என்னுள் ஒருவன்

ஒருவிதமான இனம் புரியாத வேதனை என்னை ஆட்கொண்டிருந்தது. இப்படி எல்லாம் இதற்கு முன்பு இல்லை. இது எல்லாம் கடந்த ஒரு மாதமாக தான். கண்ணாடி முன்பு நின்று மார்ப்பிலுருந்த தையல் வடுவை பார்த்துக்கொண்டிருந்தேன். மணி 3.30 இருக்கும். ஏதோ ஒரு உள்ளுணர்வு என் அம்மாவை எனது அறைக்கு வரவைத்திருக்க வேண்டும்.

"என்ன கண்ணு? துங்கலையா?"

"இல்லமா. மனசு சரியில்ல."

"என்னப்பா? என்னாச்சி?"

"கார்த்தி-யோட அப்பா, அம்மா-வ பாக்கனும் போல இருக்குமா."

"சரிப்பா, காலில போய் பாரு. இப்ப தூங்கு. தண்ணி கொண்டுவரவா?"

"நான் எடுத்துகிறன்மா. நீங்க போய் தூங்குங்க."

"சரிப்பா. நீயும் தூங்கு. கார்த்திய பத்தியே யோசிச்சுட்டு இருகாதப்பா."

"ம்ம்ம்"

--------------------------------------------------------------------------------------------------

கார்த்தி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தேன். நான் பார்க்க வேண்டியது கார்த்தியின் அப்பா, அம்மாவை தான் என்று தோன்றவில்லை. கதவை தட்டியப்படி,

"அம்மா...."

"யாரு? வாப்பா கார்த்தி. எப்படி இருக்க? உள்ள வாப்பா, என்னங்க, கார்த்தி வந்துருக்கான்." என்றபடியே கார்த்தியின் அம்மா என் கையை கெட்டியாக பிடித்து உள்ளே இழுத்து சென்றார்.

"யாரு? கார்த்தியா? வாப்பா, எப்படி இருக்க?" என்றபடி கார்த்தியின் அப்பா வந்தார்.

"நல்லா இருக்கன்ப்பா. நீங்க எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கோம்ப்பா."

"நீங்க ஒண்ணு. நிக்க வச்சிட்டே பேசுவீங்க. உக்காருப்பா கார்த்தி. என்ன சாப்பிடுற?"

"இல்லமா, இப்பதான் சாப்பிட்டு வந்தன்."

"நான் பாயாசம் பண்ணிருக்கன். கொண்டு வரன்."

"பரவாலமா.." என்று முடிப்பதற்குள் அம்மா சமையல் அறைக்கு விரைந்து கொண்டிருந்தார்.

"அப்பறம்ப்பா, அப்பா, அம்மா எல்லாம் நல்ல இருக்காங்களா?"

"நல்லா இருக்கங்காப்பா. உங்களயும் அம்மாவையும் பாக்கனும் போல இருந்தது. அப்புறம், கார்த்தியோட ஃப்ரெண்ட்ஸ பாக்கனும்"

"அப்படியா? இருப்பா, கார்த்தியோட க்லோஸ் ஃப்ரெண்ட் சதிஷ் நம்பர் தரன்...." என்றபடி தனது கைப்பேசியை எடுத்து நம்பர் தேடிக்கொண்டிருந்தார்.

அதற்குள் அம்மா பாயசத்துடன்.... "கார்த்தி, இந்தாப்பா, பாயாசம் சாப்பிடு. அடிக்கடி வாப்பா. உன்ன பாத்தாப்பா தான் சந்தோஷமா இருக்கு."

"கண்டிப்பா வரன்மா".

பாயசத்தை ருசித்துவிட்டு... "அம்மா, பாயாசம் நல்லா இருக்குமா. அம்மா, நான் கார்த்தி ஃப்ரெண்ட்ஸ பாக்கனும் தான் வந்தன். உடனே பாக்கனும். நான் இன்னொரு நாள் பொருமையா வரன். தப்பா எடுத்துக்காதீங்க."

"சரிப்பா, உனக்கு எப்ப டைமிருக்கோ அப்ப வா."

சதிஷ்-ன் கைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு விடைபெற்றேன்.

