புற்றில் உறையும் பாம்புகள்

தோட்டப்பக்கம் வேலி ஓரம் கிடந்த சோளத்தட்டுக் கட்டை இழுத்துப்போட்டு உதறி, குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அடுப்புக்கு தட்டை அடித்து சீராய் அடுக்கிக்கொண்டிருந்த வனமயிலு எதிர்வீட்டில் குடியிருக்கும் வாலிபனைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டாள்.

"கண்ணைப் பாரேன் நல்லா... கோழி முட்டையாட்டம் வச்ச கண்ணு வாங்காம பாக்கறத. இவனெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்திருக்கமாட்டானா... எம்மா நேரமா பாத்துக்னுகிறான்யா இதே மாதிரி..."

பக்கத்தில் சற்று தள்ளி தொட்டியில் கைவிட்டுக் கலக்கியபடி மாட்டைப் பிடித்துத்rajendaracholan தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த கந்தசாமி அவன் பாட்டுக்குப் பேசாமல் இருந்தான்.

"பாராதே அவன் பாக்கறத... எங்கனா அசையரானா பாரேன். அவனும் அவன் மூஞ்சும் .. நல்லா அய்யனாரப்பன் செலையாட்டம்."

அவன் தொட்டியிலிருந்த தவிட்டை அள்ளி உள்ளங்கையில் ஏந்தி மாட்டுக்கு ஊட்டினான்.

"எங்கனா ஒதை பட்டாத்தான் தெரியும். புள்ளாண்டானுக்கு. இப்படியே பாத்துக்னு இருக்கட்டும். ஒருத்தன் இல்லன்னாலும் ஒருத்தன் எவன்னா கண்ணை நோன்டிப்புட மாட்டான் ஒரு நாளைக்கி. சீ நமக்கு என்னுமோ ஒரு ஆம்பளை பாக்கறான்னாலே அம்மா அயக்கமா கிது. ஒவ்வொருத்தியாமாட்டமா... வ்வா கட்டனவன் கண்ணெதுர குத்துக் கல்லாட்டம் குந்திருக்க சொல்லவே... சீ! ஜென்மமா அது. செருப்பாலடி..."

முகவாய்க்கட்டையை இழுத்து தோல் பக்கம் இடித்துக் கொண்டாள். எதிர் வீட்டை முறைத்து புருஷனை முறைத்து நன்றாகவே மூடியிருந்த மாராக்கை மேலும் இழுத்து மூடிக்கொண்டாள்.

"பாருய்யா... நீ ஒரு ஆம்பள இங்க குந்தியிருக்க சொல்லவே இந்த பார்வ பாக்கறானே... நீயே கண்டி, இல்லண்ணா என்னா செய்வான். கைய புடிச்சிகூட இழுப்பாம் போலக்குது. ஏன் இழுக்கமாட்டான்.
தொடப்பக்கட்டையை எடுத்துக்க மாட்டனா கையில, தொடப்பக்கட்டய..."

அவன் வலது மாட்டைப் பிடித்து முளைக்குச்சியில் கட்டிவிட்டு இடது மாட்டைப் பிடித்து அவிழ்த்துக்கொண்டு வந்தான்.

"அங்க பாருதே ரவ அவனண்ணா... நீ என்னமோ இப்பத்தான் ஒரேயடியா தண்ணிகாட்டற... தண்ணி. இங்க என்னடா பார்வன்னு நீ ஒரு பார்வ பாத்தினா உள்ள ஓடிப்புட மாட்டான். அவன்... என்னமோ குந்திங்கிறியே பேசாத."

அவன் தொட்டியைக் கலக்கித் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தான்.

"என்னா ஊரகாளி மாடுன்னு நெனச்சிக்கினானா... பாரேன் பின்ன அவன. நவுருவனான்னு நின்னுகினு பாக்கறத. கிட்ட வந்து பாக்கணம். அப்பறம் இல்ல தெரியும் ஆருன்னு... வனமயிலு எந்த வம்புக்கும் போவாதவள்னுதான் பேரு. இவனல்லாமா சும்மா உடுவேன். காறி மிழிய வச்சிட மாட்டனா. சாணியக் கரைச்சு மூஞ்சில ஊத்தி..."

நமுத்துப் போன சோளத்தட்டை சொத்துக் சொதுக்கென்று முறித்தான்.

"என்னுமோ நெனைச்சிக்னுகிறாரு புள்ளாண்டான். ஆபீஸ் உத்தியோகம் பண்றமே. பாத்துப்பம் பல்ல இளிச்சிக்கினு ஓடியாந்துபுடும்னு... பழ மொறத்தாலதான் சாத்துவாங்கன்னு தெரியாது போலருக்குது."

