உண்மையான குற்றவாளி

உண்மையான குற்றவாளி!

-------------

ஆக்ரா நகரக் கடைவீதியின் ஜன நடமாட்டம் அதிகமாயிருந்தது. உள்நாட்டு மக்களும், வெளிநாட்டிலிருந்து வாணிப விஷயமாக வந்திருந்த வியாபாரிகளும் நிறைந்திருந்தனர்.

திடீரென்று, முத்து விற்பனை செய்யப்படும் கடை ஒன்றினருகில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. காரணம் என்னவென்றால் முத்து வாங்க வந்திருந்த ஒருவனை வெளிநாட்டிலிருந்து வந்த வியாபாரி பிடித்துக் கொண்டு, ""இவன் என்னிடம் அடிமையாக இருந்தான். நான் வெளியூர் சென்ற சமயத்தில் என் பொருள்களை கொள்ளை அடித்து விட்டு ஓடிவிட்டான்.

""இவனை தேடாத இடம் கிடையாது. இன்றுதான் இவன் கிடைத்தான்,'' என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினான்.

பிடிப்பட்டவனோ, ""இவன் சொல்லுவது பொய். நான் இந்த ஊரில் ஒரு பெரிய வியாபாரி. இவன் என்னிடம் அடிமையாக இருந்தான். நான் வெளியூர் சென்ற சமயத்தில் என் பொருள்களை கொள்ளை அடித்துவிட்டு ஓடி விட்டான். இவனைத் தேடாத இடம் கிடையாது. இன்று தான் இவன் கிடைத்தான்,'' என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினான்.

அப்போது அவ்வழியாக சில காவலர்கள் வரவே அவர்களிடம் இந்த இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். காவலர்கள் அவர்களை அரசவைக்கு கூட்டிச் சென்று அக்பரின் முன்னால் நிறுத்தினர்.

அவர்கள் வழக்கைக் கேட்ட அக்பருக்கு ஒன்றுமே புரியவில்லை.

""பீர்பல், இவர்களில் யார் சொல்வது உண்மை என்று புரிகிறதா?'' என்றார் அக்பர்.

""அரசே, இவர்களில் யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க நான் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். தியானத்தில் இவர்களில் எவர் உண்மையான குற்றவாளி என்று தெரிந்துவிடும். என் தியானம் முடியும் வரையில் இவர்கள் இருவரும், தரையில் குப்புறப்படுத்துக் கொண்டு கண்களை மூடியபடி இருக்க வேண்டும்,'' என்றார் பீர்பால்.

அக்பர் அவ்வாறே செய்யுமாறு இருவருக்கும் உத்தரவிட, இருவரும் தரையில் குப்புறப்படுத்து கண்களை மூடியவாறு இருந்தனர்.

பீர்பல் நெடுநேரம் தியானம் செய்தார். இவர்களில் உண்மையான குற்றவாளியின் நெஞ்சம் படபடவென்று அடித்தது. பீர்பல், தன்னை தியானத்தின் மூலம் கண்டுபிடித்து விடுவாரோ என்று அஞ்சினான்.

திடீரென்று, ""அந்த அடிமையின் தலையைச் சீவிவிடு,'' என்று காவலர்களை பார்த்துக் கூறினார் பீர்பல்.

உண்மையான குற்றவாளி தன்னைத் தான் சொல்கிறாரோ என்று எண்ணி பதற்றத்துடன் எழுந்தான்.

பீர்பல் அக்பரை நோக்கி, ""இவனே உண்மையான குற்றவாளி. இந்த வெளி நாட்டவரிடம் இவன் அடிமையாக இருந்திருக்கிறான். அவர் ஊரில் இல்லாத சமயத்தில் அவருடைய பொருள்களை அபகரித்துக் கொண்டு நம் நாட்டுக்கு வந்து வேறு பெயரில் பெரிய வியாபாரியைப் போல் வேடமிட்டுத் திரிந்து வருகிறான்,'' என்றார் பீர்பல்.

அக்பர் அவனிடமிருந்த பொருள்களை பறிமுதல் செய்து வெளிநாட்டு வியாபாரிக்கு கொடுத்ததோடல்லாமல், அந்த அடிமைக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் கொடுத்தார். அதே சமயம், பீர்பலையும் பாராட்டி பரிசுகள் கொடுத்தார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (30-Nov-15, 3:07 pm)
பார்வை : 974

மேலே