மல்லிப் பூ விற்பவன்

இன்றைய பொழுதில் இது அவனுக்கு
பத்தாவது பேருந்தாக இருக்க கூடும்...

கையில் ஏந்திய மல்லிப் பூவும்
வாயில் மல்லிப் பூ என்ற வார்த்தையும்
அவன் போகும் இடமெல்லாம்
பூத்துக் கொண்டே இருக்கிறது...

ஒரு நாள் பூவை
விதவை எனத் தெரியாமல்
விற்க முயன்றதற்காக அவன்
வருத்தப் பட்டுக் கொண்டதும் உண்டு...
அதை விட
இறந்த பிணத்திற்கு பூ தூவும் சமூகம்
உயிருள்ள பெண்ணிற்கு
மறுக்கும் மடத்தனத்தைக் கண்டு
கோவப் பட்டதும் உண்டு
இன்னும் அதை விட
ஒரு வேலை தானே இறந்தால் கூட
பூ விற்றவன் மனைவிக்கே
பூ இல்லையோ என்று கலங்கியதும் உண்டு....

பண்டம் மாற்றும் முறை
இப்போதும் இருந்திருந்திருந்தால்
அவன் மிகவும் சந்தோசப் பட்டிருக்க கூடும்...
பள்ளி கட்டணத்திற்கு
அள்ளி கொடுத்திருப்பான் மல்லியை...

விற்பனையாகும் பட்சத்தில்
பூக்களுக்கு முன்பே
அவன் முகம் மலர்ந்து விடக்கூடும்...
அதுவே
விற்பனையாகாத பட்சத்தில்
பூக்களுக்கு முன்பே
அவன் முகம் வாடி விடக்கூடும்...

மீந்து போன நாட்களில் வரும்
அழுகையின் கண்ணீரைக் கூட
ஆனந்த கண்ணீராக மாற்ற
அவன் பழகி கொண்டிருக்க கூடும்...
தன் மனைவிக்கும் மகளுக்கும்
தானே பூ வாங்கி வந்தோமென்று...

முரண்பாடு என்பது
முழுதும் புரிந்திருக்க வேண்டும் அவனுக்கு...
வாசத்தைக் கையில் வைத்திருந்தாலும்
வாழ்க்கை என்னவோ
நாறிக் கொண்டுதானே இருக்கிறது...

ஒரு சாண்
ஒரு முழத்தை விட பெரியது
தனக்கு மட்டும்தான் என
அவன் உணர்ந்திருக்க கூடும்
அதனால்தான்
ஒவ்வொரு முறை பசிக்கும்போதும்
அளந்துக் கொண்டே இருப்பான்
அவன் வயிற்றையும்
அன்று விற்காத பூச்சரத்தையும்...

********************* ஜின்னா *********************

எழுதியவர் : ஜின்னா (6-Nov-15, 12:10 am)
பார்வை : 532

மேலே