--------------------------------------------------------------------------------------------------

"ஹலோ சதிஷ், நான் திருவான்மியூர் வந்துட்டன். நீங்க எங்க இருக்கீங்க?"

"வந்துட்டீங்களா? நாங்களும் வந்துட்டோம். எங்க நிக்கிறீங்க?"

"பஸ் ஸ்டாண்ட் ஒட்டி ஒரு டீ கடைல நிக்கிறன். ரெட் கலர் டி-ஷர்ட் போட்டிருக்கன்."

"பாத்துட்டன். இதோ வந்துகிட்டு இருக்கோம்." என்றபடி என்னை நோக்கி கையசைத்தபடி வந்துக்கொண்டிருந்தான் சதிஷ்.

"ஹாய், கார்த்தி. நான் தான் சதிஷ். இது கிருஷ்ணா, மதி, ராஜ், நவின்."

ஒவ்வொருவராய் புன்னகையித்தபடி.. "ஹாய்.." ,"ஹாய்.." , "ஹாய்"

"ஹாய். உங்கள எல்லாம் பாத்ததுல சந்தோஷம்."

"எங்களுக்கும் தான். நீங்களும் எங்க கார்த்தி மாதிரியே தான் இருக்கீங்க."

"ம்ம்ம்.. கார்த்தி அம்மா கூட அப்படிதான் சொல்லுவாங்க."

"சரி வாங்க கார்த்தி, சாப்பிட்டுகிட்டே பேசலாம்."

--------------------------------------------------------------------------------------------------

கார்த்தியின் நண்பர்களிடமிருந்து கார்த்தியை பற்றி நிறையவே தெரிந்துக்கொண்டேன். கார்த்தியின் நண்பர்கள் விடைப்பெற்று சென்றப்பின்னும் அங்கேயே தனிமையில் இருந்தேன்.

கார்த்தியின் அப்பா, அம்மா, நண்பர்கள் என அனைவரையும் பார்த்து பேசிவிட்டப்பின்னும் ஏதோ ஒரு இனம் புரியாத கவலை என்னை விடவேயில்லை. கார்த்திக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னிலிருந்து துடிப்பவன் அவனே. எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை, இருந்தும் அந்த கார்த்தியின் இதயம் இந்த கார்த்தியின் உடலில் துடிக்கவேண்டும் என யார் முடிவு செய்தது?

எனது அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாட்டில்கள் இப்பொழுது இல்லை. கார்த்திக்கு குடிப்பது பிடிக்காதாம். கார்த்தி யாரென்று எனக்கு தெரியாது தான், ஆனாலும் யாரோ சொல்லி அவனுக்கு பிடித்தவைகளையும், பிடிக்காதவைகளையும் அறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் உள்ளுணர்வு சொல்கிறது, அவை என்னவென்று.

ரோட்டு கடைகளில் விற்கும் பானிப்பூரி, பீஃப் ஃப்ரைட் ரைஸ், அம்மா செய்யும் பாயாசம், சப்பாத்தி.... அவனுக்கு பிடிக்கும், இப்பொழுது அவை எனக்கும் பிடித்தவை. அவனுக்காக நான் மாறவில்லை. அவன் என்னை மாற்றிவிட்டான். நான் அவனாக மாறிவிட்டேன்.

எல்லாமும் சரியாய் இருக்க, என் மனதில் இருக்கும் இந்த இனம் புரியாத உணர்வு என்னை உறங்கவிடுவதில்லை. மனம் என்னவோ போல் இருந்தது. எனது நெருக்கமான யாருக்கோ ஏதோ நிகழ்ந்ததை போன்ற ஒரு உணர்வு. மனம் தவியாய் தவித்திருந்தது.

"ஹலோ, சதிஷ்."

"சொல்லுங்க கார்த்தி"

"நான் இன்னும் ஹோட்டல தான் இருக்கன். கொஞ்சம் வரமுடியுமா? நான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும். நான் வந்ததே அதுக்கு தான். ஆனா எப்படி கேக்குறதுனு தெரியாமா.... வரீங்களா? நேர்ல டீடைல்லா சொல்றன்."

