வெள்ள சேதத்துக்கு மக்களின் சுயநலமே காரணம் ஒரு ஆதார ரிப்போர்ட்

வெள்ள சேதத்துக்கு மக்களின் சுயநலமே காரணம்!: ஒரு ஆதார ரிப்போர்ட்
· Posted on : Fri, Nov 20th 2015

இந்த அடை மழை, வெள்ள பாதிப்பை அத்தனை எளிதாக மக்கள் மறக்க முடியாது. அத்தனை துயர். இதற்கு முக்கியக் காரணம், நீர் நிலைகளை தூர்வாராது மற்றும் தூர் வாரியதை சரியாக செய்யாதது என்று அரசு மீது பரவலாக குற்றச்சாட்டு வைக்கிறார்கள் மக்கள்.

ஆனால் நீர் நிலைகளை தூர்வாரும் முக்கிய பணிக்கு மக்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்?

இதற்கு ஒரு துளி உதாரணம் தஞ்சையில் உள்ள சாமந்தான் குளம். பாண்டிய மன்னனான முதலாம் மாறவர்மன் ஸ்ரீ வல்லபன் (கி பி 1308-1344) என்ற மன்னனின் சாமந்த நாயகராக இருந்தவர் நாராயணன் எனும் தொண்டைமான. இவர் “தஞ்சையில் சமாந்த நாராயணன் சதுர்வேதி மங்களம் எனும் அகரத்தை தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூரில் ஏற்படுத்தினார்” என்பதை பெரியக்கோவிலில் உள்ள அதிர்ஷடான கல்வெட்டு தொடக்கத்திலே கூறுகிறது. இது தற்போதைய தஞ்சையில் உள்ள கொண்டிராஜபாளையம் பகுதியாகும்.

இந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சாமந்த நாராயண விண்ணகரம் என்றும், அந்த பகுதியில் இருந்த குளத்திற்கு சாமந்த நாராயணன் குளம் என்றும் பெயர். சாமந்த நாராயணன் குளம் என்ற பெயர் மருவி சாமந்தான் குளம் ஆயிற்று.

நிலத்தடி நீரை சேமிக்க வெட்டப்பட்ட இந்த குளத்திற்கு சிவகங்கை பூங்காவில் உள்ள சிவகங்கை குளத்தில் இருந்து பூமிக்கு அடியில் சுடுமணலால் அமைக்கப்பட்ட குழாய் முலமாக நீர் வந்து கொண்டு இருந்தது. அந்தக் காலத்திலேயே இவ்வளவு சிறப்பாக நீர்மேலாண்மையை கடைபிடித்திருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

ஆனால் தற்பொழுது அந்த நீர்வழி பாதை ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் மக்களுக்கான நீராதாரமாகவும், மழை நீர் சேமிப்பு கிடங்காகவும் காலம் காலமாக விளங்கிய இந்த குளம் காலப்போக்கில் மக்களின் அசிரத்தையால் தூர்ந்து போய்விட்டது.

தஞ்சை பகுதயில் உள்ள தூர்ந்துபோன நீர்நிலைகளை தூர் வாரும் பணியை செய்துவரும் கணேஷ் அன்பு தலைமையிலான குழு, இந்த குளத்தையும் தூர்வார முடிவெடுத்தது.

அந்த அனுபவத்தை அவரே சொல்கிறார், கேளுங்கள். நம் மக்களின் அக்கறை புரியும்.

இதோ கணேஷ் அன்பு பேசுகிறார்:

“ சாமந்தான் குளத்தை சீரமைக்கலாம் என்று மாநகராட்சி இடம் அனுமதி வாங்கி சுத்தம் செய்தோம் அப்பொழுது நிகழ்ந்த அனுபவம் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. குளத்துக்கு அருகில் இருப்பவர்கள் எங்களுக்கு
குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை, மேலும் சுத்தம் செய்ய வந்த எங்களை அவர்கள் பார்த்த பார்வையே எகத்தாளமாக இருந்தது. அந்த குளம் சீரமைக்கப் படுவதை அவர்களே விரும்ப வில்லை.

அது மட்டுமல்ல குளத்தின் ஒரு கரையை அடைத்து சிலர் வீடு கட்டி உள்ளார்கள் அந்த இடத்தை அரசு அகற்றிவிடக் கூடாது என்று அங்கே ஒரு கோவிலையும் கட்டி தங்களை பாதுகாத்து கொள்கிறார்கள். தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்றுதான் எங்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் விரட்ட முயற்சித்தார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு தனியார் தொலைகாட்சியில் மாநகராட்சியில் அலட்சியம் ஆக்கிரமிக்கப்படும் குளங்கள் என்று ஒரு செய்தி ஒளிபரப்பானது. இதில் எங்களுக்கு தண்ணீர் தர மறுத்த ஆக்கிரமிப்பு நபர், “குளத்தில் நீர் இருந்தால் நிலத்தடி நீர் பெருகும்” என்று பேட்டி அளித்தார்.

அதாவது, குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது மீட்கவேண்டும் என்கிறார்,.

அதே போல தஞ்சை குழந்தை ஏசு கோவில் எதிரே உள்ள ஈஸ்ச்வர மூர்த்தி குளத்தின் நிலையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, இந்த குளத்தில் கிட்டத்தட்ட ஒருஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து பிரமாண்ட கட்டிடம் கட்டி உள்ளது. குளத்துக்கு நீர் வரும் பாதையை செம்பாரைகளை கொண்டு அடைத்து உள்ளார்கள்,.

இதை பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டல் முதலில் இருக்கும் இடத்தை காப்போம் இழந்ததை மீட்க நினைத்தால் அவர்கள் சிறுபான்மையினர் அமைப்பை வைத்து மிரட்டுவார்கள் அல்லது நீதி மன்றம் வரை சென்று தடை பெறுவார்கள் நம்மால் இருக்கும் இடத்தை கூட காக்க முடியாது என்கிறார்கள், அந்த குளத்துக்கு முன் உள்ள இடத்தில வாகன நிறுத்தும் ஏற்படுத்தி சங்கமும் வைத்திருக்கிறார்கள் காம்ரேடுகள் .

அது மட்டுமல்ல.. இரவில் அங்கே குடித்துவிட்டு பிளாஸ்டிக் டம்ளர்கள் பாட்டில்களை வீசுவதும் நடக்கிறது. குளத்தில் முன் கடை அமைதவர்களோ சாப்பிட பிளாஸ்டிக் தாள்களை எறிவது இப்படி அரசியல்வாதிகளை விட பெரிய பெரிய கொடுமைகளை சாமானியர்கள் செய்கிறோம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்” என்று சொல்கிற கணேஷ் அன்பு கடைசியாக சொல்லும் வார்த்தைகள் இவைதான்:

“அரசை குறை சொல்லும் முன்பு, நமது மக்கள் திருந்த வேண்டும். அப்படி திருந்தினாலே, ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் மனோபாவம் வரும். ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும். மழை வெள்ள சேதம் இருக்காது!”

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (21-Nov-15, 2:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 189

மேலே