மழை என்னும் பிழை
தமிழில் குளிரும் சொல்
மழை!
விண்ணிலிருந்து
விழும் ஈட்டி
வானத்தையும் பூமியையும்
கட்டப்பார்க்கும்
நீர் நூல்.
மின்னல் கத்தி வெட்டியதில்
மேகப்பழத்தில் வடியும் சாறு
நிலமகள் குளத்தொப்புளில்
சில்லிடத்தெரிக்கும் பன்னீர்
நதியிதழ்களுக்காய் வழியும் தேன்
தாவரத் தாகம்தீர்க்க
வானம்கொடுத்த இளநீர்
விண்மரத்தில் வடியும்கள்
பருவகாலத்து நீர்ச்சாலை
கொட்டும் மொட்டு
குதிக்கும் நீரீசல்
நிலப்பாறையில்
விழுந்து உடையும்
மேகக்குருவி இட்ட
நீர்முட்டை
ரசிக்கும் கண்ணுக்கு விருந்து
ருசிக்கும் நாவுக்கும் மருந்து
நனையும் மேனிக்குள் ரகசிய மின்னல்
ஆனால்
ஓட்டைக் குடிசைக்காரனுக்கு
நீர்வெடி....
நடைபாதை பூக்களுக்கு
உறக்கம் கெடுக்கும் நீர்க்கொசு
சாலையோரக் கடைக்காரனுக்கு
வானவிசம்
ஒன்னுமில்லாதவனுக்கு
மழை என்னும் பிழை.