மீண்டும் மீண்டும் வேண்டுமடி கவிதைப் போட்டிக்காக

மீண்டும் மீண்டும் வேண்டுமடி
(மெட்டு: கும்மி)
கும்மியடி கூடி கும்மியடி – நல்ல
பண்டிகை நாளினில் கும்மியடி – அகப்
பகைமைத் தீய்ந்திட கும்மியடி- உயர்
பண்புகள் மேலிடக் கும்மியடி

நல்லவை எண்ணிட வேண்டுமடி – நம்
நலங்களை மீட்டிட வேண்டுமடி – நாளும்
அல்லவை தவிர்த்திட வேண்டுமடி – வாழ்வில்
தொல்லைகள் போக்கிட வேண்டுமடி

உயிர்களை நேசிக்க வேண்டுமடி – நம்
உடைமைகள் பகிர்ந்திட வேண்டுமடி – என்றும்
உண்மையாய் உழைத்தே உயர்வோமடி – இந்த
உலகினில் உவந்தே வாழ்வோமடி

வன்மங்கள் நீக்கிட வேண்டுமடி – நல்ல
வளங்கள் சேர்த்திட வேண்டுமடி – நம்
தொன்மங்கள் போற்றிட வேண்டுமடி – புத்தம்
புதுமைகள் செய்திட வேண்டுமடி

நாகரிகம் தன்னைக் கொள்வோமடி – பழி
நாணிடும் பண்பை வளர்ப்போமடி - தேச
மானத்தைக் காத்திட வேண்டுமடி – பெரும்
மாண்புகள் பேணிட விழைவோமடி


கல்வியில் தேர்ந்து தெளிவோமடி – விந்தைக்
கலைகள் விளைத்து வியப்போமடி – நம்மில்
பன்முகத் திறன்கள் வளர்ப்போமடி – இந்தப்
பாரினில் முந்திட முயல்வோமடி

மாற்றுக் கருத்துக்கள் சகிப்போமடி – பிற
மதப் பழக்கங்கள் மதிப்போமடி – வீண்
வெற்று வாதங்கள் தவிர்ப்போமடி – நம்மில்
வேற்றுமையில் ஒற்றுமை வார்ப்போமடி

மரங்கள் வளர்த்து மகிழ்வோமடி – உயிர்
மழையைப் பெற்று சிறப்போமடி – இயல்
மக்கிடும் உரத்தினை சேர்ப்போமடி - நம்
மண்ணின் வளத்தினைக் காப்போமடி

ஆறு குளங்களைக் காப்போமடி – நீர்
ஆதாரம் தூர்த்திடல் ஆகாதடி – புது
ஏரி குளங்களைச் செய்வோமடி – மிக
ஏற்றம் வேளாண்மை பெறுமேயடி

சுற்றுச்சூழல் கருத்தில் கொள்வோமடி – தூய
சுகந்தக் காற்றினைப் பெறுவோமடி – மண்டும்
வாகனப் புகையைக் குறைப்போமடி – நகரில்
வாழும் மனிதரைக் காப்போமடி

நல்லோரை நச்சியே போற்றிடுவோம் – அன்றி
அல்லோரை அதட்டிக் கடிந்திடுவோம் – நாம்
எல்லோரும் சேர்ந்தே உயர்ந்திடுவோம் - மண்ணில்
வல்லோராய் வாழ்ந்து காட்டிடுவோம்

எழுதியவர் : சபா.வடிவேலு (15-Nov-15, 10:32 am)
பார்வை : 75

மேலே