நாஞ்சில் நாடன் நாவல்களில் கலைகள்

நாஞ்சில் நாடன் நாவல்களில் கலைகள்
முன்னுரை
மனிதனுடைய உணர்வின் வெளிப்பாடே கலை. இந்தக் கலை காலப்போக்கில் வடிவங்களாய் உருப்பெற்றன. நாட்டுப்புறக் கலைகள் நாட்டுப்புற மக்களின் ஜீவ ஊற்றாகும். மனித வாழ்க்கை நிலை அற்றது. ஆனால் அவனால் படைக்கப்பட்ட அவன் வெளிக்கொணர்ந்த கலை அழிவற்றது. தமிழில் கலை என்பதற்கு ‘கற்றற்கு உரியவை எல்லாம் கலை’ எனப்படும். கலை என்ற சொல் உணர்ச்சிக்கும், கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் கவின் கலைகள் (யுளவாநவiஉ யசவள) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் தொழில் நுட்பக் கலைகள் என்றும் இரும் பெரும் வகைப்படும். கலைகள் பன்முகத் தன்மை கொண்டவை.
ஆசிரியர் குறிப்பு
இன்றைய முன்னணித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகவும், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் படைப்பாளியாகவும் விளங்குபவர். திரு. நாஞ்சில் நாடன் அவர் தமிழ் எழுத்துலகில் வட்டார மொழி படைப்பாளராக தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துக் கொண்டு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்பிலக்கிய உலகில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இவர் ஆறு நாவல்களையும், நூற்றுப்பன்னிரண்டு சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிப்பெயர்ப்பு நூல்கள், ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்வியல், மொழிநடையை எடுத்துக்காட்டுகின்றன. இவரது நாவல்களில் வரும் கலைகளைப் பற்றிய செய்திகள் பின்வருமாறு.
இசைக்கலை
நாஞ்சில் நாடனின் முதல் நாவல் தலைகீழ் விகிதங்கள். இந்நாவல் 1977-ல் வெளியிடப்பட்டது. இந்நாவல் வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக சமுதாயத்தில் ஒரு இளைஞன் படும் பாட்டை எடுத்துக் கூறுவதாகும். இந்நாவலில் ஆசிரியர் ஒவ்வொரு மாதங்களைச் சுட்டியும் ஒவ்வொரு நிகழ்வுகளைப் படைத்துள்ளார். அந்த வகையில் கலைகளில் ஒன்றான பாடல் கலை அதாவது இசைக் கலையைப் பற்றி இந்நாவலில் படைத்துள்ளார். நாட்டுப்புறப் பாடல்களில் பல பக்திப் பாடல்களாக விளங்குகின்றன. பக்திப் பாடல்கள் நாட்டுப்புற மக்களின் இறையுணர்வை மட்டுமின்றி மக்களின் அபிலாஷைகளையும் வெளிப்படுத்துகின்றன என்று டாக்டர் சு. சக்திவேல் கூறுகின்றார். மனதில் எந்தவித வஞ்சகமும் இல்லாமல் முழு மனதோடு இறைவனை துதித்துப் பாடினால் மனமிரங்கி இறைவன் அருள்தருவான் என்பதற்கேற்ப நாஞ்சில் நாடன் தனது நாவலில் மார்கழி மாதப் பனிக்குளிரில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலையிட்டு செல்வதையும் அவர்கள் பஜனைப் பாடல்கள் இசையுடன் பாடுவதையும் விளக்குகின்றார்.
“ஐயப்பன் மார்கள் கூட்டம் கூட்டமாகக் குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்கள் குளித்து முடித்தவர்கள்
“சாமியேய் …………………….சரணமய்யப்பா!
அரிஹரசுதனே ………………….சரணமய்யப்பா!
வில்லாளி வீரா………………….சரணமய்யப்பா!
வீரமணிகண்டா………………….சரணமய்யப்பா!
என்று கோரஸாக கூவி சரணம் விளித்தவாறிருந்தனர்” என்கின்றார். (த.கீ.வி.30)
முரசு கொட்டுதல்
சங்க காலம் முதல் இன்றைய காலம் வரை தெய்வ வழிபாட்டின் போது முரசு கொட்டுதல் வழக்கம். தெய்வங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, பூஜைநேரத்தின் போது, பலி கொடுத்தலின் போது முரசு கொட்டப்படுகின்றது. முரசு கொட்டுதல் என்பது ஒரு கலை. இது நாட்டுப்புறங்களில் மட்டுமல்லாமல், நகர்ப் புறங்களிலும் தெய்வ வழிபாட்டின் போது கொட்டப்படுகின்றன. நாஞ்சில் நாடன் தனது நாவல்களான ‘தலைகீழ் விகிதங்கள்’ (1977) என்ற நாவலிலும், ‘சதுரங்கக் குதிரை’ (1993) என்ற நாவலிலும் தெய்வ வழிபாட்டில் முரசு கொட்டுவதாக கூறியுள்ளார்.
