வஞ்சி மன்னன் - சரித்திரத் தொடர்- பாகம் 1 நடுவிலிருந்து போகும் கதை

..................................................................................................................................................................................................
பழனி மலையை அடுத்த சக்திகிரி மலைச் சரிவு. அடிவாரத்திலிருந்து அமராவதி தீரம் வரை அடர்ந்த காடு. வெவ்வேறு வகை மரங்கள் தங்கள் எல்லைகளை நிர்ணயம் செய்து கொண்டு ஓங்கி வளர்ந்திருந்தன. இதோ, இத்தோடு தென்னந்தோப்பு முடிந்து மூங்கில் காடு புறப்பட்டது. யானைக் கூட்டம் இளைப்பாறும் மூங்கில் காடு...! இடையில் பின்னிப் பிணைந்து வளர்ந்த காட்டுச்செடிகளின் பூக்கள் நிலவொளியில், சிதறிய நட்சத்திரங்கள் போல் தென்பட்டன. எங்கேயோ சந்தன மரங்கள் இருக்க வேண்டும்..! சந்தனக் காற்று தவழ்ந்து வந்தது.

அவள் நின்று நின்று நடந்தாள்.

பாதங்கள் பழக்கப்பட்ட பாதையல்ல என்று பகர்ந்தது. இரு மருங்கும் பார்த்து பார்த்து நடந்தாள். யாரையோ தேடுவதைப் போல..! மிருகத்தின் தோலில் செய்த மேலாடையை வில்லைப் பிணைக்கும் நாண் கொண்டு முன்புறம் தைத்திருந்தாள். கீழே வட்டுடை...!

புருவங்களில் வெண்சாந்து வரிசையிட்டு, திலகம் அணிந்திருந்தாள். பூவோடு கூடிய தாமரைத் தண்டால் குழல்கற்றை முடித்திருந்தாள். காட்டுப்பூ மாலையும், பாசிமணியும் தரித்திருந்தாள். காலில் சிலம்பு..!

கையில் பந்தக்கூடு வைத்திருந்தாள். கல்லுருளையில் சிறைப்பட்ட நெருப்பு கானகம் தாவாது.

மனதில் பள்ளத்து நீர் போல் பாணிணி முனிவரின் வார்த்தைகள் பாய்ந்து வந்தன.

“ மனதுக்குச் சதிகாரர்கள் பஞ்ச புலன்கள்..! மன்னனுக்குச் சதிகாரர்கள்... ”

“ சதிகாரர்கள் யார் முனிவரே? ”

“ காட்டிலிருக்கும் மீனும், ஆற்றிலிருக்கும் மானும்..! ”

“ முனிவரே.., அடியாள் மாற்றிக் கேட்கிறேனோ? ”

“ மிகச் சரியாகக் கேட்கிறாய்..! காட்டிலிருக்கும் மீனும், ஆற்றிலிருக்கும் மானும்..! கண்ணையும் காதையும் விரித்து வை..! கண்டுபிடி பெண்ணே..! கண்டதைச் சொல்லி விடு, காவலனுக்கு..! ”

மாறுவேடமிட்டு வரும் மன்னர் மதுரமொழிச் சேரலாதன் இங்கு வருவாரோ? இன்று வருவாரோ?

பின்பக்கமாக ஒரு உருவம் அவளை இழுத்தது.... இன்னொரு கை குறுவாளை உருவியது...! அந்தப் பெண், உருவத்தின் கரங்களை அப்படியே பற்றிப் பிடித்து, பக்கவாட்டிலிட்டு, சரசமாடும் பாவனையில் முழங்காலை சிறிது மடித்து, தலையை உருவத்தின் மார்போடு அமுக்கினாள். இதயத்தின் ஓசை எங்கே? ஓசைக்கேற்ப உயரத்தை சரி செய்து கொண்டவள், நின்ற நிலையிலேயே நேர்க்கோட்டில் குதித்தெழும்பினாள்.

