வீனஸ்
இருக்கின்றன ஆயினும் இல்லை
இரு கரங்கள் அவளுக்கு;
இருக்கின்றாள் ஆனால் மரணித்து
இருப்பதோ கண்ணாடிப் பேழையில்;
இறுகி, உறைந்து, ஏனிப்படி
இருக்கிறோம் என்பதைத் தன்னுடன்
இருப்பவர்க்கும் அவள் சொல்லாமல்.
ஆடிக் கொண்டிருக்கும் இந்தப் பண்
பாடெனும் ஆடையை அவளது
கல்லாகிப் போன அதரங்கள்
மடித்து அழுத்தி இறுக்கி மூடியபடி
பிடித்துக் கொண்டிருக்கிறாள்
சிரமத்துடன்.வார்த்தையில்
வடித்திட தெரியாத அவள்
.
இந்தக் காலத்திலும் கூட
அந்தக் கரமொடிந்த வீனஸாக
முற்காலத்துப் பெண் போலவே
சிலையாகக் செம்மிய கதறலை
காதுகள் கிழிந்திட கதறும்போது
அவளது காலடியில் சிதறிய வானம்
சில்லு சில்லாக உடைந்து
நல்லரும் உள்ளரோ நாட்டினினில்
என்ற பழைய கேள்வியை
எழுப்பிச் செல்கிறது எப்பக்கமும்!