தீபாவளி

பட படக்கும் பட்டாசு
சத்தத்தைப் போலவே
சில சத்தங்களும் , குரல்களும்
தீபாவளிக்கே உரியன !

"எங்க அம்மால்லாம்
அதிரசம் பண்ணா
எவ்வளளோ ருசியா
இருக்கும் தெரியுமா "?
என் அம்மா சுட்ட
அதிரசத்தை ஒரு கை
பார்த்துக் கொண்டிருக்கும்
அப்பாவின் குரல் !

" அனு.. இந்த பலகாரங்கள
பானு மாமி வீட்டிலேயும்
மெர்சி அக்கா வீட்டிலேயும்
கொடுத்துட்டு வா "
அடுப்படியில் இருந்து
அம்மாவின் குரல் !

" அத்த , என்னோட
புது டிரஸ்
எப்படியிருக்கு "
பாதங்களை பூமியில்
ஊன மறந்து
பறந்துக் கொண்டிருக்கும்
தங்கையின் குரல் !

"நான் எவ்வளோ வெடி
வைச்சிருக்கேன் தெரியுமா "?
கர்வம் கலந்த சந்தோஷத்தில்
பக்கத்து வீட்டு
தம்பியின் குரல்!

"ஹாப்பி தீபாளி"
கைபேசியில் தோழியின்
குரல் !

"தீபாவளி நிகழ்சிகள்
அனைத்தையும்
வழங்குவோர் .."
வீட்டில் ஓர்
அங்கமான
தொலைக்காட்சியின் குரல் !

"ஏதோ ஓர் வருடம்
நரகாசூரன் செத்ததற்காக
ஒவ்வொரு வருடமும்
தவணை முறையில்
நான் சாகிறேன் "
வலிகளுடன்
வளிமண்டலத்தின் குரல்!



எழுத்து தள நண்பர்கள்
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : அனுசுயா (10-Nov-15, 9:20 pm)
சேர்த்தது : அனுசுயா
Tanglish : theebavali
பார்வை : 93

மேலே