கடிதம்

அன்பீர் வணக்கம் ! அன்புடன் நீவீர்
அனுப்பிய மடல்கண்டு அகமகிழ் வுற்றே
இன்புடன் எற்றேன் ! எழுதிய செய்தி
கண்டேன் ! படித்தேன் ! களிமிகக் கொண்டேன் !
ஈரோடை யெனும் எழில்நகர் இருந்து
‘பா’ வாடைதனைப் பாரினர் நுகர
பாவலர் தம்மைப் பாங்குடன் கூட்டி
‘பா’வளர் வழியை படைத்திடும் தூயோய் !
நீவீர் இந்த நீள்நிலம் தன்னில்
நெடிது வாழ்ந்து நூல்பலப் படைத்து
கடித்து முயன்று காரியம் ஆற்ற
வல்லாய் ! நல்லோய் ! வாழ்ந்திடும் அன்னை
நல்லான் தமிழ்மேல் நாட்டியப் பற்றால்
செல்வம் இழப்பினும் சிறப்பினை எண்ணி
வள்ளக் கிடக்கையில் ஊறிய வேட்கை
தள்ள, முனைந்து தமிழ்மொழி வளர
மு.வ. என்னும் மூதறி வாளன்
பேரினைப் பாக்கள் கூறிடச் செய்யும்
படையலை துணிந்து படைத்திடு கின்றாய் !
வுன்றன் பணியில் வுலகுள வரையில்
நின்றுப் பொலிவும் நின்புகழ்ப் பாடும் !
மரியின் மேலே மனதினைக் கொடுத்து
விரியும் விசுவா சத்தினைப் பதித்து
பேரினைக் கொண்ட பெரியநின் நெஞ்சில்
ஓரிடம் வேண்டி உள்ளமும் ஏங்கி
நும்திசை நின்று இம்மடல் தீட்டி
நின்றிடு கின்றேன் ! நின்னினை வோடே !
என்பா தன்னில் இயற்றிட மாற்றம்
அன்பாய் ஒப்பம் அளித்துடு கின்றேன் !
பெண்பாற் புலவர் படையிலை அனுப்ப
இங்கே எவரும் இல்லை என்னும்
தகவலை யானும் தந்திடு கின்றேன் !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (16-Nov-15, 8:31 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 793

மேலே