈக்கள். ஈக்களிடம் இருந்த முடைநாற்றம் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது.
“வாந்தி வருது… ” என்றான் சந்திரன்.
வாட்ச்மேன் இருவரையும் நிறுத்தி வைத்து தலைமுதல் கால்வரை அளந்து பார்த்தார். அவருக்கு ஐம்பது வயதுக்கு குறைவாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் சாயம் பூசப்பட்ட தலை, மீசையிலும், தொப்பையை இறுக்கும் அகலமான பெல்ட்டிலும் அதற்கான முயற்சிகள் தெரிந்தன. சிறிய கண்கள். விநாடி தவறாமல் வாயை அசைபோட்டுக் கொண்டிருந்தார். சட்டையில் வெற்றிலைச் சாறின் தெறிப்புகள் தென்பட்டன. கையில் கட்டியிருந்த மஞ்சள் கடிகாரத்திற்குள் சிகப்பு வட்டமும் நங்கூரமும் தென்பட்டன.
“ம்…என்ன தமிழா?”
வாட்ச்மேனின் கேள்வியில் மனிதர்களை மதிப்பீடு செய்யும் தன் திறமை மீதான தற்பெருமை தெரிந்தது. அவரைச் சுற்றியும் ஈக்கள். அவற்றை அவர் அலட்சியப் படுத்தினார். சந்திரன் வியப்போடு தலையசைத்து ஒத்துக் கொண்டான்.
” பக்கத்துல ஜாம் நகரில மிலிட்டரி கேம்ப் இருக்கு… அங்க தமிழாளுக நெறய இருக்கு இங்க போர்ட்லயும் தமிழாளுக நெறய வேலை செய்யுது… இங்க தமிழ் படம் ஓடும்.. போனவாரம் எசவாலே சமாளி ‘ ஓடுச்சு… சூப்பர் படம்ல… ‘பட்டிக்காடா பட்டணமா ‘அதவிட நல்லாருக்கும்… இப்போ ஏதோ ஒரு அறுவைப் படம் ஓடுது…”
சுப்பிரமணியன் அருவருப்போடு அவரைப் பார்த்தான். சந்திரன் வந்த விஷயத்தைச் சொன்னான். அவர் ஒதுங்கிப் போய் இறந்து கிடந்த பெரிய எலியின் மேல் சரியாக வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு வந்தார்.
” டி.ஸி.யை எல்லாம் அவ்வளவு ஈஸியாப் பார்க்க முடியாது… எக்ஸ்போர்ட்டர்ட்ட இருந்து லெட்டர் கொண்டாந்திருக்கீங்களா…? ஷிப்பிங் கம்பெனி ரெகமண்டேசன் இருக்கா…சொல்லுங்க…”
சுப்பிரமணியன், ” நாங்க செக்ஷன்லயே பேசிக்கிறோம்…” என ஆரம்பித்த உடன் வாட்ச்மேன் கனகம்பீரமாகச் சிரித்தார்.
” செவிடுகளுக்கு செய்தி வாசிக்கிறவுக மாதிரித்தான் பேசனும்… இங்க யாரும் தெரிஞ்சாலும் இங்கிலீசு பேச மாட்டானுக… ஆபிஸர்ல தமிழாளுக யாரும் கெடயாது… அப்புறம் உங்க இஷ்டம்…” என்ற வாட்ச்மேனை சந்திரன் தனியாக அழைத்துப் போனான்.
திரும்பி வரும்போது வாட்ச்மேன் மீண்டும் வெற்றிலையை வாயில் குதப்பிக் கொண்டு சுப்பிரமணியனைப் பார்த்து அசட்டுத்தனமாக சிரித்தார்.
“அப்படியே வேடிக்கை பார்த்துட்டு வாங்க… ஒரு அவர்ல பெர்மிஷன் லெட்டர் ரெடியாயிடும்..
காம்பவுண்ட் சுவரைத் தாண்டி வந்த சந்திரன், ” அப்பாடா…! வேலை முடிஞ்சிடும்…” என சந்தோஷப் புன்னகைப் பூத்தான். பெரிய கடலைப் பார்த்துக் கொண்டு ஒரு நிர்வாணக் குழந்தை வீரிட்டு அழுது கொண்டிருந்தது. அதன் பக்கத்தில் யாருமில்லை யாருமே அந்தக் குழந்தைக்கு இல்லையோ, என்னமோ? சுப்பிரமணியன் பக்கத்தில் போனதும் மேலும் வீரிட்டவாறு சாலையை நோக்கி வேகமாக ஓடியது. அந்தக் குழந்தையின் காது கிழிந்து தொங்கிக் கொண்டிருந்ததை கவனித்தான்.