இந்நாவல்களின் ஆசிரியர் நாஞ்சில் நாட்டைப் பின்புலமாக வைத்து இந்நாவலைப் படைத்துள்ளார். நாஞ்சில் நாட்டுத் தெய்வங்களை வழிபடும் முறைகள் பற்றி விரிவாக தனது எல்லா நாவல்களிலுமே விளக்கியுள்ளார். இதிலிருந்து முரசு கொட்டி தெய்வத்தை வழிபடும் பழக்கம் நாஞ்சில் நாட்டிலும் நிலவுகின்றன என்பதை அறிய முடிகின்றது. இந்த முரசு கொட்டி வழிபடும் முறை காலங்காலமாகத் தொடர்ந்து இன்றைய காலம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாணுமலையான் கோயிலின் பூஜையின் போது முரசு கொட்டுவதை ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்.
“தாணுமலையசுவாமி கோவிலின் சாயரட்சை பூஜையின் முன்னறிவிப்பாக வெண்கல மணியும் கொட்டு முழக்கும் கூடிக் கலந்து தெருக்களில் வழிந்தோடத் தலைப்பட்டன” (த.கீ.வி-31) என்றும்,
“முரசின் முடுக்கம் காற்றையும், காதையும் துளைத்தது. ஆங்காங்கே நாட்டியிருந்த தீப்பந்தங்களின் சிவப்பு அச்சமூட்டியது.” (ச.கு-129)
என்கின்றார்.
நாதசுரம்
நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதும் இசைக்கும் ஆதாரமானது ஆகும். காதிற்கு இனிமையைத் தருவது த்வனிநாதம் என்று அழைக்கப்படும். நாதத்திலிருந்து சுருதிகளும் சுருதியிலிருந்து ஸ்வரங்களும் ஸ்வரங்களிலிருந்து ராகங்களும் உற்பத்தியாகின்றன. நாதம் இரண்டு வகைப்படும் ஒன்று ஆகத நாதம், மற்றொன்று அனாகத நாதம், ஆகதநாதம் என்பது மனிதனுடைய முயற்சியால் உற்பத்தியாக்கப்படுவது அனாகத நாதம் என்பது நாம் கேட்கும் சங்கீதம், பாடும் சங்கீதம், வாத்தியங்களில் வாசிக்கப்படும் சங்கீதம்.
பொதுவாக நாட்டுப்புற சடங்குகளில் நாதசுரம் வாசிப்பது வழக்கம். கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் போன்றவற்றிற்கு நாதசுரம் வாசிக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருமணத்தின் போது நாதசுரம் வாசிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் நாஞ்சில் நாடனின், ‘என்பிலதனின் வெயில்காயும்’ (1979) என்ற நாவலின் மூலம் அறியலாம். இசைக்கலையில் ஒன்று நாதசுரம் எனலாம்.
இந்நாவலில் சண்முகம் முதன்மைக் கதாபாத்திரத்திரம் இவனுடன் படிக்கும் மாணவியான ஆவுடையம்மாள் இவள் பணக்கார வீட்டுப் பெண். இவளுக்கு திருமண நிச்சயம் முடிந்து விட்டது. திருமணத்திற்கு முந்தைய நாள் நிகழ்வுகளை ஆசிரியர் பின்வருமாறு விளக்குகின்றார்.
“திருமணத்திற்கு முன்தினம் மாலை ஆறுமணிக்கு ஒலி பெருக்கி கட்டியாகி விட்டது. முதலில் ஒரு இசைத்தட்டு காரு குறிச்சி அருணாசலம் நாதசுரம் “ உள்ளமெனும் கோயிலிலே உறைகின்றாய் முருகா …….. என்ற ரீதியில் ஏழெட்டு இசைத் தட்டுகள்” என்கின்றார். (எ.வெ.கா – 177-178)
வில்லுப்பாட்டு
நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று வில்லுப்பாட்டு இதன் தாயகம் குமரி, நெல்லை ஆகும். வில்பாட்டு, வில்லுப்பாட்டு, வில்லடிப்பாட்டு, வில்லடிச்சான் பாட்டு, என்று பல பெயர்கள் உண்டு. 14-ஆம் நூற்றாண்டில் அரச புலவர் என்னும் ஒருவரால் வில்லுப்பாட்டு தோற்றுவிக்கப்பட்டது. தெய்வ திருவிழாக்களின் போது வில்லுப்பாட்டு பாடப்படுகின்றது. வில்லுப்பாட்டு இல்லாத திருவிழாக்களே இல்லை எனலாம். நாட்டுப்புறங்களில் பொதுவாக வில்லுப்பாட்டு பாடப்பட்டு வந்தன. கால மாறுதலுக்கேற்ப வெகுவாக குறைந்து விட்டன. ஆனால் இன்னும் சில இடங்களில் (தென் இந்தியாவில்) வில்லுப்பாட்டு பாடப்பட்டு வருகின்றது. மாடத்தியம்மன் கொடைக்கு பெண்கள் வில்லுப்பாட்டு பாடுவர் என்று ஸ்டுவர்ட் பளாக்பர்க் கூறுகின்றார்.
