மீண்டும் மீண்டும் - ஹியாக்ஸ் போட்டிக் கவிதை

நேர்த்தியாக மாலைகள்
தொடுத்து...

புகை மூட்டங்கள் நடுவே
நவீனக் குலவைச் சத்தங்களோடு
துள்ளிசை நடனமாடிக்
குதூகலித்து....

வரிசையெனச் சொல்லப்பட்ட
குழுமங்களினூடாக
நான்குபேர் தோளேறிச் சென்று
வாகைசூடி....

நாற்பதடி உயரத்தில்
திருக்குட முழுக்காற்றி
இறங்கும் பொழுதில்தான்..

மூங்கில் சேனாதிபதி
இடது மணிக்கட்டுச்சதை
கிழித்தும் விட்டார்....!

கசிந்த குருதியை
படிமக்காகித சக்கரவர்த்திக்குச்
சமர்ப்பித்து அறைகூவ...

இன்னும் பெருகி வழிந்ததை
தேநீர்த்தூள் அடைத்துக்
காத்தார்கள் ஏனைய
வீரர்கள்....

இரண்டரை நாழிகைக்
கொண்டாட்டங்களுக்குப் பிறகு..
டிக்கெட்டை வீசியபடி...

'கெத்து காட்டிட்டோம்ல
மச்சி" என்று முனகியபடி அவன்
சொல்லிப் போனதைத்தவிர...

வேறு எந்த
அசம்பாவிதங்களுமின்றி
எல்லாம் சுபமாகவே நிகழ்ந்து
முடிந்திருந்தது....

எழுதியவர் : கட்டாரி (சரவணா ) (16-Nov-15, 6:48 am)
பார்வை : 67

மேலே