“எவனோ அடிச்சுட்டான்…”
குளிர்ந்த உப்புக் காற்று இதமாக உடலைத் தழுவியது. ‘இந்தக் காற்றா இவ்வளவு பெரிய துறைமுகத்தையே இந்த நிலைக்கு மாற்றியிருக்கிறது…!’ ஒரு சாக்கடைக்குப் பக்கத்தில் ஒரு நாய் ஏதோ ஒரு எலும்பைக் கவ்விச் சுவைத்திருக்க எந்த பிரக்ஞையுமில்லாமல் அருகேயிருந்த ஓர் உடைந்த கல்லில் அமர்ந்திருந்தான் ஒரு மனிதன். கருத்த நிறம். நல்ல உயரம் வைரம் பாய்ந்த உடல்.கூர்மையான மூக்கு. மிகவும் அழுக்காக இருந்தான். அவன் போட்டிருந்த குர்தாவின் கலரையே கண்டுபிடிக்க முடியவில்லை. சுருண்டிருந்த தாடியை அடிக்கடி சொறிந்து கொண்டிருந்தான். கன்னங்களில் எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தாலும் அவன் முகத்திலும் ஆண்மை பளிச்சிட்டது உண்மை. தமிழ் முகமாயிருந்தது.
” நீங்க தமிழ் பேசுவீங்களா?”
சுப்பிரமணியனைத் திரும்பிப் பார்த்த அந்த மனிதனின் முகத்தில் எந்த மாற்றமுமில்லை.கண்கள் ஆமோதித்தன. பக்கத்திலிருந்த நாய் அவன் மிதித்ததில் அது பத்தடி தள்ளிப் போய் விழுந்து ‘வவ்வ்’ என்ற பயந்த குரலோடு முன் வந்து விழுந்த எலும்பை மீண்டும் கவ்வி மேலே சென்றது. அது இப்படி ஒரு தாக்குதலை எதிர் பார்த்திருக்கவில்லை. மனிதர்களைப் பற்றி அறிந்தும் இப்படி அலட்சியமாக இருக்கலாமா?
” ஒங்க பேரென்ன … ” என்ற சுப்பிரமணியனைக் கூர்ந்து பார்த்தான் அந்த மனிதன். வேற்றுமை, அந்நியத்தனம் மிகுந்த கூர்மை. ஆனால் அந்தப் பார்வையில் விரோதம் இல்லை. வெறுப்பு கலந்த அலட்சியப் பார்வை.
” பத்திரிகையாளுகளா? “
“சே… சே… ஒரு கண்டெய்னர் விஷயமா போர்ட் ஆபிஸ் வந்தோம்…”
அவன் சிரிக்க முயன்று தோற்றான்.
” நா நீங்க பத்திரிகையாளுகன்னு நெனச்சிட்டேன். எம் பேரு தர்மராஜ்… இந்தப் பத்திரிகை ஆளுங்க வந்து பேட்டி எடுக்கிறத பாத்தா… எனக்கென்னவோ அந்த பயல் தேவலைன்னு தோணுது…”
” நீங்க போர்ட்லதா வேல பாக்குறீங்களா?”
தர்மராஜ் தலையசைத்தான். சுப்பிரமணியன் கைக்குட்டையை கீழே விரித்து அமர்ந்தான். சந்திரன் முகம் சுளித்தவாறு சுப்பிரமணியனையும் தர்மராஜையும் பார்த்துவிட்டு கடலைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.
” இந்த இடத்துலதான் நாங்க குடிசை போட்டிருந்தோம். பெரி…ய்ய குடிசை… எங்கப்பா, அம்மா, சித்தி, தங்கச்சி- சித்தியோட பொண்ணு, என்னோட பெஞ்சாதி , பையன் எல்லாரும் அந்த குடிசைலதா இருந்தோம்…”
கடலை வெறித்தான் தர்மராஜ்.
” எல்லோரும் போர்ட்லதா வேல பார்த்தீங்களா?”
” ஆமாங்க… எங்கம்மா மட்டும் என் பையன வச்சிக்கிட்டு சமயல் ஆக்கிப் போடும்… அதுக்கு புத்துநோய் வந்துருச்சுங்க…பாவம்…மத்த எல்லாரும் போர்ட்ல வேலக்கிப் போயிருவோம்… கூலி ரொம்பக் கம்மிங்க… மூணு வேள சாப்பிட முடிஞ்சுச்சு… எங்கம்மாவுக்கு வைத்தியம்லா ஒன்னும் வேணுமுன்னு சொல்லிட்டதுங்க… சாவு வரும் போது வரட்டும்னு அடிக்கடி சொல்லும்க… சித்திதா அம்மாவை தர்மாஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் – பேருதாங்க தர்மாஸ்பத்திரி –என்னத்தச் சொல்லி என்ன நடக்கப் போகுதுங்க… எங்க சித்திக்கு நான்னா ரொம்ப உசுரு… நானும் அத சித்தின்னு நெனக்கிறதில்லீங்க. அத மராத்தி, அது தமிழ் பேசுறதக் கேட்டா சிரிப்பா இருக்கும்.நாங்க அத பேசவிட்டு விழுந்து விழுந்து சிரிப்போம்…”
தர்மராஜின் பேச்சில் ஒரு நட்புறவு வளர்ந்தது.குரலில் ஒரு தாகம் தொனித்தது. இதையெல்லாம் சொல்ல வேண்டிய கடமை உள்ளவரிடம் சொல்லுவது போன்ற தீவிரம் இருந்தது. வாய்தான் பேசிக் கொண்டிருந்ததே தவிர கண்கள் ஒரு காட்சியைப் பார்ப்பது போன்ற அலர்ச்சிகளோடு எங்கோ சஞ்சரித்திருந்தன. சந்திரனும் சுப்பிரமணியன் பக்கத்தில் உடகார்ந்து கொண்டான். தர்மராஜ் பலகீனத்தால் பேச்சை நிறுத்தி பெருமூச்சு விட்டான்.