“ ஹா.. ” என்ற கதறல் எழுந்தது உருவத்திடமிருந்து..! தலை தாடையில் பலமாக மோதி இரண்டு பல்லாவது சிதறியிருக்கும்..

உருவம் வந்த வழி ஓடியது...!

சற்றைக்கெல்லாம் தடதடத்த காலடிச் சத்தம் நிறைய பேர் பின் தொடர்வதை அறிவித்தது.

அவள் ஓடினாள்.

சத்தம் நெருங்கும் நேரம்..!

“ விர்...விர்..விர்... ”

அம்பு மழை பொழிந்தது..

காலடிச் சத்தமும், அம்பு மழையும் ஓய்ந்தது.

சரட்..சரட்..சரட்..!

விடுத்த அம்பொன்றை எடுத்துத் தடவிப் பார்த்தாள்..

அம்பின் வால் பகுதியில், வில் பொறித்திருந்தது..!

அப்படியானால் வருபவர்..?

பந்தக்கூட்டின் ஒளி வட்டத்துக்குள் வந்தவர், ராஜகளை மறைத்து, வேடனாகத் தோலாடை தரித்து, மதியையும் நதியையும் மறந்து வந்த சிவனாராகத் தெரிந்தார்.

இவர்தான் மன்னர் மதுரமொழிச் சேரலாதன்..! இவருடைய உயிருக்குத்தான் ஆபத்து..!

அந்தப் பெண் மன்னரை மன்னராகக் காட்டிக் கொள்ளவில்லை..!

“ ஏனய்யா தாமதம்? ” பழகிய வேடனைக் கேட்பது போல் கேட்டாள்..!

மன்னருக்கு அந்தக் குரல் பரிச்சயமானதாகத் தெரிந்தது. அந்தப் பெண் உருளை வெளிச்சம் முகத்தில் படாதபடி சமர்த்தாக மறைத்துக் கொண்டிருந்தாள். ஆனாலும் நிலவொளியை மறைக்க இயலாதல்லவா?

“ நீ யாரம்மா? ஆடை எயிற்றியையும் அலங்காரம் இடைச்சியையும் சுட்டுகிறது? ”

“ ம்..ம்....! தெரியாதது போல் கேட்கிறீர்? என் தாய் எயிற்றி; தந்தை இடையர்..! ”

“ இந்த நேரத்தில் இங்கு எங்கே?? ”

“ ம்..ம்.. ” அவள் பதில் சொல்லவில்லை..

மன்னரின் கை தன்னையறியாமல் போட்டிருந்த சட்டையின் நெஞ்சுப் பகுதியை தட்டி விட்டது, யாரோ மார்பில் சாய்ந்த பெண்ணின் செந்தூரம் அங்கு ஒட்டி இருப்பதைப் போன்ற பாவனையில்..!

அந்தப் பெண் நிலை தடுமாறினாள்..! உடல் முழுதும் வெட்கம் போர்த்த, ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் நெளிந்தாள்..!

மன்னன் மந்தகாசமாகப் புன்னகைத்தான். இவள் அணிமா..! விசுவாசமும் வீரமும் கொண்டவள். விதி அவளை இப்போதைக்கு பணிப்பெண்ணாக்கியிருக்கிறது..! அவளுக்கு வார்த்தை எடுத்துக் கொடுக்கும் நோக்கத்துடன், “ உடன்போக்கா? ” என்றான்.

“ ஆமாம்..! ஆமாம்.. ”

“ நாயகன் எங்கே..? ”

“ நீர்.. நீர்... நீர் தானே நாயகர்..! மறந்து விட்டீரா? ஊடல் என்றாலும் இந்த அளவுக்கு ஆகாது..! ”

சுதாரித்தபடி வழி பார்த்துக்கொண்டே நடந்தவள் சற்றைக்கொரு முறை தன்னைத்தானே சுற்றி நாற்புறமும் நோட்டமிட்டாள்..!

