ஒரு காதல் மரணமாகிறது
கண்ணுக்குள்ள காதல் வைத்து
கண்ணைப்போல காத்துகாத்து
காலம்தோறும் காதல் வளர்த்தவன் நான்தான்
நெஞ்சுக்குள்ள உன்னை வைத்து
நித்தம் நித்தம் தூக்கமின்றி
செத்து செத்து பிழைச்சவனும் நான்தான்
வானப்பந்தலில் நட்ச்சத்திர தோரணத்திற்கு நடுவில்
நிலவு மேடையில் வெண்மேக மணவறையில்-நம்
திருமணமென்று கனவு வளர்த்தவன் நான்தான்
தேவர்கள் மந்திரம் ஓத
தேவதைகள் அர்ச்சனை தூவ - உன்னை
கரம் பிடிப்பேன் என்று கனவு வளர்த்தவனும் நான்தான்
பாதையில்லாம் பூவைத் தூவி
பாவை உனை நடக்கவைப்பேன்
என்றுசொன்னவன் நான்தான்
வெண்முகிலில் மெத்தை அமைத்து
பெண்மணி உன்னை தூங்கவைப்பேன்
என்று சொன்னவனும் நான்தான்
நம் காதலுக்காக யாகம் செய்வேன் - அந்த
யாகத்தில் காதலை எதிர்ப்போரை
தீக்கிரையாக்குவேன் என்று சொன்னவன் நான்தான்
உன்னைப் பிரிவதும் - என்
உயிரைப் பிரிவதும்
ஒன்றுதான் என்று சொன்னவனும் நான்தான்
படைத்தவன் வந்தாலும் - நம் காதலை
உடைக்க முடியாதென்று
கவிதை வடித்தவன் நான்தான்
மடிந்தால் உன்மடியில் மடிவேன் - இல்லை
உனக்காக மடிவேன் - இல்லையேல்
உனக்குமுன் மடிவேனென
கதை வடித்தவனும் நான்தான்
இதுவரை
காதல் பேசிய நான் - என்
காதலை தூக்கி வீசுகிறேன்
மரணமே இல்லையென்று
நினைத்த காதலுக்கு - நான்
மரணதண்டனை விதிக்கிறேன்
என்னை கொள்ளை கொண்ட
காதலுக்கு - நானே
கொள்ளியிடுகிறேன்
என்தூக்கத்தை
பறித்த காதல் - பலருக்கு
துக்கத்தை விதைக்கும் என்பதால்
என் காதலை தூக்கிலிடுகிறேன்
காதல் கொண்டபோது
கண்ட சுகம்
காதலை சொன்னபோது
அனுபவித்த இன்பம்
காத்திருந்தபோது
அடைந்த மகிழ்ச்சி
கைபிடிக்க நினைக்கும் போது
கிட்டுதில்லையே
யதார்த்தம் புரியாதவனாய்
காதல் கொண்டேன் - இன்று
யதார்த்தம் புரிந்ததால்
காதலை கொல்கிறேன்
நான்
காதல் கொள்ளும்முன்
சிந்தித்திருந்தால் - இன்று
காதலை கொல்வதைப்பற்றி
சிந்தித்திருக்கமாட்டேன்
என்செய்வது
கண்டம்தாண்டி அண்டம்தாண்டி
பறந்துசெல்வதற்கு
கற்பனைச்சிறகுகள் தரும்காதல்
காலஓட்ட சிந்தனையை அல்லவா
முடக்கிவிடுகிறது
நீ
என்னை மறந்துவிடு
நான்
உன்னை மறந்துவிடுகிறேன்
நம்காதல்
தானாகவே இறந்துவிடும்
காலம் கனியும் - நம்
காதல் கனியாகுமென
காத்திருக்க நான் தயாரில்லை
காதலுக்காக என்னை
தீக்கிரையாக்கவும் நான் தயாரில்லை -அதனால்
என்காதலை
தீக்கிரையாக்கிறேன்