மீண்டும் மீண்டும்

மலைமுகட்டில் நான் இருக்க
பாறைப்பொட்டல் கிராமத்தில் நீ..!

இரத்த சம்மந்தமில்லாமல்
தாலியின் பந்தத்தில்
என் குடும்பப் பிணைப்புகளை
உன்னுடையதாய் சுமக்கிறாய்..!
அதற்காய் மீண்டும் மீண்டும்
உனக்குக் கணவனாய்
பிறந்துவரப் பேராசை....!

தாய் நாட்டைக்காத்திருக்க
பனிமலையில் நான்…!
எனை நினைத்து தினம் உருகும்
திராவகச் சிகரமாய் நீ...! !

தங்கையின் நேசமும்
தம்பியின் பாசமும்
தாயின் உயர்மனமும்
என் தந்தையின் கம்பீரமும்
உருகிக்கலந்து பனிக்குளமாய்
உன் உருவில் நிறைந்திருக்கிறது
துப்பாக்கியோடு நான் நடக்கும்
பாதையெங்கும்....!

அதில் முகம் கழுவும்போது
கிடைக்கும் நிம்மதிக்கு
எதைப் பரிசாய்த் தருவதென்று
புரியாமல் உன் அன்புச்சுமையில்
சிலிர்த்துப் போகிறேன்....

உறங்க இடமில்லையென்றாலும்
அங்கங்கே படுத்துறங்கும் பாறைகளும்
பஞ்சு மெத்தையாகிறது
உன்னை நினைத்து தலைசாயும்போது...!

விஞ்ஞானப் பாதுகாப்புத் தளவாடங்களே
புரிந்துகொள்ள முடியா
தாலிப் பிணைப்பின்
சமிக்ஞைகளின் நேரிய சக்தி
உயிர்ப்பிணைப்பின்
உன்னதமான உன்னதம்தான்.

விஞ்ஞானக் கோட்பாடுகள் எல்லாமே
இதன் முன் பயனற்றுப் போவதை
நேரில் பார்க்கிறேன்..

இயற்கைப் பேரிடர் காலங்களில்
முகாமில் இருக்கும் குழந்தைகளை
முதுகில் ஏற்றிக்கொண்டு
விளையாடும் நேரங்களில் எல்லாம்
பிறக்காத என் மகனைச்
சுமப்பதாய் நினைத்தபடி
நெகிழ்ந்துபோகிறேன்..

இப்போதெல்லாம்
இராணுவத் தோழர்களின்
குடும்ப விழாக்களில்
விரும்பிக் கலந்துகொள்கிறேன்
இந்தத் தங்கைகளுக்கு அண்ணனாய்
திருமணச் சடங்குகளை செய்கிறேன்
அங்கிருக்கும் என் தங்கைக்குச்
செய்வதாய் நினைத்தபடி..!

அவ்வப்போது
விழியோர நீர்த்திவலைகளூடே
நிறைந்தும் போகிறேன்..

நேற்றுக்குண்டடிபட்ட
கணுக்கால்கள் தளர்கிறது...
உன் புகைப்படம் பார்க்கும்போதெல்லாம்
வலியெங்கோ மறைந்தோடி
இரத்த அணுக்களின்
எண்ணிக்கையும் பெருகிப் போகிறது...

நாளை உனக்குப் பிரசவமென்று
காலை வந்த செய்தியை
இப்போதுதான் பார்க்கிறேன்..

காலையில் போர்முனை செல்லுமுன்
பிறந்தது மேஜர் இளவரசனா
அல்லது மேஜர் இளவரசியா ? என்று.
நாளை வரும் செய்திக்காய்
உறக்கமின்றிக் காத்திருப்பேன்
மீண்டும் மீண்டும் மனதில்
அதை நினைத்தபடி..

என் உயிரின் உயிரே..!
தீ தரப்போகும் தந்தையென்னும்
”மகாச் சக்கரா” விருதை
நெஞ்சில் ஏந்திக்கொள்ளப் போகும்
அந்தத் தருணத்தை நினைத்தபடி
காத்திருப்பேன்.
மணித்துளிகளோடு கரைந்துருகியபடி...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (15-Nov-15, 11:41 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 212

மேலே