நாஞ்சில் நாடனின் இசை ஈடுபாடு

நாஞ்சில் நாடனின் இசை ஈடுபாடு
இன்றைய முன்னணித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகவும், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் படைப்பாளியாகவும் விளங்குபவர் திரு. நாஞ்சில் நாடன். இவர் தமிழ் எழுத்துலகில் வட்டார மொழி படைப்பாளராக தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துக் கொண்டு கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் படைப்பிலக்கிய உலகில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இவர் ஆறு நாவல்களையும், நூற்றுப்பன்னிரண்டு சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்வியல், மொழிநடையை எடுத்துக்காட்டுகின்றன. இவரது நாவல்களில் வரும் இசைக்கலையைப் பற்றிய செய்திகள் பின்வருமாறு.
ஆயர்கலைகள் அறுபத்திநான்கு. இவற்றுள் முதன்மை வகிப்பது இசை. இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை எனலாம். கல்லைக் கூட கரையவைப்பது இசையே. நாஞ்சில் நாடனும் சிறுவயது முதலே இசையின் மீது ஈடுபாடுள்ளவர். இவருக்கு திரையிசையிலும் நாட்டம் அதிகம் இருந்திருக்கின்றது. தன்னுடைய அனைத்து நாவல்களிலும் இசைக்குறிப்புகளை இடையிடையே கையாண்டுள்ளார். கர்நாடக சங்கீதம் முறைப்படி பயின்றுள்ளார். சிறு வயது முதலே கீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமு மணியம் ஐய்யர் போன்றோரின் பாடல் கச்சேரிகளே இவருக்கு இசையின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இவரது தந்தையும் இசை ரசிகர். இசை கேட்பவர். ஏராளமான இசையை சேகரித்துள்ளார். நாஞ்சில் நாடன் தற்போது கோயம்புத்தூரில் இசைச் சங்கத்தின் உறுப்பினராக செயலாற்றி வருகின்றார்.
“எத்துனை சிறந்த கலைஞனாயினும் பாத்திரப்படைப்பின் பொழுது, அவனுக்கு வேண்டிய இன்றியமையாத சாதனங்களுள் ஒன்று, நிறைந்த உலகானுபவம், எந்தச் சூழ்நிலையில் அவன் பாத்திரங்களைப் படைக்க விரும்புகின்றானோ அந்தச் சூழ்நிலை பற்றிய முழு அறிவும் ஆசிரியருக்கு வேண்டும். அதாவது உலகத்தில் அந்தச் சூழ்நிலை எங்கு காணப்படுகின்றனவோ அங்கு அவன் பாத்திரங்கள் நிலத்தில் கிடக்கும் மீனைப் போல் தவித்துவிடும்” என்று அ.ச. ஞானசம்பந்தன் கூறுகின்றார். இவரின் கூற்றுப்படி நாஞ்சில் நாடனின் அனைத்து நாவல்களும் கண்டு, கேட்டு, உய்துணர்ந்த செய்திகளையே நாவல்களில் புனைந்துள்ளார். காரணம் ஆசிரியர் நாஞ்சில் நாட்டை சார்ந்தவராகையால் அவருடைய அனைத்து நாவல்களிலும் நாஞ்சில் நாட்டிலுள்ள பேச்சு வழக்குகள், ஊர் பெயர்கள் ஆகியவற்றை இணைத்து நாஞ்சில் நாட்டு மண் வாசனை குன்றாமல் நாவலைப் படைத்துள்ளார். இவரின் நாவல்கள் பொழுது போக்கிற்காக மட்டுமல்லாமல் மக்களின் வாழ்;வைப் பிரதிபலிப்பும், சமுதாயப் பார்வையும் மனிதாபிமானத்தையும் எடுத்துக்காட்டுகின்றார்.
