எமக்கும் வலிக்கிறது
எமக்கும் வலிக்கிறது!
பல நாடுகளில் தன்
கோரப்பிடியைக் காட்டிய
பயங்கரவாதம் மீண்டும்
பாரிஸ் நகரத்தில்
நூற்றுக்கும் மேற்பட்ட
மனித உயிர்களைக்
காவு கொண்டது
எமக்கும் வலிக்கிறது
பட்டவர்களுக்குத் தானே
கூட வலிக்கும்
எம்மவர் பல்லாயிரக் கணக்கில்
அன்று மாண்டனர்
பணயமாய் பிடித்தவர்களைச்
சிரச்சேதம் செய்வார்களோ
என்னவோ ஆம் அவர்கள்
அதில் கைதேர்ந்தவர்கள்
13ம் திகதி வெள்ளிக்கிழமைகளில்
வந்தால் இப்படித்தானாம்
என்கிறார்கள் மூடநம்பிக்கைகளில்
ஊறிப்போனவர்கள்
கலிகாலம் என்கிறார் ஒரு
சமயப் பெரியார்
மாண்டார் வருவரோ
என்றார் ஒளவையார் அன்று
யுத்தத்தில் இது சகஜமாம்
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி
அடித்துக் கூறுகிறார்
வந்தவர்கள் எல்லாம் போக வேண்டும்
போனவர்கள் எல்லாம் வர வேண்டுமாம்
ஒரு தொலைக்காட்சி நாடகத்தின்
வசனகர்த்தா கூறுகிறார்
என் வரிகளோ
ஆழ்ந்த அனுதாபங்கள் கூறி
சோகமாய் அங்கலாய்க்கிறது!
பொன் அருள் – 14/11/2015.