ஈயும்-தேனீயும்
அது ஒரு அடர்ந்த காடு,அதில் புன்னை மரங்கள் அதிகம். பலவகையான மா மரங்கள் நிறைந்திருந்தன, வரிசையாக நெட்டிலிங்க மரங்கள் உயர்ந்திருந்தன எங்கும் கண்டிராத செயலை மரங்களே அந்தக் காட்டின் அடையாளம். வில்வ மரங்கள், ஆங்காங்கே செம்மரங்கள் மிகவும் பெரிதாக இருந்தது, முற்புதர்களும் சப்பாத்தி கள்ளிகளும் படர்ந்து இருந்தன.சில மூங்கில்கள் முளைத்து பெரிய குத்தாக மாறி இருந்தது. பல வண்ண பூக்கள் மிளிரும் காடு அது. அல்லி மலர்கள் சிறிய குளத்தில் தண்ணீருக்கான அடையாளமே தெரியாமல் நிறைந்திருக்கும். அனிச்சம் பூ அதன் வண்ணமெங்கும் ஒளிரும், ஊமத்தம் பூ , எருக்கம் பூ, செங்கருகாலி, செம்மல், சிலந்தி , வாகை என பல வகை பூக்களைக் கொண்டு எழில்மிகு வண்ணச் சுடராய் திகழ்ந்தது, அதன் அடர்த்தியால் வெயில் திருட்டுத்தனமாக நுழைவது போலவே இருக்கும், உச்சி வேளையில் வெளிச்சமிகு பைப்புகளை நட்டு வைத்தது போல சூரிய ஒளி விழும் பார்க்கையில் மனம் எழும்.
மிகவும் அமைதி தொனித்த சூழலில், அணில்களின் கீச் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், தேனீக்களின் உய் ஓசையும், குயில்களின் கூவல்களும், சிறு பூச்சிகளின் சப்தங்களும், காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பும், மூங்கில்கள் உராய்ந்து எழுப்பும் கர்ர் ஒலி என எல்லாமுமே நவீன சிம்போனியாக இருந்தது. இப்படியாக இருக்க ஒரு தேனீயும், ஈயும் தனித்தனியாக பறந்து காட்டிற்கு வெளியே வந்தது, இரண்டும் ஒரு செடியின் கிளையில் அமர்ந்து அதே கணத்தில் பார்த்துக்கொண்டது. இது சரியில்லாத காடு இங்கு தனக்கு பிடிக்கவில்லை வேறு வழியில்லாமல் இங்கு இருக்கிறேன் என புலம்பித்தள்ளியது ஈ, தேனீ இதை எல்லாம் கேட்டுக்கொண்டு கோபமான முகத்துடன் "இது சரியில்லாத காடா ??.." என்றுரைக்கும் போதே ஈ பீதியில் இருக்க, சிறிய நிசப்பதத்திற்கு பிறகு "மிக மிக கேவலமான காடு என்று சொல்.." என்று கூறி தேனீ சிரித்தது, அதனூடே ஈயும் இளித்து இருவரும் நட்பு பாராட்டினர்.
ஈயின் ராஜாவும், தேனீயின் ராஜாவும் மிக கெடு பிடியானவை, தினமும் அதிக இனிப்பும், தேனும் எடுத்து வர வேண்டுமென தொந்தரவும் நச்சரிப்பும் செய்து கொண்டே இருக்கும், ராஜாக்கள் கீழ் பணி புரிவோர் ராஜாவை விட சர்வாதிகார அடக்கு முறைகள் வீரியமாக இருக்கும். வருகிற இரண்டு நாட்கள் வெப்ப சலனம் அதிகமாக இருக்குமென ஊகத்தில் அனைத்து உயிரனும் வெளியே வரவில்லை இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியே ஒரு செடியின் கிளையின் மேல் அமர்ந்திருந்தன ஈயும் தேனீயும். இப்படி பட்ட இடத்திலிருந்து இரண்டு நாட்கள் எங்காவது சுற்ற வேண்டும் என பெரிய திட்டம் தீட்டின, அவ்வாறே அங்கிருந்து கிளம்பவும் செய்தன. இருவரும் இரண்டு நாட்களில் திரும்பியாகவே வேண்டும், அங்கு இருக்கும் ஈயின் ராஜாவும், தேனீயின் ராஜாவும் தினமும் எண்ணிக்கை விவரம் எடுப்பது வழக்கம்,குறைந்தால் அந்த சம்மந்தப்பட்ட குடும்பத்தை துன்புறுத்துவது தான் சட்டம், இரண்டு நாட்கள் மட்டும் அனைவரும் உள்ளே இருப்பதால் எண்ணிக்கை தொல்லையிருக்காது.
