நிழலின் சினேகம்

குழைந்துருகி வழிய
எத்தனிக்கும்
ஒரு துளி நிலவின்
வெளிச்சமே
போதுமானதாக இருந்தது
அவளுக்கு.

காரிருள் படர்ந்த
காலங்களில்
மென் ஒத்தடமாய்
பதியும் ஒளித்துளி
அறையினில் பரவி
ஜன்னலின் வழியாக
வெளியேறும் போது
அவளையும்
அழைத்துக்கொண்டு
சென்றது.

அதன் சுண்டுவிரல் அசைவில்
பாதையெங்கும் தூவும் ஒளியால்
எஞ்சிய இடத்தில் ஒதுங்கும்
நிழல்களுடன்
சினேகம் வளர்க்க
இயலாமலே போகிறது அவளால்.

அவள் தன் இரு கைகளை
ஒரு பறவை
தன் இறக்கைகளை
விரிப்பது போல படர்த்தி
ஒளியின் முன்னே
அபினயித்து அழகு காட்ட
இறக்கைகளைத் துடைத்து
மேலும் ஒளியூட்டி
வழி அனுப்பி வைக்கிறது நிழல்
ஒரு தாயின் கரிசனத்துடன்.

எழுதியவர் : பிரேம பிரபா (14-Nov-15, 6:06 pm)
பார்வை : 98

மேலே