மொட்டுகள் - அரும்புகள்

மலராத பூ
இன்னும் வளராத பூ
அரும்பு

இதழ் மூடிய
பூவின் மௌனம்
அரும்பு

மலரின் மழலைப் பருவம்
விடியலின் புலரும் உருவம்
மொட்டு

தேன் கருவை
தன் கன்னி வயிற்றில்
சுமக்கும் கருக்குவளை
அவை
பூஜைக்கு செல்ல
தவமிருக்கும் திருக்குவளை

ஈக்களின் காதலி அரும்பு
அதன் இதழ்தாள் மலரும்வரை
அதில் இனிதேன் மறையும் வரை

தன்னைச் சுற்றிவரும் தேனீக்கு
தன் மௌனம் கலைத்து
இதழ் திறந்து
நேசத்தை வாசத்தால் தூது விட்டு
தன் வசம்
ஈர்க்கிறது தேனியை
விளைவு மலர் மழலையாய்
வார்க்கிறது கனியை
இயற்கை செவ்வனே
செய்கிறது அதன் பணியை

மலராகப்பூத்து
மங்கையின் கூந்தலை
மணமாக்கக் காத்திருக்கும்
மணமகள் அரும்பு

பெரும்பூக்களின்
குளியலோ மழைத்துளியின்
அரும்புகளின்
குளியலோ மார்கழிப் பனித்துளியில்

பாசமற்று மனிதர்கள்
பிறப்பதுண்டு
வாசமற்று மலர்கள்
பிறப்பதில்லை

அரும்பின் மீதமர்ந்த
பனித்துளியே
மொட்டுகள் இதழ் விரியும்போது
இசைக்கும் மெட்டுகளை
காதுகொடுதுக்கேட்கின்றாயோ ?

மொட்டுகளின் வணக்க உருவம்
இயற்கை அன்னை தன்னை
மணக்க வைத்ததற்கோ ?
மக்களை மயக்க வைத்ததற்கோ ?

இறைவா மலர்ச்சிஅரும்போடு
மகிழ்ச்சி அரும்பெனும் இனிய
கரும்புகள் பூமியில்
பூத்துக்குலுங்க வேண்டுகிறேன்

எழுதியவர் : குமார் (15-Nov-15, 8:20 pm)
பார்வை : 792

சிறந்த கவிதைகள்

மேலே