நாஞ்சில் நாடனின் ‘மாமிச படைப்பு’ என்ற நாவலில் வில்லுப்பாட்டின் உறுப்புக்களாக அமைந்த கருவிகளை பற்றியும் பாடப்படும் முறையைப் பற்றியும், சூழல்கள் பற்றியும் விளக்கியுள்ளார். டாக்டர் சு. சக்திவேல் கூறிய கருத்துக்களும், நாஞ்சில் நாடன் கூறிய கருத்துக்களும் ஒன்றுபோல் இருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பின்புலமாக வைத்து நாவல் படைக்கப்பட்டதால் இங்கு வில்லுப்பாட்டின் தாயகம் என்பதாலும் ஒரே போல் அமைந்திருக்கலாம்.
‘மாமிசப் படைப்பு’ என்ற நாவலில் கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோணம் என்ற சிற்றூரை பின்புலமாக அமைத்து அங்குள்ள மக்களைக் கதாபாத்திரமாக அமைத்துள்ளார் ஆசிரியர். வேளாண்மைத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஆசிரியர். அறுவடை முடிந்த நேரம் மறுபடி முன்மாரி மழைபெய்து, நிலத்தில் நீர்பாய்ச்சி நெல் விளைய வேண்டும் என்பதற்காக முத்தாரம்மன் கோயிலில் கொடை நடத்துவதற்கு ஊர்மக்கள் முடிவெடுத்து விழா நடத்துகின்றார்கள். அவ்விழாவில் வில்லுப்பாட்டு அரங்கேற்றம் நடைபெறுகின்றது. அந்நிகழ்வுகள் பின்வருமாறு.
“வில்லுப்பாட்டு கோலப்பபிள்ளை புதிதாக பல்கட்டி இருந்தார். சொற்கள் சுத்தமாக விழுந்தன. பாடிப்பாடி பதப்பட்ட தொண்டை, நெளிவுகள், ஏற்ற இறக்கங்கள் பிசிறற்று – சுடலையின் கதை நடந்து கொண்டிருந்தது. கோயிலைப் பார்த்து, கிழக்குப் பக்கம் மேடைபோட்டு, மேடை மேல் வில், வில்லைத் தொட்டு ஒரு பக்கம் ஆர்மோனியம், மறுபக்கம் குடம், பின்னால் கட்டைத் தாளம், உடுக்கு, சிங்கி, வில்லுப்பாட்டுக் காரருக்கு முன்னால் ஆண்கள் ஒரு பத்தி. பெண்கள் ஒரு பத்தி. நடுவில் கோயிலுக்குப் போகவும் வரவும் நடைபாதை.” என்கின்றார்.
நாஞ்சில் நாடானின் நாவல்களைப் படிக்கும் போது ஆசிரியர் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெளிவாகின்றது. ஒரு பாடலைக் குறிப்பிடும் போது இசையுடன் அதாவது தாளத்துடன் கூறுகின்றனர்.
நாஞ்சில் நாடன் நாவல்கள் நாஞ்சில் நாட்டைப் பின்புலமாக வைத்துப் படைக்கப்பட்டுள்ளன. நாஞ்சில் நாட்டில் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தன என்பதை இந்நாவல்களின் மூலம் அறிய முடிகின்றது. நாஞ்சில் நாட்டைப் பொறுத்தவரை சில பணக்கார வீடுகளில் மட்டுமே திருமணத்தின் போது (சடங்குகள்) இசைக் கச்சேரிகள் (கலைகள்) நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் வில்லுப்பாட்டு கோயில் திருவிழாக்களில் நடத்தப்படுவதால் அனைவருக்கும் பொதுவானதாகும். இன்றைய சூழலில் இக்கலைகள் வெகுவாக வளர்ச்சிக் குன்றிய நிலையே காணப்படுகின்றது. இக்கலைகள் மென்மேலும் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் கலைகளைப் பற்றிய புதிய படைப்புகள் வெளிவந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
பின்குறிப்பு
த. கி. வி. - தலைகீழ் விகிதங்கள் (1977)
எ. வெ. கா - என்பிலதனை வெயில் காயும் (1979)
மா. பா. - மாமிசப் படைப்பு (1981)
ச. கு - சதுரங்கக் குதிரை (1993)

எழுதியவர் : பெ. பால்முருகன் (30-Oct-15, 11:54 am)
சேர்த்தது : கவி பாலு
பார்வை : 293

மேலே