உருமாற்றம்

உருமாற்றிக்கொண்டே இருக்கிறான் அவளை
தன் ஒவ்வொரு நிலைகளிலும்.
மேகமாக்கும் ஆசைதான்
முதலில் அவனுக்கு இருந்தது.
ஆனால், தன்னை மீறி அவள்
காற்றின் கட்டுப்பாட்டிற்கு
பணிய வேண்டியிருக்குமே என்ற
விசனமும் கூடவே அவனுள் இருந்ததால்,
அவளை காற்றாக மாறினான்.
பூமி அவளை வழி நடத்துவதா
என்ற கர்வம் அவன் தலைகேறியதால்
பறவையாக உருமாற்றினான்.
வரம்புகளற்ற விசாலத்தில்
பல முறை அவள் தன்னைத் தொலைத்து விடுவாள்
என்று கருதி
கடலலையாக மாறினான்.
நிலத்தை முத்தமிட்டே வெடித்து விடும்
அவளது சிவந்த உதடுகள் என் அஞ்சி
இரை தேடும் காகமாய்,
இறுமாப்பாய் உயர்த்தில் பறக்கும் கழுகாய்,
எல்லா வடிவங்களுக்கும்
அவளை மாற்றிக்கொண்டே இருந்தான்.
எதிலும் நிறைவில்லாமல்
அவளை கொடிய விலங்காக
மாற்றிவிட்டான்.
பிறகுதான் அவனுக்குத் தெரியவந்தது
இரை தேட அவள் தினமும்
ஒரு பெரிய போராட்டமே நடத்த
வேண்டியிருக்கும் என்பதை.
கடைசியாய் அவளை நிரந்தரமாக உரு மாற்றினான்
ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சியாய்.
ஒரு நாள் அவர்களின்
அந்தரங்க தேடலில்தான்
அறிந்துகொண்டான்
வண்ணத்துப் பூச்சிக்குள்ளே உருமாறாமலேயே
இருக்கும் ஒரு கொடிய மிருகத்தை.

எழுதியவர் : பிரேம பிரபா (14-Nov-15, 6:24 pm)
Tanglish : urumaatram
பார்வை : 131

மேலே