கைக்கு அடங்குகிற அளவு ஒரு தேற்றம் தெரிந்த சோளத்தட்டுகளை அள்ளி உடம்போடு சேர்த்து அனைத்துக்கொண்டு உள்ளே வந்தான்.

"இவரு ஒரு ஆம்பளன்னு கேடக்கறாரே சொறன கெட்டத்தனமா... அவன் பாட்டுக்னு கெடப்பாறைய முழுங்கிப்புட்டு நிக்கறவனாட்டம் நின்னு பாத்துக்னுகிறான். ஏண்டா பாவின்னுகூடம் கேக்காம பேசாமகிறாரே என்னுமோ ஊமையாட்டம். கேட்டா என்னா வெல்லத்துல வச்சா முழுங்கிப்புடுவான். இன்னொரு ஆம்பளன்னா பாத்துக்னு சும்மா இருப்பானா..."

அடுப்பாங்கரையோரம் வைத்துவிட்டு நிமிர்ந்து நின்று தன்னைத் தானே ஒருமுறை உடம்பு பூராவும் பார்த்து மேலே தூசுதும்பு இல்லாமல் புடவை, மாராக்கு, ரவிக்கைஎல்லாம் தட்டிக்கொண்டாள்.

"நான்ன வாசிதான் ஆச்சி. இதுவே இன்னொருத்தின்னா சும்மா இருப்பாளா இத்தினி நாளைக்கி. எப்பவே வாசப்படி தாண்டி எகிறிக் குதிச்சிப் புட்டிருக்க மாட்டாளா... எங்கனா தெரியிதா இந்த ஆம்பளைக்கி..." வெளியே வந்து பழையபடி குத்துக்கால் போட்டு அமர்ந்து தட்டை ஒடிக்க ஆரம்பித்தாள்.

"பாரந்தே, இன்னும் இங்கதாண்டி நின்னுக்குனுகிறான் அவன். அசைய மாட்டானாடியம்மா அந்த எடத்த உட்டு... இப்பிடி அப்பிடிக்கூடம்."

அவன் மாட்டைப் பிடித்துக் கட்டிவிட்டுப் போருக்குப் போய் வைக்கோல் பிடுங்கத் தொடங்கினான்.

"ஏன்யா அவனுக்கு மக்க மனுஷாள் ஆரும் கெடையாதா. வந்த நாளா ஒண்டியாவே கெடக்கரானே .. ஊருக்கீருக்குக்கூடம் போவாம..."

அவன் வைக்கோல் பிடுங்கினான்.

"நாலு மக்கா மனுஷாள் இருந்திருந்தா கட்டுத்திட்டம் பண்ணி வெச்சிருப்பாங்க... இந்த மாரில்லாம் பாக்க மாட்டான். பெறுமா கோவில் மாடு மாதிரி அவுத்து உட்டுட்டாங்க போலருக்குது... தண்ணி தெளிச்சி" கழுத்தை சொடுக்கிக்கொண்டாள்.

"ஊடு உண்டு வேல உண்டுன்னு செவனேன்னு கெடக்கறவளையே இந்த பார்வ பாக்கறானே... இன்னும் அங்கங்கே கேப்பார் மேப்பார் இல்லாம கெடக்குதே... அந்த மாரில்லாம் இருந்தா என்னா பண்ணுவான். சீ ஒடம்புல சீழா ஓடுது. ரத்தம் ஓடல..."

முகத்தைச் சுருக்கி உதட்டைப் பிதுக்கினாள். சோளத்தட்டை பொத்தென்று வைத்தாள்.

பிடுங்கிய வைக்கோலைக் கையில் சேர்த்து அணைத்து மாட்டுப் பக்கம் கொண்டு வந்து உதறினான் அவன்.

"இவன் வந்த நாளா அந்த பங்கஜம் போன்னக்கூடம் வெளில காணம்யா; உள்ளவே பூந்துக்னு... ஊட்ட உட்டுட்டு வர மாட்டன்றா... வந்தா கூடம் மின்னமாரி குந்தி ஆர அமர நாலு வார்த்த பேசமாடன்றா. காக்கா... கணக்கா பறக்கறா. என்னமோ மறந்து வச்சிட்டாப்போல. பாத்துருக்கிறியா நீ அதெல்லாம். ஒரே ஊட்டகிறாங்க ரெண்டு பேரும். என்னா நடக்குதோ, ஆரு கண்டாங்க அந்த காளியம்மாளுக்குத்தான் வெளிச்சம்.

வைக்கோல் உதறி முடித்தவன் கொஞ்சம் சரிந்த தோட்டப்படலை இழுத்து நிமிர்த்தி சரியாய் வைத்துக் கட்டிக்கொண்டிருந்தான்.

