நதி நீர் இணைப்பா மழை நீர் சேமிப்பா
இவ்வளவு மழை நீர் வீணாக கடலில் கலக்கிறதே! என்று அங்கலாய்க்கிறார்கள் நிறைய பேர். ஆறுகளை இணைத்து விட்டால் இவ்வளவு தண்ணீர் வீணாகாதே என்கிறார்கள் சிலர். எளிய கேள்வி தற்போது அடையாறு, கூவம், பாலாறு, காவிரி, தாமிரபரணி என்று அனைத்து ஆறுகளும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது போக, கடலூர் மாவட்டத்தின் பரவணாறு, கெடிலம் போன்றவை பேரழிவைச் சந்திக்கும் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடுகின்றன.
இப்போது எந்த ஆற்றை எந்த ஆற்றுடன் இணைப்பது? வெள்ளம் போய்க் கொண்டிருக்கும் காவிரி நீரை பாலாற்றில் திருப்பி விடலாமா? அல்லது காவிரியையும் தாமிரபரணியையும் இணைக்கலாமா? நவம்பர் மாதம் அனைத்து ஆறுகளும் வெள்ளத்தில் இருக்கும் போது எப்படி இணைக்க முடியும். நதி நீர் என்பது பெய்யும் மழைக் காலத்தைப் பொறுத்ததே? அது ஓடும் இடத்தைப் பொறுத்தது அல்ல.
ஒரு வருடத்தில் ஆறு பல வடிவங்களை எடுக்கும். கோடைக் காலத்தில் அது வறண்டும், மழைகாலத்தில் அது வெள்ளமாகவும், குளிர்காலத்தில் அது பனிக்கட்டியாகவும் (தமிழ்நாட்டில் இல்லை).
நீர் எப்படி திட, திரவ, வாயு நிலைகளில் தொடர்ந்து மாறுகிறதோ அது போலவே ஆறும் பருவங்களைப் பொறுத்து மாறிக் கொண்டே இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அனைத்து ஆறுகளும் வெள்ளப் பெருக்கோடுதான் இருக்கும்.
எல்லா ஆறுகளும் உபரி நீரோடுதான் இருக்கும். மேலும், இயற்கையாகவே ஆறு என்பது கடலில் கலக்க வேண்டும். அது வீணாகப் போகும் நீர் அல்ல. அதுவே கடலில் மீன் வளத்தை அதிகரிக்கச் செய்யும், மேலும் கடலோரங்களில் வண்டல் மண்ணைச் சேர்க்கும். நமது கேள்வி பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளின் மிகை நீரை இன்னொரு ஆற்றின் மிகை நீரோடு இணைக்க முடியுமா? அது அறிவார்ந்த செயல்தானா?
அப்படியே இணைத்தாலும், அந்த மிகை நீரும் கடலில் சென்றுதானே சேரும். ஒரே வித்தியாசம், காவிரித் தண்ணீர் தாமிரபரணி வழியாக கடலில் கலக்கும். அது போலவே வறண்ட காலங்களில் மிகை நீருக்கு வாய்ப்பே இல்லை? அதனால் நதி நீர் இணைப்பு என்பது சாத்தியமற்றது. இதற்கு மாற்று என்ன?
நம் முன் உள்ள ஒரே வழி மழை நீரைச் சேமிப்பது மட்டும்தான். நம் முன்னோர்கள் அமைத்துக் கொடுத்த ஏரி, குளங்களை தூர் வாரி அதில் நீரைச் சேமித்து மிகை நீரை அடுத்த ஏரிக்கும் பாய்ச்சி, பின் இறுதியாக ஆறுகளில் நீரை சேமித்து எல்லாவற்றிற்கும் கடைசியாக அதி மிகை நீரை கடலில் கலக்கச் செய்வதே நம் முன் உள்ள ஒரே தீர்வு.
நதி நீர் இணைப்பு என்பது மோசடியான நீர் நிர்வாகம். மழை நீர் சேமிப்பு என்பதே தமிழ் நாட்டிற்குத் தேவையான இயல்பான நீர் மேலாண்மை....