சப்தத்தின் மெளனம்

மழை வரும் போலிருக்கிறதே என்று யோசித்தபடியே ஜன்னலை நன்றாக திறந்து வைத்தேன். வீட்டில் அமர்ந்து வேலை செய்வதில் இருக்கும் சுகமே தனிதான். ஒய்வாய் இருப்பது போலவும் தோன்றும் வேலை செய்வது போலவும் தோன்றும் ஒரு அற்புதமான காம்போ அது. வருங்காலங்களில் யாரும் அலுவலகம் சென்று வேலை செய்யும் ஒரு செக்கு மாட்டு வாழ்வு இருக்காது என்று யோசிதுக் கொண்டிருந்த போதே

மேசை மீதிருந்த காபியில் ஆவி பறந்து என்னை எடுத்து குடிக்கிறாயா என்று செல்லமாய் மிரட்டிக் கொண்டிருந்தது. சிறு சாரல் மழையும், சூடான காபியும் என்னை சொடக்குப் போட்டு இந்த பூமி விட்டு வேறு கிரகம் நாம் செல்ல வேண்டாமா என்று கேள்வி கேட்க.... பார்த்திக் கொண்டிருந்த வேலையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு... லேப் டாப்பை மூடி வைத்தேன்....

ஏண்டா மழை பெய்ற மாதிரி இருக்கு இப்போ வண்டிய எடுத்துக்கிட்டு எங்க கிளம்பிட்ட பத்தாக் குறைக்கு கேமரா வேற எடுத்துட்டுப் போற....?

வாசலில் நின்று அன்பைக் கண்டிப்பாய் மாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்த அம்மாவைப் பார்துப் புன்னகைத்தபடியே...மழை பெய்யப் போகுதும்மா அதான் கிளம்புறேன் என்று நான் சொன்னதைக் கேட்டு தலையிலடித்தபடியே சரி போறதுதான் போற தலையை கவர் பண்ணிக்கபா என்று சொன்னபடியே அம்மா உள்ளே சென்று விட்டாள்...

நான் கவனமாய் கேமராவை பாலித்தின் கவரில் சுற்றி பத்திரப்படுத்திக் கொண்டேன், தலைக்குத்தான் ஹெல்மெட் இருக்கிறதே...

குளிர்ந்த காற்றோடு சேர்ந்து சில்லென்ன மழைத்துளிகளை முகத்தில் தெளித்துக் கொண்டிருந்தது வானம். மப்பும் மந்தாரமுமாய் அலைந்த மேகங்களை கலைத்து கலைத்து விளையாடிக் கொண்டிருந்த காற்று இஷ்டத்திற்கு என் முடியை கலைக்க முடியாமல் பொய்யாய் கோபித்துக் கொள்ளும் காதலியைப் போல பட்டும் பாடாமலும் ஹெல்மட்டுக்கு நடுவே கொஞ்சமாய் தெரிந்த என் முகத்தை தடவிச் சென்று கொண்டிருந்தது. கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன். நகரத்தின் நெரிசல் மெல்ல வழுக்கிப் பின் சென்று விட போக்கு வரத்து நெரிசலில்லாத சென்னையின் ஒரு புறநகர்ப்பகுதியில் உறுமியபடி விரைந்து கொண்டிருந்தது என் இருசக்கர வாகனம்.

தூரத்தில் ஆள் அரவமில்லாத கிட்டத்தட்ட கைவிடப்பட நிலையில் இருந்த அந்த பேருந்து நிலையம் என்னை என்னவோ செய்தது தெரிந்து தன்னிச்சையாய் என் வாகனம் அந்த பேருந்து நிலையம் நோக்கி வழுக்க ஆரம்பித்தது. புதியாய் கட்டியும் கட்டப்படாமலும் ஓ..வென்று திறந்த வெளியில் பரந்து கிடந்த அந்த பேருந்து நிலையத்திற்குள் அவ்வப்போது புறநகர் பேருந்துகள் வந்து சென்ற தடம் தெரிந்தது. அமானுஷ்யமாய் தெரிந்த அந்த கட்டிடத்தின் ஒரு ஓரமாய் யாரோ ஒருவர் லுங்கி உடுத்தியபடி எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தார். ஏதாவது அவரிடம் சென்று பேசலமா என்று யோசித்தபடியே வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தி ஸ்டாண்ட் போட்டேன்.