” என் சம்சாரத்தథக்கு கருவாட்டுக் கொழம்புன்னா போதுங்க, உசுரவிட்டுரும்…மூணு துட்டு சாப்பிடும்.தொட்டுக்கக் கூட எதுவும் வேணாம்… அப்படி சாப்பிடும். அது எனக்கு கால் அமுக்கிவிடும் பாருங்க… அதுலயே உடம்பு நோவுல்லாம் எங்கேயோ பறந்து போயிரும்…எம்பையன் அவன் காலையும் அமுக்கிவிடச் சொல்லுவான்…பயங்கர சேட்டை…நாங்க வேலைக்குப் போனப்புறம் எங்கம்மா உசுர எடுத்துறுவான்…நா வராட்டா அவன் தூங்க மாட்டாங்கஸ அம்புட்டு பாசங்க அவனுக்கு… அவன் ஒரு கிளி வளர்த்தான் பாருங்க, அதுவும் அவன் தலைமாட்டுல படுத்துத் தூங்கம். அவ்வளவு தோஸ்த்து. ரொம்ப உசுரா இருந்துச்சுங்க…”
தர்மராஜ் பேச்சில் ‘உசுரு’ அடிக்கடி வருவதைக் கவனித்தான். சுப்பிரமணியன். மெதுவாக, “இப்ப அவுங்கள்லாம்…” என இழுத்தான் சந்திரன்.
” எங்கேன்னு சொல்லுவேன்… நான் ராஜ் கோட்டுக்குப் போயிருந்தேங்க. என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்க, மாப்பிள்ளை ஆட்டோ ஓட்டுறான். நல்ல மாதிரி.என் சம்சாரமும் ராஜ்கோட்டுக்கு வர்றதா இருந்தா… நெறமாச கர்ப்பமாயிருக்கேனுதா நா விட்டுட்டுப் போனேன்… பாவம்…”
மிகவும் சிரமப்பட்டு மூக்கை சிந்தி தன் உடையிலேயே துடைத்துக் கொண்டான். தொண்டையைக் காறி உமிழ்ந்து பக்கவாட்டில் துப்பினான்.
” இங்க புயலடிக்கையில அங்க என் உசுருக்குள்… பெரிய புயலுங்க… இங்க வந்து பாத்தா ஒரு உசரக்கூட காணம்ங்க… போச்சு… எல்லாம் பறந்து போச்சு… சிதறிப் போச்சு… அழிஞ்சு போச்சு…புகைஞ்சு போச்சு…”
கொஞ்சம் கொஞ்சமாக அவன் முகத்தில் அழுகை பீறிட்டுக் கொண்டு முகத்தைக் கோரமாக்கியது. அவன் தோளைத் தொட்டான் சுப்பிரமணியன். எதிர்பாராமல் தன் முகத்தில் வேக வேகமாக அறைந்து கொண்டான் தர்மராஜ். ” போச்சு… போச்சு…” என சொல்லிக் கொண்டான். ‘ அவனுக்கு என்ன சமாதானம் தான் சொல்ல முடியும்?’ என திகைத்தான் சுப்பிரமணியன்.
“நீங்க தப்பா நெனைக்கலைன்னா…” என பர்ஸை எடுத்த சந்திரனை அவசரமாகத் தடுத்தான் தர்மராஜ்.
“எனக்கு பணம் வேணாம்ங்க… ” என்று நிறைவு செய்யாமல் வாக்கியத்தை தர்மராஜ் நிறுத்திய போது சுப்பிரமணியனின் கண் கலங்கியது. பேச்சை மாற்ற நினைத்த சந்திரன், ” தமிழ் நாட்டுல உங்க பூர்வீக ஊர் எதுங்க? எனக் கேட்டு வைத்தான்.
முகத்தைத் துடைத்துக் கொண்டான் தர்மராஜ். ” ராமநாதபுர மாவட்டத்துல ” காமன்கோட்டை ” ன்னு ஒரு கிராமம்ங்க… என்றான் தர்மராஜ், ஒரு புன்னகையோடு.