உரிமைகள் பறிக்கப்படும்

விடிகிற பொழுததன் கிழக்கென இருப்பதை
==விரும்பியே வைகறை எழு.
படிக்கிற எவருமே பயன்பெறு வகையொரு
==புத்தக மாகவே இரு
அடிக்கிற வெயிலினை தகர்த்திட நிழலெனும்
==அரண்மர வேரினை விடு.
துடிக்கிற எளியவர் கண்ணீர்த் துளிகளைத்
==துடைத்திட உயிரையும் கொடு

உடுக்குற துணிக்கென அம்மணம் தரிப்பவர்
==உடையென இருந்திடத் துணி
படுத்திட நிலமதும் அற்றவர் வறுமையில்
==பாயென உன்மனம் விரி.
அடுத்தவன் பொருள்மேல் ஆசை வளர்ப்பதை
==அடிமனம் விட்டு அழி.
எடுத்திடும் மனிதரின் வரிசையில் இருப்பதை
==இழிவென தினசரி நினை.

அடித்திடும் காற்றினை எதிர்த்திடும் திசையென
==அமைந்திடும் வாழ்வொரு புதிர்
இடித்திடும் இடியினைத் தாங்கிடும் மரமென
==இருந்திட துடிக்கணும் உயிர்
நடித்திடும் அரசியல் நாடக மேடையில்
==நடப்பதைக் கூடநீ தவிர்
வெடித்திடும் புரட்சியில் விளைந்திடும் வளர்ச்சியில்
==விளையணும் அறிவெனும் பயிர்

பறவையின் சுதந்திர சிறகுகள் விரிந்திடும்
==பரவசம் மனதினில் அடை
பிறவியில் பயன்மிகு பிறவியாய் பிறந்துமே
== பிரிவினை கொள்வதை உடை
சிறப்புற வாழ்ந்திடும் சிந்தனைத் துளிகளை
==சிந்திட உனக்கிலை தடை
இறப்பிலும் இருக்கணும் இருக்கிற நாட்களில்
==இனிதென நீசெயும் கொடை

சுடர்விடும் விளக்கினிற் திரியென இருப்பது
==சுகமெனக் கருதப் படும்
கடமையில் உயிரினை கலந்திடும் பொழுதினில்
==கடவுளாய் நினைக்கப் படும்
மடமையில் புதைவதில் மகிழ்வினைக் கொள்கிற
==மனமது ஜடமெனப் படும்
உடமையைத் தொலைத்ததாய் உணர்வினைத் தொலைப்பதால்
==உரிமைகள் பறிக்கப் படும்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Nov-15, 1:58 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 72

மேலே