அவர் ஏன் அங்கே அமர்ந்திருக்கிறார்? பயணியைப் போலவும் தெரியவில்லை அந்த ஏரியாவாசியாகவும் தெரியவில்லை. ஒருவேளை என்னைப் போலவே மழைச் சூழலை அனுபவிக்க அமர்ந்திர்க்கும் இன்னொரு ஏகாந்த வாசியா? மெல்ல அவரிடம் சென்றேன் காலை மடக்கி கொண்டு யாரடா நீ கற்பனைக் கிரகத்துக்குள் வந்த வேற்றுக் கிரகவாசி என்பது போல பார்த்தார்....எனக்கு அந்த தனிமையும் சூழலும் உள்ளுக்குள் ஏதோ செய்ய, மெல்ல என் கேமராவை எடுத்து பிரிக்க ஆரம்பித்தேன். ஆளில்லாத இந்த பேருந்து நிலையத்திற்குள் அதிரடியாய் வந்து ஏதோ ஒன்றை எடுக்கிறானே என்ற மில்லியன் டாலர் கேள்வி அவர் முகத்தில் கேள்வியாய் மாறி நெற்றிச் சுருக்கமாய் விழுந்தது....

கேமராவை பார்த்தவுடன் பளீச் சென்று கரை படித்த பற்கள் மூலம் தன் வெள்ளந்தியான மனதை மெல்ல மெல்லத் திறந்தார் அந்த நடுத்தரவயது மனிதர். தன்னைத் தானே புகைப்படத்தில், கண்ணாடியில் பார்த்துக் கொள்வது மனிதர்களுக்கு அத்தனை ப்ரியமான விசயம். எங்கோ யாரோ ஏதோ ஒரு கூட்டத்தில் புகைப்படம் எடுத்தாலும் மீண்டும் அந்த புகைப்படத்தை நாம் பார்ப்போமா இல்லையா என்பது உறுதியாய் தெரியாவிட்டாலும் கூட தங்களை சரி செய்து கொண்டு ஆர்வமாய் கேமராவைப் பார்ப்பதெப்படி? எப்படி நிகழ்கிறது இந்த ஆச்சர்யம் என்று நான் பலமுறை யோசித்ததுண்டு...

கொஞ்சம் உங்களை போட்டோ எடுத்துக்கலாமா என்ற என் மிக மிருதுவான அறிமுகத்தை மலர்ச்சியாய் ஏற்றுக் கொண்டு சிரித்தபடியே போஸ் கொடுத்த அவரை க்ளிக்கி விட்டு டிஜிட்டல் இமேஜை அவரிடம் காட்டிய போது சந்தோஷமாய் அதைப் பார்த்து சிரித்தார். மழைக்கு ஒதுங்க வந்தவன் யாரென்றே அறியாத மனிதனைப் புகைப்படம் பிடிக்கிறானே என்று யோசித்திருக்காலாம் இல்லையேல் திருத்தமாய் தன்னை முதன் முதலாய் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கலாம் இது இரண்டுமே இல்லையென்றாலும் கூட சட்டென்று தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ஏற்று மகிழ்ந்திருக்கலாம். மனித மனம் ஏங்குவதெல்லாம் இரண்டே இரண்டு விசயத்துக்கு மட்டுதான், அதுதான் எல்லா மனிதத்தேவைகளின் அடிப்படையாயும் இருக்கிறது. அன்பு, அனுசரனை இந்த இரண்டையும் தேடித்தான் மனிதன் தனக்குத் தெரிந்த எல்லா வழிகளுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறான். முழுமையான அன்பும் அனுசரனையும் கிடைத்தவனுக்குத் தெரியும் இந்த உலகில் வேறொன்றும் முக்கியமில்லை என்று....

