பாடையென்னை அழைக்குதடி

எட்டு வயசு இருக்கறப்போ
கட்டுறவன் இவன்தான்னா
வெக்கப்பட்டு ஓடிடுவே
விரட்டி வந்து நான்தொடுவேன்

எலந்தைப்பழம் பறிக்கையிலே
எனக்குன்னு கேட்டு நிப்பே
கொழந்தமனசு உனக்குன்ன
குமிழ் சிரிப்பு சிரிச்சிடுவே

இட்டேரிப்பக்கந்தான்
இருக்குதந்த பெரிய முனி
இருட்டுல தான் போனாக்க
மெரட்டுதந்த மினிச்சாமின்னு
வழித்துணையா எனையழைப்பே
வாழ்க்கைக்குந்தான்னு நான் நெனைப்பேன்

உன் பள்ளிககூட சைக்கிளுக்கு
பஞ்சரொட்டி நான்கொடுப்பேன்
ஆயில் விடறது ஓவராயில்
அத்தனையு எம் பொறுப்பு

எம் பத்தாப்பு பெயிலுக்கு
பலபேரு திட்டித தீர்க்க
அழாதேன்னு கணதொடச்சு
ஆறுதலா நின்னது நீ மட்டுந்தான்

வாழைத்தண்டா நீ வளந்து
வாலிபமா நின்னப்ப
வரிசையோட காத்திருந்தேன்
பரிசம்போட நாள் பார்த்தேன்

முறையா பொண்ணு கேட்க்க
மூத்தவுக வந்தபோது
பத்தாப்பு பெயிலுக்கு
பட்டதாரி கேட்க்குதான்னியாம்

விசயங்கேட்ட எம்மனசு
வெடிச்சித்தான் போனதடி
பாசம் வளக்க தெரிஞ்ச எனக்கு
படிப்ப வளக்க தெரியலையே

ஆசை வெச்ச எம்மனசு
அரளி கேட்டு நிக்குதடி
பாதகத்தி உன்னாலே
பாடையென்னை அழைக்குதடி !

எழுதியவர் : (7-Nov-15, 3:03 pm)
பார்வை : 51

மேலே