என் காதல்

மார்கழி மாதத்தில்
காலையில் கண்ட
பனிமலர் நீ !

உன் விரல்பட்ட
கல்லும்
ஒளிரக்கண்டேன் -
வாசலில் நீ இட்ட
கோலத்தில் !

தூக்கி எறியும்
சாணத்தில் கூட
கலை நயம் - அதன்
மத்தியில் நீ வைத்த
பூசணிப்பூ !

என் வீட்டுத்
தோட்டத்தில் இருந்து
உன் மீது விழுந்தது
மலரல்ல பெண்ணே -
என் மனம் !

காலங்கள் கரைந்தாலும்
கரையாத உன் நினைவில்
பூத்திருந்தேன்;
என் காதலை உரைக்கும்
நாளுக்காகக்
காத்திருந்தேன் !

நெஞ்சுக்குள் சொல்லெடுத்து
உன்னிடம் நான் தொடுக்க
காற்றில் விட்டுச் சென்றாய்;
அது கரையாமல்
உன்னைத் தொடரும்
நீ அறியாமல் !

உள்ளுக்குள் ஆசை வைத்து
வெளிக்காட்ட மறுத்துப்
பொய் கூறும் பெண்ணே -
உன்
மெய்யுக்குள் இருப்பது
என் ஜீவனடி !

என் காதலின்
ஆழத்தை நீ காண
உன் நிழல் எனும்
கடலில் குதிக்கின்றேன்;
என்று நீ எனை
உணர்வாயோ?

புரிந்து கொண்ட
பிரியத்தை பிரிவோடு
உரைக்கின்றாய்
"என் பெற்றோர்
சம்மதித்தால் உன்னை
மணக்கின்றேன்" என்று !

இந்த ஒரு வார்த்தை
போதுமடி பெண்ணே
உன் வீட்டினில்
நானிருப்பேன்
உனக்கு முன்னே
உன் பெற்றோர்
சம்மதம் வாங்க
என் பெற்றோருடன் !


எழுதியவர் : தமிழ்மூர்த்தி (5-Jul-10, 11:45 pm)
சேர்த்தது : moorthy.m
Tanglish : en kaadhal
பார்வை : 639

மேலே