நன்றி சொல்லி விட்டு மழைச்சாரலை வாங்கியபடியே என் பைக்கில் வந்து அமர்ந்தேன்.

என் முன் நெற்றியில் விழு மழையே...
கன்னத்தி தவழ்ந்து....
என் உதடுகளை முத்தமிடு....
கண்ணீரை மட்டுமே உற்பத்தி செய்யும்
என் விழிகளுக்குள்
சந்தோஷத்தின் திரவமாய் நீ இறங்கு
என் கண்ணீரினைச் சுத்தம் செய்...
கன்னம் கழுத்து வழியே சென்று
உடலைத் தழுவு...
என் ஆருயிர் மழையே
இவ்வுலகிலகின் பேருயிர் மழையே..
வா....கரைந்து போக நான் தயார்...
என்னை காதல் செய்ய நீ தயாரா...?

ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தேன். ஹெல்மெட் இல்லாத என் தலையை பொய்க்கோபம் கலைந்த காதலியாய் தொட்டு நனைக்க... வானிலிருந்து விழுந்து கொண்டிருந்தன கோடி மழைத்துளிகள்.

அப்போதுதான் கவனித்தேன் யாரோ ஒருவர் கவனத்தோடோ அல்லது கவனமில்லாமலோ கொட்டிச் சென்றிருந்த சோற்றுக் குவியலை. யாருமில்லாத இந்த பேருந்து நிலையத்தில் சிதறிக்கிடக்கும் இந்த சோற்றுப் பருக்கைகளை யார் படைத்தது..? யாருக்கு படைத்தது....? என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உனக்கான ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் உன் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்ற திருக்குரானின் ஆயத்தொன்று என் நெஞ்சிலிருந்து எழும்பி செவியோரம் கிசுகிசுத்தபடியே காற்றில் சென்று கரைந்து கொண்டிருந்தது.

இந்தச் சோற்றுப் பருக்கையில் யார் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று யோசித்தபடியே கன்னத்திற்கு கையைக் கொடுத்து தாங்கிப் பிடித்தப்படி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பட்டும் படாமல் தூர நின்று பார்ப்பதுதான் வேடிக்கை. வேடிக்கப் பார்ப்பது என்பது ஈடுபடுதல் கிடையாது. அதே நேரத்தில் தொடர்பறுத்துக் கொள்ளுதலும் கிடையாது. ஈடுபட்டுக் கொண்டே வெறுமனே இருத்தல். எங்கிருந்தோ சாரையாய் ஏற்கெனவே மொய்த்துக் கொண்டிருந்த அந்த எறும்புகளின் பெயர்தான் இந்த சோற்றில் எழுதபட்டிருக்கிறதோ, அவற்றின் பெயர் எழுதி இருப்பதால்தான் யாரோ ஒருவர் கொண்டு வந்து இங்கே இறைத்துச் சென்றிருக்க வெண்டுமோ என்று என் ஆன்மீக புத்தி வேகமாய் உள்நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே....

எங்கிருந்தோ வந்த ஒரு தெரு நாய் ஒன்று வேக வேகமாய் அந்த எறும்புகளைப் பற்றிய எந்த கவனமுமின்றி அந்த் சோற்றினை உண்ண ஆரம்பித்தது. பசிதான் இந்த பிரபஞ்சத்தில் பிரதானம். பசித்திருக்கும் போது எந்த ரசனையும் மனித மூளையில் ஏறாது....அப்படித்தானே விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் தாவரங்களுக்கும் இருக்கும். உயிர்களின் அடிப்படை தேவை உயிர்வாழ்தல். இந்த நாயின் பேரும் பல பருக்கைகளில் எழுதப்பட்டிருக்குமோ என்ற யோசனையோடு வேகமாய் உணவருந்தும் அந்த நாயை என் கேமராவிற்குள் கொண்டு வர முயற்சி செய்தேன். நாயை எடுக்கிறேன் பேர்வழி என்று நான் எடுக்க முயன்றதெல்லாம் அந்த ஜீவராசியின் பசியை, திடீரென்று கிடைத்த உணவு எந்த நிமிடமும் பறிபோகலாம் என்று அதற்குள் இருந்த பதட்டத்தை, சந்தோஷத்தை, பயத்தை.....இப்படியாய் ஒரு புகைப்படமென்பது எனக்கு வெறுமனே ஏதேதோ பிம்பங்களை மட்டும் பதிவு செய்து கொள்ளும் ஒரு யுத்தியே அல்ல....