"சரி, கார்த்தி. பக்கதுல தான் இருக்கோம். வந்துடுறோம்."

--------------------------------------------------------------------------------------------------

"சொல்லுங்க கார்த்தி. ஏன் அமைதியாவே இருக்கீங்க?"

"இல்ல.... நான் ப்ரியா கிட்ட பேசனும். அவங்க அட்ரெஸ், இல்ல போன் நம்பர் தரமுடியுமா?"

"எதுக்கு?"

"நான் அவங்க கிட்ட பேசனும்."

"இல்ல, கார்த்தி. அவங்க நம்பர் எங்க கிட்ட இல்ல."

"அவங்க அட்ரெஸ்?"

"இல்ல, வீடு தெரியும், பட் அட்ரெஸ் தெரியாது."

"என்ன கூப்ட்டு போகமுடியுமா?"

எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்பு, "இல்ல கார்த்தி, ப்ரியா ஏற்கனவே ரொம்ப அப்ஸெட்டா இருக்கறதா கேள்விப்பட்டோம். கார்த்தி டெத்க்கு அப்புறம், ப்ரியா வெளிய கூட வரதில்லனு அவங்க ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. இந்த நேர்த்துல நீங்க அவங்கள பாக்குறது வேணாம்னு நினைக்கிறன். அதுமில்லாம, ஒரு பொண்ணோட டீடைல புதுசா ஒருத்தருக்கு எப்படி தரமுடியும். மன்னிச்சிருங்க. நாங்க கிளம்புறோம்"

நான் பேச வாய் திறக்குமுன்னே அவர்கள் கிளம்பிவிட்டார்கள். அவர்கள் எனக்கு கேட்கும்படியே பேசிக்கொண்டு சென்றார்கள்.

"யாரா இவன். ஒருதன் ஹார்ட் குடுத்து உயிரயே காப்பாத்திருக்கான். அவன் லவ் பண்ண பொண்ணப்பத்தி கேக்குறான். டேய். இந்த மேட்டர ப்ரியா கிட்ட எல்லாம் சொல்லிடாதீங்க. அவளே அப்ஸெட்ட்ல இருக்கா."

--------------------------------------------------------------------------------------------------
சில நாட்களுக்கு பிறகு,

திருவான்மியூர் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். ப்ரியா இப்பொழுதெல்லாம் தனது மாலை நேரங்களை கடற்கரையில் செலவிடுகிறாள் என தெரிந்தது. ப்ரியாவை புகைப்படத்தில் தான் பார்த்திருக்கிறேன்.

மாலை 5 ஆனாது. ஒர், இரு முறை கடற்கரையை சுற்றினால் அவளை கண்டுபிடித்துவிடுவேன் என நினைத்தேன். எழுந்து திரும்பு நேரத்தில் மிக சரியாக ப்ரியா என்னை கடந்துக்கொண்டிருந்தால். அவள் கண்களைப் பார்த்ததுமே, இதயத்தில் ஊசி நுழைந்ததைப் போன்ற ஒரு உணர்வு. அழுது, அழுது அவள் கண்கள் பொலிவிழந்திருப்பது மிக தெளிவாய் தெரிந்திருந்தது.

தன்னை மறந்து சென்று கொண்டிருந்தவள், அவளையே அறியாமல் என்னைப் பார்த்தால். அதே தருணத்தில் நான் பேச ஆரம்பித்தேன்.

"ஹாய். நான் கார்த்தி. உங்க கார்த்தியோட ஹார்ட்-அ எனக்கு தான் வச்சிருக்காங்க. உங்க கிட்ட பேச நிறைய முயற்சி பண்ணன்."

"ஓ. நீங்க தானா? இப்ப எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கன். உங்க கிட்ட பேசனும். பேசலாமா?"

"என்ன விஷயம்?"

"கார்த்திய இன்னும் நினைச்சிட்டு இருக்கீங்களா?"

"உங்களுக்கு என்ன பேசனுமோ அத சீக்கிரமா பேசிடுங்க. சுத்தி வளைகாதிங்க. எதையும் பொருமையா கேக்குற மனநிலைல நான் இல்ல."

