காமராஜர் காரில் இருந்து இறங்கும் நேரத்தில் ஒரு மூதாட்டி
முதியோர் ஓய்வூதிய திட்டம்
*******************************************
பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சரான பிறகு கும்பகோணத்துக்கு ஒருமுறை வந்திருந்தார். காமராஜர் காரில் இருந்து இறங்கும் நேரத்தில் ஒரு மூதாட்டி, அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி போலீஸ்காரரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
இந்தச் சண்டையைப் பார்த்து விட்டார் காமராஜர். அவரை அனுமதிக்கும்படி போலீசாரிடம் சொல்ல, அந்த மூதாட்டி காமராஜரை நெருங்கினார். ஐயா, என்னைப்போல் வயசானவங்க தள்ளாத காலத்திலேயும் தலையில் கூடை தூக்கிப் பிழைக்க வேண்டியிருக்கு. எங்களுக்கு ஏதாவது செய்யணும் என்றார். ஆகட்டும் பார்க்கலாம் என்ற சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.
சொல்லிவிட்டு நகர்ந்தாரே தவிர, அந்த மூதாட்டி சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் வந்து மோதின. கார் புறப்பட்டது. காரில் இருந்த அதிகாரிகளிடம் இந்த ஏழை மூதாட்டிகளுக்கு மாதம் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்? என்று விசாரித்தார்.
யோசித்த அதிகாரிகள் முதியோர்களுக்கு மாதந்தோறும் இருபது ரூபாய் செலவுக்கு தேவைப்படும் என்றனர். சென்னை வந்து சேர்ந்ததும் மாநிலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் எத்தனை பேர் எனக் கணக்கு எடுக்க உத்தரவிட்டார்.
அந்த பட்டியல் கைக்கு வந்ததும், ஏழை-எளிய முதியோர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். உடனடியாக முதியோர் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.