மீண்டும் மீண்டும் - மழலைப்பருவ மகிழ்ச்சிகளில்
மீண்டும் மீண்டும்
வாய்க்குமோ???
நடை வண்டி பயிற்சியும்
நரம்பு பையில் புத்தகங்களும்
நுனா தேரும் நுங்கு வண்டியும்
குரங்கு பெடல்
மிதிவண்டி காயங்களும்
குண்டுமணி பதித்த
களிமண் பொம்மைகளும்
பஞ்சு தாத்தா பறக்க விட்டதும்
பனம் பழம் சுட்டுத் தின்றதும்
பானைக்குள் மீன் பிடித்ததும்
பெட்டி அடைத்த
தொலைக்காட்சி பெட்டியும்
பெட்ருமாஸ் விளக்கு எரிந்த
பெட்டிக் கடைகளும்
பெயிண்ட் அடிக்கப்பட்ட
மாட்டுக் கொம்புகளும்
கண்ணாமூச்சி, கபடி, பம்பரம்,
கோலி, கிட்டிப்புள், குதிரையேற்றம்,
சில்லுக்கோடு, சூட்டுக்காய், பகடை,
பாண்டி, பேபே,பல்லாங்குழி,
பரமபதம், டயர் வண்டிப் போட்டி,
நண்டூருது நரியூருது, இன்னும்…
சொல்லமறந்த ஏராளமும்…
ஐந்து பைசா பத்து பைசா மிட்டாயும்
ஐந்து ரூபாய் திருவிழா கடை சர்பத்தும்
ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில்
குட்டி போட்ட மயிலிறகும்
பனை மட்டை காத்தாடியும்
பரணி வைத்த
மாட்டுத் தொழுவமும்
படச்சுருள் கொண்டு பார்த்த
வேட்டிப் படங்களும்
அம்மியும் திருவையும்
ஆட்டுக்கல் மாவில்
சுட்ட தோசையும்
உரலில் குத்திய நெல்லும்
உறியில் கட்டிய தயிறும்
உண்டியல் பணத்தில் வாங்கிய
முதல் இங்க் பேனாவும்
ஊர்புற தொலைக்காட்சியில்
ஒன்றாய் அமர்ந்து ரசித்த
ஒளியும் ஒலியும்
ஒணிடா மண்டையும்
ஊஞ்சலாடிய ஆலமர
விழுதுகளும்
பசி மறந்து பங்குனி
வெயிலில்ஆடிய ஆட்டமும்
பதனீர் குடிக்க ஓடிய ஓட்டமும்
பக்கத்து வீட்டு
சமையல் அன்பும்
பக்கத்து ஊர் வரை சென்று
பிடித்த பட்டாம்பூச்சியும்
பின்ன மரத்தில் ஏறிப் பிடித்த
பொன் வண்டுகளும்
பார்த்து பார்த்து கட்டிய
மணல் வீடுகளும்
கூட்டு வண்டியும் கூட்டாஞ்சோறும்
குரும்பைத் தேரும் கொல்லைப்புற
குப்பைக் குழியும்
கூடை வைத்த குண்டு பல்பும்
கூடை வைத்து குருவி பிடித்ததும்
கூராய் சீவ முயன்ற
பென்சில் காயங்களும்
பூவரச இலையில் செய்த பீப்பியும்
பூதக்கண்ணாடி ஒளியில் எரிந்த சருகும்
பூம்பூம் மாட்டின்
தலையாட்டல் ஒலிகளும்
கல்லு சிலேட்டும்
கோவை இலைஅழிப்பானும்
கெண்டியில் சுவைத்த தேனீரும்
கரகாட்டம் மயிலாட்டம்
ஒயிலாட்டம் காண ஓடி வரும்
திருவிழா கூட்டமும்
கல் உப்பு வீசி உடைத்த
திருவிழாக்கால பலூன்களும்
கருவாட்டுக் கிழவி காதோரம்
கண்ட தண்டட்டையும்
மரப்பலகையும் மட்பாண்ட சமையலும்