எங்கு சென்றாலும் இருவருக்கும் தங்களது கானகத்திற்கு திரும்பும் வழி தெரியும், பயணம் தொடங்கியது காற்றின் திசை எங்கோ அதே திசையாக பரவசித்து சிறு இறக்கையைக் கொண்டு பறக்க ஆரம்பித்தன , குடியரசு தினத்திலும் சுதந்திர தினத்திலும் சாகசம் செய்யும் விமானம் போல இரண்டும் பறந்தன . ஒரு கட்டத்தில் அவர்கள் சேர்ந்த இடம் அலையாத்திக் காடு, எழில் மிகு தாவரங்களும் , பூக்களும் பல வகை பறவைகள் சங்கமிக்கும் சதுப்பு நில பகுதி, நிலமும் கடலும் சேரும் பகுதிகள் அலையாத்திக் காடுகள் என்பர். ஈக்கு பெரும் மகிழ்ச்சி அப்படிப்பட்ட இடத்தை அதற்கு முன்பு பார்த்ததே இல்லை, சுற்றிக்கொண்டும் சுழற்றிக்கொண்டும் இருந்தது, தேனீயும் வேறொரு உணர்ச்சிப் பெருக்குடன் திகழ்ந்தது. பல வண்ணப் பூக்களின் அமர்ந்து தேனைப் பருகி குதூகலத்துடன் அந்த நாளைக் கடத்தினர். அடுத்த நாள் முழுக்க பயணமும் வழியில் கடக்கும் வண்டுகளிடமும், வண்ணத்துப் பூச்சியிடமும் நல்ல இயற்கையான இடத்தைக் கேட்டு இருவரும் தொடர்ந்தனர். அப்படியே தங்களின் மகிழ்ச்சிக்கான நேரம் சிறிதென உணர்ந்தனர்.இருக்கும் நேரம் குறைவே,பின் தங்களது காட்டிற்கு திரும்பியாக வேண்டும் என கூறி கவலைப்பட்டது ஈ. அதற்கு தேனீ " அடேய் .. ஈ நண்பா ஒரு டம்பளர் ல தண்ணி கம்மியா இருக்கன்னு பாக்கரதவிட இவளோ ஜாஸ்தியா இருக்கே ன்னு நெனச்சிக்கலாம்" என்ற லெக்ச்சருடன் பறந்தது.
இருவரும் இருக்கும் நேரத்தை மகிழ்ச்சியின் உச்சமாக கடக்க எண்ணி பறக்கும் போது ஒரு வண்டு எதிரே உள்ள மரத்தில் மோதி அடிபட்டு கீழே விழுந்தது, அதை கண்ட ஈயும் தேனீயும் அதை காப்பாற்ற நினைத்து, உடனடியாக முதலுதவி செய்து அந்த வண்டைத் தூக்கி மர பொந்தில் அமரவைத்தது, அது கண் விழிக்கும் வரை காத்துக் கொண்டிருந்தன, வண்டு விழித்ததும் கண் கலங்க ஆரம்பித்தது " என் சொந்தங்கள் யாரும் அருகே கூட வரவில்லை, பார்த்தும் அப்படியே சென்றனர், நீங்கள் வரவில்லை என்றால் என் உயிர் பிரிந்திருக்கும்" என்றது."ஒன்னியும் கவல வேணாம், நீங்க நல்லா இருக்கீங்க.. வரவா " என சிரித்து தேனீ வசூல் ராஜா கமலைப் போல் சொன்னது, ஈயும் சிரித்து அங்கிருந்து இருவரும் விடைப் பெற்றனர். அவர்கள் கிளம்பும் போது வண்டு " யு ஆர் குட் சமராட்டியன் " என கத்தி நன்றியைத் தெரிவித்தது.
இருட்டியது,பசி இருவரையும் பறக்க வைக்காமல் ஓர் இடத்தில் நிற்க வைத்தது.தேனீ சென்று தன் சக்தியால் தேனைக் கொண்டு வந்து ஈக்கு கொடுத்தது, ஈயும் தேனீயும் பசி தீர்த்து, பறக்க முற்பட்ட போது கண் தெரியாத தும்பி ஒன்று செடியின் கீழ் அமர்ந்திருந்தது,அதைப் பார்த்த ஈ அருகே சென்று "ஏன் இங்கிருக்கற ??, எங்காவது கொண்டு போய் விடணுமா?? " என்றபின் தனக்கு கண் பார்வை இல்லை, பசிக்கிறது என்று சொன்னது தும்பி. தேனீ உடனே அங்குமிங்கும் சென்று கொஞ்சம் மலரின் தேனை சேகரித்து அந்த தும்பிக்கு கொடுத்தது. தும்பி மளமளவென அருந்தி தனது பசியைத் தீர்த்து மறு பேச்சே இல்லாமல் இருக்க, சற்று நேரத்தில் இருவரும் நன்றி எதிர்பாராமல் தங்களது கானகத்திற்கு பறந்தனர்.
நீண்ட பயணத்தின் முடிவில் அவர்களது காட்டிற்கு அருகே வந்தடைந்தனர், அப்போது தங்களின் பயணத்தின் போது நடந்த அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து வாழ்கையின் சித்தாந்தத்தை மெச்சினர். "அந்த வண்டுக்காகத் தான் நாம பயணம் பண்ணோமோ , அத காப்பாத்த தானோ ன்னு நெனைக்குறேன், ரொம்ப மன நிம்மதியா இருக்கு" என தேனீ கூறியது.
" தேனீ நண்பா.., குருட்டுத் தும்பிக்காகத் தான் கடவுள் அந்த வண்ட அடிப்பட வெச்சி, நம்ம நேரத்த கடத்த வெச்சாரு. இல்லனா அந்த இருட்டுல போய் இருக்க முடியாதுல.." என ஈ சொன்னது.
முழு வாழ்வின் தொடுவானத்தில் ஒவ்வொரு செயலும் அர்த்தமுடையது தானோ! இருவரும் நிறைவான பயணத்தை முடித்து நீங்கா விடை பெற்று தங்களது கானகத்தை அடைந்தனர்.