உரிமைகள் பறிக்கப்படும்
எரித்தழலிருந்து...
காலையில் கண் விழிக்கையில்
கடைசி விழிப்பென்று அறியவில்லை
என் உழைப்புத் தீயில் எரியும்போது
உயிரின் நினைவு சற்றும் இல்லை
வறுமையோடு போராடும் எனக்கு
தீயோடு போராட அச்சமில்லை
பணிகிறேன் நெருப்பிடம்
என் பிள்ளையின் படிப்பு
என்னொடு கருகுமென்று
மடியேந்துகிறேன் தீயிடம்
என் மகளை மணமகளாக
காண வேண்டுமென்று
பிச்சைக் கேட்கிறேன் அனலிடம்
என் முகத்தையாவது-என் மனைவி
பார்க்கட்டும் என்று
உயிருள்ள மனிதருக்கே
எங்கள் உயிர் பெரிதாக தெரியவில்லை
உயிரற்ற உன்னிடம்
நான் உஷ்ணத்தை தவிர
என்ன எதிர்பார்க்க முடியும்?
அடகு வைத்த உழைப்புக்கு
வட்டியாக எந்தன் உயிரா?
ஏலம் விடும் என்னுயிரை
எமனால் மட்டுமே பெறமுடியும்...
ஏழையை ஏளனமாய் எண்ணும் எசமானரே!
எங்கள் சாம்பலை அள்ளி
மருந்தாக வையுங்கள்,
என் மனைவியின் மஞ்சள் கயிறை
திரியாக செய்யுங்கள்,
என் பிள்ளையின் சதையை அறுத்து
காகிதமாய் சுற்றுங்கள்,
சாட்சிகளை சாதகமாக்கி
தீக்குச்சியாய் பற்ற வையுங்கள்...
எந்தன் உணர்வுகள் வெடித்து சிதறும்
உண்மை புகையாக மறையும்
மரண பயத்தோடு பட்டாசுகள் இசைக்கும்
நஷ்டத்தை ஈடு செய்ய
நீ நடமாடும் இடமெல்லாம்
பசைகள் ஒட்டும்
அவை பசைகளல்ல
தீ தின்ற என் தோல்களின் மிச்சமீதிகள்
எரியும் எந்தன் இதயம் கூட
உனக்கு மத்தாப்பு தானே...
இனி
அரை வயிற்று கஞ்சுக்கு
அல்லல்படும் எம்மக்களுக்கு
ஆறுதல் சொல்ல ஆளில்லை
அடிப்படை வசதிக்கும்
அன்றாட பிழைப்புக்கும்
அவதிப்படும் எங்களின்
உயிருக்கு உத்தரவாதமில்லை
உத்தரவாதம் கேட்க உரிமையில்லை
தொழிலாளி உயிரை துச்சமாய் எண்ணும்
தொழிற்சாலை உரிமம் பறிக்கப்படும் வரை
எங்களின் உரிமைகளும் பறிக்கப்படும்...