மரப்பாச்சிபொம்மைகளும்
மழைக்கால கப்பலும்
மண்பூசிய வீடுகளும்
மார்கழி மாத தாதர் தாத்தாவும்
விடிய விடிய விழித்து செய்த
தீபாவளி பலகாரமும்
வீடு வீடாய் பகிர்ந்த பரிமாற்றமும்
விறகு அடுப்பு சமையல்சுவையும்
அனைவரின் அரவணைப்பில்
கிட்டிய அன்பும்
அரைஞாண் கயிற்றில்
கட்டிய கண்டிப்பும்
ஆல் இந்தியா ரேடியோவும்
ஆகாச வானியும்
ஆடிப்பெருக்கில் ஆற்றில்
தேடிய பேரிக்காயும்
வைக்கோல்போர் அருகே
தட்டிய வரட்டியும்
வயல்வெளி பனைமர
தூக்கனாங்குருவிக் கூடும்
விரட்டியோட வைத்த வானூர்தி ஒலிகளும்
விறகு அடுப்பில் படுத்து உறங்கிய
பூனைக்குட்டியும்
டெக் வீடியோவும் டேப்ரிக்கார்டரும்
டெலிபோனில் சுற்றி விட்டு செய்த
சில இரவல் அழைப்புகளும்
தெருவிளக்குப் பூச்சிகளைத்
தேடிப்பிடித்த இரவுப் பறவைகளும்
திருவிழாவை அறிமுகப்படுத்தும்
இராட்டின ஒலிகளும்
நெருப்பு நீர்க்குமுன்
தேடியெடுத்த சொக்கப்பானை
பனைமட்டைகளும்
நெருப்பில் வெடித்து நெடிமூட்டிய
திருஷ்டி மிளகாய்களும்
நாவல்மர செவ்வெறும்புக் கடிகளும்
சீப்பில் சிக்கிய பேனை
சீக்கிரமே நசுக்க எழுப்பிய
சிறு ஒலிகளும்
சீயக்காய் புகைமூட்டத்தில்
ஓடிய கொசுக்களும்
சோப்புநுரையில் காட்டாமணக்கு
பால் சேர்த்து வைக்கோல் துண்டு
வைத்து வாயால் ஊதிய
வண்ண முட்டைகளும்
ரிப்பன் கட்டிய
ரெட்டை சடையும்
தாத்தா காட்டிய
ரெட்டைவால் குருவியும்
நித்தம் விரும்பிய
நிலாச் சோறும்
ரத்தம் அரும்பிய
தை மாத பல் ஈறும்
திண்ணையில் சுற்றிய
தேக்கு மர தூண்களும்
தென்னையில் கிடைத்த
புயல்கால குருத்துகளும்
சிமிலி விளக்கும்
சுரைக்குடுக்கும்
சில தடவை கேட்ட
ஒப்பாரியும் தாலாட்டும்
நெல் முளை விட்டதும்
நெல்லால் கீறி
பல் முளை விட்டதும்
கொல்லையில்
அவித்த நெல்லும்
துண்டு போட்டு
உடும்பு பிடித்ததும்
தூண்டில் போட்டு
பாம்பு மாட்டியதும்
நலம் நாடிய கடிதங்களும்
மனம் வாடிய தந்திகளும்
வாழ்த்து கூறிய பொங்கல்
வாழ்த்து அட்டைகளும்
குதிரிலும் பத்தாயத்திலும்
நிறைந்த நெல்லை அண்டி
வந்த அந்துப் பூச்சிகளும்
மரத்தில் விண்மீன்களைக் காட்டிய
மின்மினிப் பூச்சிகளும்
கொடுக்கா புளியும்
தண்ணீர் கொடுத்தான் பழமும்
குளத்தில் போட்ட
கண் சிவந்த குளியலும்
வாழைச் சருகில்
சாப்பிட்ட இட்லியும்
வடகம் காய வைத்த
முற்றம் வைத்த ஓட்டு வீடும்
இரவு நேர தாத்தா பாட்டி கதைகளும்!!!