இவள் காதல் வயப்பட்ட காரிகை போல் பாவனை காட்டுகிறாள்.....! - யாரேனும் கேட்க நேர்ந்தால் ராஜ ரகசியமாய்த் தோன்றக்கூடாது, இளம் பிராயத்தவர்களின் பருவப் பேச்சாகத் தெரியவேண்டும் என்பதற்காக !.. மதுரமொழி புரிந்து கொண்டான். குறிஞ்சியும் முல்லையும் சேரும் இந்த இடம் காதலர்களின் கொட்டாரம்..! காதல் ஜோடிகளின் ரகசிய சந்திப்பு அடிக்கடி இங்கே நிகழும்..! அதைப் போன்ற ஒரு காதல் ஜோடியாக அவர்களின் சந்திப்பு நடக்க பிரயத்தனப்படுகிறாள்.

“ அவர்கள் ஏன் உன்னை விரட்டினார்கள்? ” அவனும் நடித்தான்.

“ ஒரு வேடனைத் தாக்கினேன்; அவர்கள் ஆளல்லவா? விரட்டினார்கள்...! ”

“ உன்னை விரட்டியவர்கள் வேடர்களல்ல, பெண்ணே..! ”

“ சரி, எதிரிகள்.. விடுங்கள்.. அவர்களைத்தான் நீங்கள் விரட்டி விட்டீர்களே? ”

மேலே கூரை வேய்ந்த கொட்டாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.. !

“ ஏன் தாமதம் என்று கேட்டேனே?? ” அந்தப் பெண் விடுவதாக இல்லை.

“ ம்..ம்...! ! வனதுர்க்கா கோயில் சென்று வணங்கி விட்டு வருகிறேன்..! அதுதான் தாமதம்..”

மதுரமொழிச் சேரலாதன் வார்த்தையளந்து பேசினான். பாணிணி முனிவர் அவனை பௌர்ணமியன்று வனதுர்க்கா கோயில் சென்று தரிசித்து வரச் சொன்னார். “ வீரமும் விநயமும் மிக்க விறலியைத் துணையாகக் கொள்..! ” என்றார்.

பாணிணி முனிவர் ரகசியம் பேச மாட்டார்..! மனதின் குறிப்பறிந்து அம்பைப் போல் வார்த்தை விடுவார். எத்தனை பேர் சுற்றியிருந்தாலும் அவர் சொல்வது மனப்பாரம் கொண்டவர்க்கு ஒரு விதமாகவும் பிறருக்கு வேறு விதமாகவும் த்வனிக்கும்..! தத்துவம் சொல்வது போன்று நடைமுறை சொல்வார். அவர் குறிப்பிட்டது வனதுர்க்காவை மட்டும்தானா, இல்லை, எதிரில் நிற்கும் இந்த வனதேவதையையும்தானா..!

இவளின் செய்கைகள் கோர்வையாக இல்லை..! காதலிப்பது நடிப்பா, நடிப்பென்ற சாக்கில் வெளிப்படுத்தும் மனதின் துடிப்பா? இவளை அதே பிரார்த்தனை கூட்டத்தில் பாணிணி முனிவர் அருகில் பார்த்த ஞாபகம்..!

“ என்ன வேண்டுதலோ? ” அவள் கேட்டாள்..!

“ இந்த வஞ்சி நாடு வஞ்சிக்கப்படாமல் நன்றாயிருக்க வேண்டுதல்..! ”

அந்த பெண் யோசித்தாள். சொல்ல வந்த செய்தியைப் போட்டுடைக்க இதுதான் சந்தர்ப்பம்..!

“ ஐயா, வஞ்சியான் கல்லாக இருந்தால் வஞ்சனை வென்றுதான் தீரும்..! ”

“ ஏனம்மா, வஞ்சி மன்னன் மேல் உனக்கென்ன வஞ்சம்? ”

அந்தப் பெண் திடலைக் காட்ட, மன்னன் அமர்ந்தான்.

“ ஐயா, தங்களுக்கு அகலிகை கதை தெரியுமோ? ” அவள் கண்கள் பரபரவென்று சுற்றின. காட்டுக்கும் கண், செவி, நாசி, நா, மேனி என்று ஐம்புலன்களும் இருக்கலாம் என்கிற எச்சரிக்கை..!

