அரும்புகள்

அரும்பு கூட்டமாய் மழலை கூட்டமே மயக்குது பாரு
எறும்பு போலவே துரு துருவென்று ஓடுது பாரு
அரும்புகளாவே வாழ்ந்திடவே மனம் விரும்புது பாரு
இரும்பு போலவே இருந்திடும் இதயமும் இளகிடும் பாரு
கரும்பு போலவே இனித்திடுமே வாயில் ஒழுகிடும் சாறு

பூக்கும் முன்னே செடியை பிரிந்து வாடும் அரும்புகள் போலே
ஏங்கித்தவிக்கும் அரும்புகள் எத்தனை எத்தனை அநாதை விடுதியிலே
மழலையின் சிரிப்பினில் மகேசன் இருப்பான் என்பதிங்கு உண்மையினில்
பிழையென்ன செய்தன அநாதை குழந்தைகள் அவர் முகத்தில் மகேசன் இல்லையோ

பூக்கும் முன்னே அரும்பை பறிக்கும் பொல்லா நிலை அதுபோலே
பூப்படையுமுன்னே அரும்பு குழந்தைகளை புணரும் துயர் நிலை இங்கே
மலர் அரும்புகளாயினும் மாலையில் கூடி மகேசனை சேர்ந்து முக்தி பெரும்
மழலை கரும்புகளெல்லாம் மாலையிடாமலே மானம் கெட்டவரின் மடி சேரும்

அரும்பு குழந்தைகள் கல்வி கற்பது கட்டாயம் அது பிறப்புரிமை
அருமை வாசகம் அர்த்தமறியாமலே சுவற்றில் எழுதினான் சிறு பையன்
பெருமையுடனே அவனிடம் கேட்டேன் எப்படி இத்தனை ஞானம் என்று
பொறுமையுடனே அவனும் கேட்டான் அய்யா இவ்வாசகத்தின் அர்த்தம் என்ன
சிறுமை கொள்வோம் நாமும் இச்சமூகத்தில் ஒரு அங்கமென்று
அரும்பு பூக்கள் மலர்ந்திடவே அவசியம் பள்ளியில் சேர்த்திடுவோம்

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (15-Nov-15, 11:16 pm)
Tanglish : arumpukal
பார்வை : 84

மேலே