காதல் துரோகம்

திறந்து பார்க்க மனமில்லாத
என் பக்கங்களை
காற்று புரட்டுகிறது

ஒவ்வொரு பக்கத்திலும்
நீ கரைத்து விட்ட
என் பொழுதுகள்
எச்சங்களாக சிதறிக் கிடக்கின்றன

தீர்ந்து விட்டதாய் நீ சொன்ன
எனக்கான உன் சொற்களிலிருந்து
நீ உமிழ்ந்து விட்டுப்போன
கடைசிச் சொல் மட்டும்
தொக்கி நிற்கிறது
ஒவ்வொரு பக்கத்தின் ஓரத்திலும்

விரோதத்தின்
பச்சை வாசனையோடு
நீ என்னைப் போர்த்திக் கொண்ட....
அனிச்சை சுகத்துக்காய்
உடல்கள் மட்டும் மோதிக் கொண்ட....
சுடுபொழுதுகள்
காதலற்ற புணர்வின் உச்சமாய்
கிழிந்து கிடக்கின்றன

காற்றின் புரட்டல்களில்
எஞ்சியிருக்கும் சிறு பொழுதும்
மிஞ்சி விட்ட ஒரு சொல்லும்
கிழிந்து கிடக்கும்
புணர்வின் பக்கங்களும்
பறந்து விடுமோ என்ற அச்சத்தில்
உன் துரோகத்தின் பசை தடவி
கவனமாய் ஒட்டி வைக்கிறேன்

என்றேனும் நீ
திரும்பி வருவாய்
அன்று
உன் குற்றங்கள்
எனக்கிழைத்த தண்டனைகளைத்
திறந்து காட்ட...

____________________________________
- மீள்

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு - ஸ்டெ (22-Oct-15, 10:14 am)
Tanglish : kaadhal throgam
பார்வை : 1804

மேலே