"அது தான். அத தான் நானும் பேச வந்தன். உங்க மனநிலை தான் எனக்கு இப்ப பிரச்சன. நீங்க கார்த்திய நினைச்சி நினைச்சி அழறது எனக்கு வலிக்குது. ஐ மீன், உங்க கார்த்தியோட இதயம் வலிக்குது. ஏன்னே புரியாத சோகம் என்னப்போட்டு தாக்குது. கார்த்திய மறந்துடுங்க. இத சொல்ல எனக்கு எந்த உரிமையுமில்ல, ஆனா எனக்கு வேற வழியில்ல. கார்த்திய மறந்துட்டு, உங்க வாழ்க்கைய ஆரம்பிங்க. அப்ப தான் கார்த்தியோட இதயம் அமைதியா இருக்கும். நான் நிம்மதியா இருக்க முடியும்."

"கார்த்திய என்னால மறக்கமுடியாது. நான் மறக்கவும் நினைக்கில." என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே ப்ரியா கண்ணில் நீர் வழிந்திருந்தது. வேறெதுவும் பேசமுடியாமல் ப்ரியா சென்றுவிட்டால்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

--------------------------------------------------------------------------------------------------

நாட்கள் கடந்தது,

என் மனம் ஒருவித அமைதி அடைந்திருப்பதை உணர முடிந்தது.

உழைக்கும் இனமே உலக ஜெயிக்கும் ஒரு நாள்.... கைபேசி இசைத்தது.

"ஹலோ, யாரு?"

"நான் ப்ரியா பேசுறன், கார்த்தியா?"

"ஆமாம். கார்த்திதான். சொல்லுங்க ப்ரியா."

"மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்கு. நெக்ஸ்ட் மன்த் ரெண்டாந்தேதி. நீங்க கண்டிப்பா வரனும்."

"அப்படியா? கங்காராச்சுலேசன்ஸ். கண்டிப்பா வரன்."

"நம்மளால மத்தவங்களுக்கு பிரச்சன வரக்கூடாதுனு கார்த்தி சொல்லுவான். என்கிட்ட கூட ஒரு தடவ தான் ப்ரொபோஸ் பண்ணான். நான் பிடிக்கலனு சொல்லியும் எனக்காக வைட் பண்ணான். என்ன எப்பவுமே தொந்தரவு பண்ணதில்ல. இப்ப அது தான் என்ன தொந்தரவு பண்ணுது. இப்பவும் அவன் விரும்புற விஷயத்த நான் செய்யலனா அவன் மேல எனக்கு இருக்குற லவ்வ வெளிகாட்டமுடியாம போயிரும். அவன் நினைகிற மாதிரியே நான் ஒரு வாழ்க்கைய ஏற்படுத்திக்கிட்டேன். இனி அவன் மனசு கஷ்டப்படாது, நீங்களும் நிம்மதியா இருக்கலாம். நான் இதெல்லாம் உங்க கிட்ட சொல்றதுக்கூட அவனுக்கு கேக்கனும் தான். எல்லாமே அவனுக்காக தான்"
ட்டூ.. ட்டூ.. ட்டூ…

ப்ரியா பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கு இடையிலும் அழுகையை அடக்கியது நன்றாகவே உணர முடிந்தது.

இப்பொழுது வேறுவிதமான ஒரு வலி இருந்தபோதும், ஒரு நிம்மதியும் இருந்தது.

--------------------------------------------------------------------------------------------------

திருவான்மியூர் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். அந்த அலைகளும், உப்பு காற்றும் கார்த்திக்கு பிடிக்கும் போல, என்னால் அங்கிருந்து நகரமுடியவில்லை.

இல்லை, இல்லை.

அத்தனை ஜோடிகளுக்கு இடையில், ப்ரியாவும் அவள் கணவனும் இருப்பதை உணரமுடிகிறது. நான் தேடவில்லை. அதற்கு அவசியமுமில்லை. அங்கிருந்து நான் நகரவுமில்லை. நான் கார்த்தியாகவே இருந்துவிடுவேனோ? தெரியவில்லை.

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (24-Nov-15, 1:25 am)
சேர்த்தது : நிரலன்
பார்வை : 451

மேலே