“ யாருக்குத்தான் தெரியாது? ”

“ சரி, அகலிகை கல்லானது ஏன்? கற்பு நெறி தவறியதாலா? ”

“ இல்லை பெண்ணே, கற்பு என்பது மனோதர்மம். அகலிகை அதில் தவறவில்லை. மாற்றானிலிருந்து அவள் தன் மணவாளனை அடையாளம் கண்டு கொள்ளவில்லையே என்ற கௌதமரின் ஆதங்கம் அவளைக் கல்லாக்கியது...! ”

“ அதே நெறி ஆணுக்கும் பொருந்துமல்லவா? அதாவது மாற்றாளில் தன் மனைவியை அடையாளம் காணாவிடில் அவனும் கல்தானே? ”

“ ஆமாம்.. ஆமாம்.. நிச்சயமாக..! ஏன் பெண்ணே? நான் என் மனையாளை மறப்பேனா? காவலாகக் கூடவே வருகிறேன்..! ”

“ உங்கள் காவல் எனக்கொன்றும் தேவையில்லை..! ”

“ அடடா...! இவ்வளவு கோபமா? கன்னிப் பெண் காதலை மறுக்கலாம்; காவலை மறுக்கலாமோ? என் காவல் இல்லாமல் உனக்கு எந்தக் காவல் வாய்க்கப் போகிறது? ” மதுரமொழி அவள் தோளைப் பிடித்தான்..! அவள் குழைந்து, பின் விலகி ஓடினாள்..!

“ எனக்கா காவல் இல்லை? இப்போது பாரும்..! ”

அவள் சட்டென்று அவனிடமிருந்து தூரச் சென்றாள். ஜதியிட்டு ஆடினாள்..!

இடக்காலை மாத்திரம் நடன பாணியில் அரை வட்டமடித்தாள். கால் சிலம்பு, நதியின் ஓசையை சப்தித்தது..! “ சல சல சல சல.. ”

வலக்காலையும் அதே போல் செய்ய.., சப்தம் எழவில்லை..! இந்தச் சிலம்பு ஊமையோ?

அவன் இரண்டு சிலம்புகளையும் பந்தக்கூட்டின் வெளிச்சத்தில் நோக்கினான். என்ன அதிசயம்..! ஒரு சிலம்பில் பொறிப் பொறியாக வேலைப்பாடமைந்திருக்க, ஊமைச் சிலம்பில் சல்லடை வேலைப்பாடு தெரிந்தது...!

“ என்ன பெண்ணே? இணையற்றிருக்கிறதே உன் சிலம்பு? அதாவது.. ஒத்ததாக இல்லையே? “

“ இணையற்றதைய்யா எம் சிலம்பு..! இப்போது பாரும்..! ”

கணப்பொழுதில் வலக்கால் சிலம்பை அகற்றி தூர எறிந்தாள்..!

சிலம்பின் உட்கூடான பகுதியிலிருந்து சீறி வந்தது பூநாகமொன்று..!

“ பார்த்தீரா எம் காவலை? இது கடித்தால் சிவலோகம் தெரியும்..! ”

“ அசட்டுப் பெண்ணே, அது உன்னையே கடித்து விட்டால்? ”

அவள் இன்னொரு சிலம்பை பிரித்தாள். அதனுள் சின்ன சின்ன மூலிகைக் குளிகைகள்..! அந்த நச்சுக்கு இவை மருந்து..!

மன்னரின் விழிகள் வியப்பில் விரிந்தன.

ஒரு சிலம்பு பொறிப் பொறியாக அமைந்திருப்பது அடையாளத்துக்காக. பொறி இருப்பின் பாம்பு இல்லை என்று அர்த்தம்..! சல்லடைத் துளைகள் இருப்பது, உள்ளே உள்ள பாம்பு உயிர் தரிப்பதற்காக..!

இந்தச் சிலம்புகள் அணிகளல்ல; சூழ்ச்சியின் முனைகள்..!

தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (7-Nov-15, 3:38 pm)
பார்வை : 271

மேலே