நாஞ்சில் நாடனின் முதல் நாவல் ‘தலைகீழ் விகிதங்கள்.’ இந்நாவல் வேலையில்;லாத் திண்டாட்டத்தின் காரணமாக சமுதாயத்தில் ஒரு படித்த இளைஞன் படும் பாட்டை எடுத்துக் காட்டுகின்றது. இந்நாவலில் ஆசிரியர் ஒவ்வொரு மாதங்களைச் சுட்டியும் ஒவ்வொரு நிகழ்வுகளைப் படைத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கலைகளில்; ஒன்று இசைக்கலை. இசை என்பது நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்று. இது பக்திப் பாடல்களாகவும் ஒலிக்கப்படுகின்றன. பக்திப் பாடல்கள் நாட்டுப்புற மக்களின் இறையுணர்வை வெளிப்படுத்துகின்றன என்று சு. சக்திவேல் கூறுகின்றார். மனதில் எவ்வித வஞ்சமும் இல்லாமல் முழு மனதோட இறைவனை துதித்துப் பாடினால் மனமிரங்கி இறைவன் அருள்தருவான் என்பதற்கேற்ப நாஞ்சில் நாடன் தம் நாவலில் மார்கழி மாதப் பனிக்குளிரில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலையிட்டு செல்வதையும் அவர்கள் பஜனைப் பாடல்கள் இசையுடன் பாடுவதையும் விளக்குகின்றார்.
ஐயப்பன்மார்கள் கூட்டம் கூட்டமாகக் குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்கள் குளித்து முடிந்தவர்கள்,
“சாமியேய்……………….சரணமய்யப்பா!
ஆரிஹரசுதனே…………..சரணமய்யப்பா!
வில்லாளி வீரா………….சரணமய்யப்பா!
வீரமணிகண்டா…………..சரணமய்யப்பா!
என்று கோரஸாக கூவி சரணம் விளித்தவாறிருந்தனர்” என்கின்றார். (த.கீ.வி.30)
‘மிதவை’ என்ற நாவலில் ஆண்டிப்பாட்டா பெரிய பக்தர். அதிகாலையில் எழுந்து குளித்து நெற்றியில் மார்பில் திருநீறணிந்து ரொம்ப ஐசுவரியமாக இருப்பார். மனநிலை அமைத்து விட்டால் பாட்டும் தாளமும் உல்லாசமாக வரும்.
“மீசையுள்ளாண் பிள்ளைச் சிங்கங்கள் என்கூட
வெளியினில் வாருங்கள் காணும்
நாசி நிரம்பவும் மயிர்தான் இரண்டுகால் நடுவிலும்
ஒரு கூடை மயிர்தான்
ரோசங்கெடுவார்கள் என் கடை மயிர்தான்
குணங்குடி கொண்டாலும் என்னுயிர்க் குயிர்தான்
மீசையுள்ளாண் பிள்ளைச் சங்கங்கள் என்கூட
வெளியினில் வாருங்கள் காணும்…”
என்று பெரிய குரலில் ஆங்காரத்தோடு எடுப்பார். ஆல்லது-
“ஏதேது செய்திடுமோ பாவி விதி
ஏதேது செய்திடுமோ
தேவடியாள் வீட்டு நாயாகச் செய்யுமோ
ஏதேது செய்திடுமோ பாவி விதி
ஏதேது செய்திடுமோ” (மிதவை-11)
என்று மாடசாமியும், ஆண்டிபாடாவும் சந்தித்;துக்கொண்டால் ஏற்படுகின்ற விளைவுகளைப் பாடல்களின் வழி ஆசிரியர் விளக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்நாவலில் மற்றொரு கதாப்பாத்திரமான செட்டியார். இவர் இன்சூரன்ஸ் பாலிசி பிடிப்பவர். சுடலையாண்டியின் பெரியப்பாவிடன் இன்சூரன்ஸில் சேர்ப்பதற்கான பாடலைப் பாடிக்காட்டுவதாக பின்வரும்பாடல் அமைகின்றது.
“ஒன்றே செய்க அதை நன்றே செய்க
நன்றே செய்க அதை இன்றே செய்க
இன்றே செய்க அது இன்ஷ்யூர் செய்க
இன்ஷ்யூர் செய்க அதை என்னிடம் செய்க”
என்று பாட அதற்கு எதிர்ப்பாட்டு பாடுகின்றார் பெரியப்பா
“அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடப்பிணை யாளொடு மந்தனம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே” (மிதவை-33)
என்ற பாடலை பாடுகின்ற நிலை நகைச்சுவையைச் சித்தரிப்பதாக விளக்கப்படுகின்றது. இதில் ஆசிரியர் கையாண்டுள்ள பாடல்களைப் பார்க்கும் பொழுது ஆசிரியர் இசையின் மீது ஈடுபாடுள்ள காரணத்தால் நிகழ்வுகளுக்கிடையில் பாடல்களை தகுந்த சூழலில் பயன்படுத்தியுள்ளார் எனலாம்.

எழுதியவர் : பெ. பால்முருகன் (30-Oct-15, 11:49 am)
சேர்த்தது : கவி பாலு
பார்வை : 114

மேலே