"எது இந்தக் காலத்துல தெய்வத்துக்கெல்லாம் பயப்புடுது. அது அது இருக்கிறவரிக்கும் கும்மாளம் கொட்டிட்டுப் போவுது. ஊரு சிரிச்சா கூடம் கவலை இல்லன்னு... எங்கூட்டல்லாம் வயசுக்கு வந்துட்டா வாசப்படிய தாண்ட உடுவாங்களா...! அந்த மாரில்லாம் வளந்த தனாலதான் முடியுது. செலதுங்கலாட்டமா... அடியம்மா... எப்பிடித்தான் மனசு வருதோ... கழுத்துல கட்டன தாலிக்கு துரோகம் பண்ண..."

உடம்பை ஆட்டி அவயங்களை நொடித்து பாவனையுடன் சிலிர்த்துக்கொண்டாள்.

"என்னுமா ஆடுதுங்க கேழ்வி மொற இல்லாம..."

அடுத்த கட்டு சோளத்தட்டுகளை அள்ளித் தூக்கிக்கொண்டு வரும் போது தெருப்பக்கம் யாரோ நிற்பதையும் குரல் கொடுப்பதையும் கொஞ்சம் ஒருக்களித்த கதவு வழியாகக் கண்டு பரவசமடைந்தாள்.

"தே யாரோ வந்திருக்கிறாங்க தே..."

"ஆராது" அவன் கழுத்தை மட்டும் திருப்பிக் கேட்டான்.

"நல்ல ஆளுய்யா நீ! ஆருன்னா எனக்கெப்பிடி தெரியும், நானு என்னா ஊர்ல இருக்கறவங்க எல்லாரியுமா தெரிஞ்சி வச்சிக்கினுகிறேன்... கட்டிக்கினு வந்ததுலேருந்து வாசப்படி தாண்டி அறியாதவ நானு... எங்கனா ஊரு பயணம் போவ தெருவுல நடக்கறதுன்னாலே அப்படியே ஒடம்பு இத்துப் போயிடற மாதிரியிருக்கும் எனக்கு. என்ன வந்து கேக்கறியே ஆருன்னு..."

தெருக்கதவு வழியாக தோட்டம் தெரிந்துவிடப் போகிறது என்பது போல சுவரில் ஒட்டிக்கொண்டாள்.

"போய் பாருதே! கூப்புட்றாங்க..."

அவன் படல் கட்டுவதை நிறுத்திவிட்டு எழுந்துவந்தான். அடுப்பங் கரையில் வைத்துவிட்டு அவனைத் தொடர்ந்து பின்னாலேயே அவளும் வந்தாள். கதவு வரைக்கும் வந்து மறைவில் உடம்பை வைத்துக் கழுத்தை மட்டும் வெளியில் வைத்து நின்றாள்.

"வாங்க...வாங்க நீங்கதானா. உட்காருங்க" அவன் சொன்னான். வெள்ளைச் சட்டை போட்ட சிவப்பு உடம்புக்காரர் திண்ணையில் உட்கார்ந்தார்.

"நம்ம இந்த கொரலூர் ரோடு போடறது விஷயமா மின்ன ஊர்ப் பஞ்சாயத்துல பேசிக்கினு இருந்தமே... அது விஷயமா எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கி ஒரு மகஜர் குடுக்கலாம்னு... அடுத்த வாரம் மந்திரி வர்ராராம் கூட்டேரிப்பட்டுக்கு..." அவர் கொஞ்சம் பேசினார்.

பளிச்சென்று சிகப்பாயிருக்கும் விரல்களால் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த வெள்ளைப் பேப்பரை எடுப்பதையும், பேனா எடுப்பதையும் பார்த்தாள். காய்ந்த தவிட்டுத் திப்பியும் வைக்கோல் சுனையும் உள்ள கையை கையெழுத்துப் போடுவதற்காக கோவணத்தில் துடைத்துக் கொண்டிருந்தான் அவன்.

"கையை அப்பவே கழுவக்கூடாதாதே!" வந்தவர் நிமிர்ந்து பார்த்ததும் தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டாள்.

"கொஞ்சம் தண்ணி கொண்டாரச் சொல்லுங்க, குடிக்க."

"ஏமே... கொஞ்சம் தண்ணியாம் கொண்டாந்து குடு தாகத்துக்கு..."

கதவை விட்டு நகர்ந்தவள் காலையில் கழுவிய வெண்கலச் செம்பை சட்டுப்பிட்டென்று புளிபோட்டுத் துலக்கி குடத்திலிருந்து தண்ணீர் சாய்த்துக்கொண்டாள். மூணாம் மாசம் வாங்கியிருந்த ஒரே ஒரு எவர் சில்வர் தம்ளரைத் தேடி எடுத்துக்கொண்டு கதவண்டை வந்து நின்றாள்.

"இங்க வாதே இங்க..."

"கொண்ணாந்து குடுமே அவருகிட்ட..."

"இங்க வாதேன்ன..."

