அரும்புகள் அரும்புகள் போட்டிக் கவிதை

அரும்புகள் அரும்புகள்
சின்ன அரும்புகள்
நாளை இந்தநாடு
பேசும் கரும்புகள்.

அப்துல் கலாம்கூட
அதில் இருக்கலாம்
ஐன்ஸ்டீன் என்ற விஞ்ஞானி
ஒளிந்து இருக்கலாம்
எங்கல்சும் மார்க்ஷும்
இனி வளர்ந்து வரலாம்

அரும்புகள் அரும்புகள்
சின்ன அரும்புகள்
நாளை இந்த நாட்டை
ஆளும் கரும்புகள்

முன்னர் ஆண்ட மூவேந்தர்
ஒளிந்திருக்கும் அரும்புகள்
பார்போற்றும் பெரும் புலவர்
எவரோயிந்த அரும்புகள்

ஈரோடு தமிழன்பன்
ஒரு அரும்பு
எட்டய புரத்தானும்
ஒரு அரும்பு
வார்த்தையிலே ஜாலம் செய்யும்
வள்ளுவன் ஒரு அரும்பு
கட்டுத் தறியை கவிபாட வைத்த
கம்பனும் ஒரு அரும்பு

அரும்புகள் அரும்புகள்
சின்ன அரும்புகள்
நாளை இந்த நாட்டின்
கவிதை கரும்புகள்

தோட்டத்து முல்லையிலே
எத்தனை வகைகள்
அத்தனையும் மனம் வீசுதம்மா
ஆனந்தத்தின் எல்லைகள் .

ஜாதி இல்லை மதம் இல்லை
எங்கள் நாட்டிலே
சமத்துவ நீர் குடிப்போம்
எங்கள் கிணற்றிலே .

கறை ஒன்றும் இல்லாத
கமலப் பூக்கள்
நிறை ஒன்றை நோக்கியே
எங்கள் பாதங்கள் .

பாதங்களுக்கு கொலுசு
மாட்டிச் செல்லுங்கள்
உங்கள் பசப்பு வார்த்தைகளை
வெட்டிச் செல்லுங்கள் .

நாங்கள் அரும்புகள்
நயாகரா நீர் வீழ்ச்சித் திவலைகள் .
நச்சு ஒன்றைத் தெளிக்காமல்
எம் பாதையில் நடக்க விடுங்கள்

அரும்புகள் அரும்புகள்
சின்ன அரும்புகள்
சித்திரக் கவிதைபோல
சிங்கார குறும்புகள்.

எழுதியவர் : சுசீந்திரன் (16-Nov-15, 8:45 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 158

மேலே