மகிழ்ச்சியின் முயற்சி-- எழுத்தில் இது என் 700 வது கவிதை

காம்புகளை கஷ்டப்படுத்தாமலும்
செடிகளுக்கு வலிக்காமலும்
அவிழ்ந்துவிடுகின்ற முகைகளின்
மகிழ்ச்சியின் முயற்சி
பூமியின் தாவரங்களை
சிரிக்க வைத்துவிடுகின்றது.
துளையிடுகையில்
வலிகளைத் தாங்கிக் கொள்கின்ற
மூங்கில்களின் மகிழ்ச்சி முயற்சியில்தான்
புல்லாங்குழல்கள் பிரசவமாகின்றன .
வண்ணங்களின் மகிழ்ச்சி
முயன்று திரட்டிய அற்புதம்
வானவில்!
சலனமில்லாத இடத்தில்
சத்தமில்லாமல் வந்து
காதலியைப்போல தழுவும்
தென்றலின் மகிழ்ச்சி
புத்துணர்ச்சிக்கான முயற்சி!
இடி ஆலாபனைகளோடு
மின்னல் புன்னகைத்து
முகில்களை வசீகரித்து
மகிழ்ந்து பொழிவித்த மழை
வானத்தின் முயற்சி.
துளித்துளியாய் இலைகள் சிந்திய
பன்னீர்த் துளிகளைச்
சேமித்த அருவி சலசலத்த
மகிழ்ச்சிப் பிரவாகத்தின் முயற்சியே
நீர்வீழ்ச்சி!
வார்த்தைகளின் வாள்கொண்டு
நிசப்தத்தின் கழுத்தறுக்காத
ஏகாந்தத்தின் மகிழ்ச்சி சொர்க்கத்தின்
கதவுகளை திறக்கும்
பரீட்சைக் கூடங்களில் அமர்ந்து
கொட்டாவி விடுவதிலிருந்து
விடுதலை பெறுவதற்காக
வினாத் தாள்களை அர்த்தமுள்ளதாக
நிரப்பிவிடுவதற்கு மிகவும் பாடுபடுகிறது
விழுந்து விழுந்து என்று இல்லாதபோதும்
விடியற்காலைகளில் படிக்க வைக்கும்
மகிழ்ச்சியின் முயற்சி.
விதைப்பின் வேரூன்றல்களோடு
பசுமையாகின்ற நிலத்தின் மகிழ்ச்சி
முயற்சித்த பலனையெல்லாம்
அறுவடையாய் தித்திப்பூட்டுகிறது
உழைப்பின் உன்னதத்தில்
ஊற்றெடுக்கும் மகிழ்ச்சியின்
முயற்சியில் விளைகிறது
வருமானத்தின் பூந்தோட்டம்
நொடிக்குள் பிறந்து மடிந்து
நிலையாமையை உணர்த்திவிட்டுப்
போகின்றன ஈசல்களின்
மகிழ்ச்சியின் முயற்சி.
தோல்விகளுக்குப் பயிற்சியளிக்கும்
துன்பத்தின் போர்க்களத்தில்
துணிச்சல்களின் கைபிடித்து கரைசேர
கரகோஷம் செய்கின்றது நம்
மகிழ்ச்சியின் முயற்சி..
மரணத்தின் வைபோகத்துக்கு
அடிக்கல் நாட்டிவைக்கும்
அசமந்த போக்குகளின் பெருவிழாவில்
நம்பிக்கையின் வேர்களுக்குள்
நீராய் உரமாய் புகுந்து
வாழ்தலின் பூவை புஷ்பிப்பதில்
கவனம் கொள்கிறது நம்
மகிழ்ச்சியின் முயற்சி.
மகிழ்ச்சிவரும் பாதைகளில்
கிடக்கின்ற சுயநல முற்களை
எடுத்தெறிந்துவிட்டு கொஞ்சம்
பொதுநலப் பூக்களைத் தூவி வைப்போம்
மனம் தளராத மகிழ்ச்சி
முடிவில்லா தன் முயற்சியால்
மரணத்தை வெல்வதற்கு நமக்கு
பயிற்சியளிக்கும்..
மரணத்தின் மகிழ்ச்சிகூட
முயற்சி செய்து வாழ்தலுக்கு
வைத்துவிடும் முற்றுப்புள்ளியில்
ஆத்மாவை குளிர்வித்து விடுகிறது.
மகிழ்ச்சியாகவே இருக்கின்ற
மகிழ்ச்சியானது எப்போதும்
எந்த இருளில் முளைத்தாலும்
அந்த இடத்தில் தன்னை பரப்பிவிடுவதில்
பின் நிற்காத தீபத்தைப்போல
தன்னைப்போலவே தன்னைச் சார்ந்த
இடத்தையும் மனதையும் இயல்பான
தன் முயற்சியால் மகிழ்ச்சியாகவே
வைத்து விடுகிறது .
வாருங்கள் மகிழ்ச்சியைப்போல
மகிழ்ச்சியாய் இருக்க முயற்சிப்போம் .
அந்த முயற்சியின் முடிவால்
இந்த உலகத்த்தில் மகிழ்ச்சி எல்லோருக்கும்
பொதுவான கிழக்கின் கிரணங்களைபரப்பட்டும்.!
*மெய்யன் நடராஜ்