உடம்பை அஷ்ட கோணலாக்கி வளைந்தாள். கதவருகிலேயே நெளிந்து நாணிக்கோணிக்கொண்டு அறியாத பெண் மாதிரி நின்றாள்.

கந்தசாமி தண்ணீரை வாங்கி அவரிடம் கொடுத்தான். "கெணத்துத் தண்ணி, கொஞ்சம் உப்பு கரிக்கும்." அவள் கதவு மறைவிலிருந்து காற்றுக்குச் சொன்னாள். தண்ணீர் குடித்த பிறகு வந்தவர் போய்விட்டார்.

"சரியான ஆளுதே நீ! மின்ன பின்ன தெரியாத ஆம்பள எதுறால வந்து நின்னு நீம்பாட்டுன்னு தண்ணி குடுரீன்னா ஆரால முடியுது... எனக்கென்னுமோ நெனச்சாலே ஒடம்பே சிலுக்குது. இன்னும்கூட அந்த அயக்கம் போவலையா. வேர்த்துப் போச்சி தெரியுமா எனக்கு..."

அவள் தோட்டத்துக்கு வந்து சோளத்தட்டுப் பக்கத்தில் அமர்ந்தாள்.

"நீ சொன்னதும் அப்படியே ஜென்மமே குன்னிப் பூடுத்தியா எனக்கு... என்னா நெனச்சிக்கின்றா இந்த ஆம்பள இப்பிடி சொல்லிப் புட்டாருன்னு... எடுத்துப்போட்டா மாறி பூடுத்து... ஏயா... என்னா நெனச்சிக்கினுயா அப்பிடி சொன்ன... கொண்ணாந்து குடுக்கறாளா இல்லியா பாப்பம்னா..."

அவன் குறையோடு விட்ட படலை கட்டிக்கொண்டிருந்தான்.

"கதவாண்ட நிக்கறதுக்கே உள்ளங்காலல்லாம் கூசுது எனக்கு. அப்பேர்ப்பட்ட பொம்பளைய இவர் என்னடான்னா ஊரு பேரு தெரியாத ஆம்பளைக்கி அரிவிகால தாண்டி வந்து தண்ணீ குட்றீன்னா... நல்லா இருக்குதே ஞாயம்... அந்தமாரிதான் இன்னொரு நாளைக்கி சொல்லப்போறியா..."

கிடந்த மீதி சோளத்தட்டுகளை ஒடித்து முடித்து தென்னம் அலவு எடுத்து இறைந்து கிடந்த செத்தைகளைக் கூட்டினாள்.

"சில பொம்பளைவ மொகந் தெரியாத ஆம்பளகிட்ட கூடம் என்னுமா பேசிப்புடுதுங்க. எடுத்த வாய்க்கி வெடுக்வேடுக்குன்னு... நமக்கு என்னடான்னா அப்பிடியே மர வட்ட ஊர்றாமாரி கிது போ மெனில... கட்டனவன உட்டுட்டு மத்தவன நிமிந்து பாக்கறதுன்னாகூடம் கண்ணு ஒப்பல..."

உடம்பைச் சிலிர்த்து அருவருத்துக்கொண்டாள்.

அவன் படல் கட்டுவதை நிறுத்தி தெருவுக்கு வந்து எரவாணத்தில் பனம் நாறு செருகி வைத்திருந்த இடத்தை தேடிக்கொண்டிருந்தான்.

துடைப்பத்தை எடுத்து வந்து வைத்தவள் வெளியே போய் வேலை எதுவும் இன்றி சும்மா நின்றாள். கண்களை இடுக்கிக்கொண்டு வெறிச்சென்று கிடந்த எதிர்வீட்டைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு நின்றாள்.

கோழிமுட்டைக் கண்ணன் மறுபடியும் தோன்றினான். கன்னத்தில் கைவைத்து, உள்ளங்கையில் முகவாயைப் புதைத்து, கண்களை அகல விரித்தாள். ஆச்சரியத்தோடு பார்க்கிற மாதிரி முகத்தில் ஒரு வியப்புக்குறி தோன்ற, அபிநயம் பிடிக்கிற பாவனையில் நின்றாள்.

பின்னால் நாறு கத்தையுடன் கந்தசாமி வந்தான்.

"பாரன்யா அவன... பழையபடியே வந்து நின்னுக்கினு மொறைக்கிரத... அப்பிடியே கொள்ளிக்கட்டைய எடுத்தாந்து கண்ணுல சுட்டா என்ன இவன..."

"சரிதான் உள்ள போமே பேசாத... சும்மா பொண போணன்னிக்கின்னு..." அவன் படல் கட்ட உட்கார்ந்தான். " இப்பதான் ஒரேடியா காட்டிக்கிறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்.

எழுதியவர் : ராஜேந்திரசோழன் (21-Oct-15, 3:52 pm)
பார்வை : 1496

மேலே