நான் புகைப்படங்கள் மூலமாய் என்னைச் சுற்றி நிகழும் வாழ்க்கையை, உணர்வுகளை, விவரிக்க முடியாத கனவுகளை பதிவு செய்யவே முயன்று கொண்டிருக்கிறேன். எனக்குள் நானே பேசிக் கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றது அந்த நாய்க்கு தொந்தரவாய் இருந்திருக்க கூடுமென்று நினைக்கிறேன் அதன் உணவருந்தும் வேகம் தடைப்பட பட்டென்று பதறி கொஞ்சம் தூரமாய் சென்றமர்ந்து அதைத் தொந்திரவு செய்யாத படிக்கு அமர்ந்து கொண்டு கிளிக்கிக் கொண்டிருந்த போது....

சலனமில்லாத குளத்தில் தூக்கி எறியப்பட்ட கல்லாய், பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும் போதே நறுக்கென்று கையில் குத்தும் முள்ளாய், சாந்தமான பின்னிரவின் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது உறக்கம் கலைக்கும் பெரும் அலறலாய் வந்தான் ஒருவன் கையில் இருந்த பாலித்தின் பாக்கெட்டிலிருந்து எதையொ எடுத்து கொறித்தபடியே... அந்த நாயின் அருகே வந்து ச்ச்ச்சூ....ச்ச்ச்சுச்ச்சூ என்று அதட்டி அந்த நாயை விரட்டினான் அந்த மனிதன்...

பயத்தோடு வாலை சுருட்டியபடி பின்வாங்கிக் கொண்டிருந்த அந்த நாயைப் பார்க்க எனக்கு என்னவொ போல இருந்தது....

இந்த பூமி எல்லா ஜீவராசிகளுகும் பொது என்று மனிதன் ஒரு பொதும் நினைப்பதில்லை. தான் வாழ மட்டுமே இந்த பூமி என்ற மனோபாவத்தில் அவன் செய்யும் அடாவடியும் அட்டூழியங்களும் மீண்டும் முரண்பட்ட வாழ்க்கையாய் அவன் மீதே வந்து படிகிறது. மரத்தை வெட்டினான், மழை முரண்டு பிடித்தது, இயற்கை வாழ்க்கைக்கு எதிராய் திரும்பினான் நோய்கள் அவனைச் சூழ்ந்து கொண்டது....

கால்மேல் கால் போட்டு தான் கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனியை எந்தக் கவலையுமின்றி அவன் தின்று கொண்டிருக்க...

என்னைப் போலவே கொஞ்சம் தூரத்தில் போய் அமர்ந்து கொண்ட நாயும் என்னோடு சேர்ந்து அவனை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியது...

எப்போது போவான் என்று நானும் நாயும் வேடிக்கப்பார்த்துக் கொண்டிருந்த போதே.... அடித்துப் பெய்ய ஆரம்பித்திருந்த மழையில் கரையத் தொடங்கி இருந்தன அந்த சோற்று பருக்கைகள்...

கேமராவை பாலித்தின் கவருக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்திக் கொண்டு வண்டியை உதைத்து கிளப்பினேன் நான்.....ஆக்ஸிலேட்டரை முறுக்கி கொஞ்ச தூரம் நகர்ந்து திரும்பிப் பார்த்தேன்...

அந்த மனிதனையும் காணவில்லை, நாயையும் காணவில்லை, அங்கே சிதறிக் கிடந்த சோற்றுப் பருக்கைகளையும் மழை மண்ணோடு கரைத்துவிட்டிருந்தது.....


நான் விடு திரும்பிக் கொண்டிருந்தேன்...




தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா... (23-Nov-15, 4:35 pm)
பார்வை : 261

மேலே